ஞாயிறு, 29 ஜனவரி, 2023

#1172 - ஒரே சபையில் இருக்காமல் சபை சபையாய் போகிறவர்களுக்கு எப்படி ஆலோசனை சொல்லுவது?

#1172 - *ஒரே சபையில் இருக்காமல் சபை சபையாய் போகிறவர்களுக்கு எப்படி ஆலோசனை சொல்லுவது?* அப்படி போவது தவறு என்பதற்கு வேதத்தில் ஆதார வசனம் இருக்கிறதா?

*பதில்* : இரண்டு கோணங்களில் இதை புரிந்து கொள்வது அவசியம்.

புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவினுடைய சபையை (ரோ. 16:16) குறித்து சுமார் 30க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஒப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரம் பட்டியலிடுகிறேன்: 

1- கிறிஸ்துவின் சரீரம் - எபே. 1:22-23; கொலோ. 1:24
2- கிறிஸ்துவின் மணவாட்டி – வெளிப்படுத்தல் 21:9
3- கர்த்தருடைய ஆலயம் – அப். 20:28
4- ஜீவனுள்ள தேவனுடைய சபை – 1தீமோ. 3:15
5- முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை – எபி. 12:23
6- ஜீவனுள்ள தேவனுடைய நகரம் – எபி. 12:22
7- பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள குடும்பம் – எபி. 3:15
8- தேவனுடைய மந்தை - 1பேதுரு 5:2
9- கிறிஸ்துவின் தொழுவம் – யோவான் 10:16
10- பொன் குத்துவிளக்கு – வெளிப்படுத்தல் 1:20
11- தேவனுடைய மாளிகை (கட்டிடம்) 1கொரி. 3:9
12- தேவனுடைய பண்ணை – 1கொரி. 3:9
13- தேவனுடைய சுதந்திரம் – 1பேதுரு 5:3
14- தேவனுடைய வாசஸ்தலம் – எபி. 2:22
15- பரலோக (மேலான) எருசலேம் – கலா. 4:26; எபி. 12:22
16- பரிசுத்த நகரம் – வெளிப்படுத்தல் 21:2
17- தேவனுடைய வீடு – 1தீமோ. 3:15; எபி. 10:21
18- கிறிஸ்துவின் வீடு – எபி. 3:6
19- தேவனுடைய வீட்டார் – எபி. 2:19
20- தேவனுடைய இஸ்ரவேலர்கள் – கலா. 6:16
21- தேவனுடைய ராஜ்யம் – மத். 6:33; 12:28; 19:24; 21:31
22- பரலோகராஜ்யம் – மத். 3:2; 4:17; 10:7; 5:3; 5:10; 5:19-20
23- அவருடைய ராஜ்யம் – மத். 16:28; லூக்கா 1:33
24- என் (கிறிஸ்து) ராஜ்யம் – யோவான் 18:36

சபைக்கு நிறுவனர் கிறிஸ்து மாத்திரமே !!

ஆனால், இக்காலங்களில் தனக்கு தோன்றியது போல் பல்வேறு கொள்கைகளை உருவாக்கி தானே நிறுவனர் என்று போட்டுக்கொண்டு “சபை என்ற பெயரில்” எண்ணுக்கடங்கா நிறுவனங்கள் பெறுகிவிட்டது.

1- தனது விசுவாச துவக்கக்காலத்தில் ஜனங்கள் ஓரிடத்தில் வளரும்போது - வேதாகமத்தை படிக்க படிக்க, தான் இருப்பது சரியானது அல்ல என்றறிந்து ஒருவேளை மற்ற இடங்களுக்கு சத்தியத்தைத் தேடி போகலாம்.

2- வேதத்தின்படி சரியான முழுமையான முறையான சத்தியத்தை உபதேசிக்கும் இடத்தை விட்டு, எவரும் திருப்தியின்றி வெளியே போகவேண்டிய அவசியமிராது.

3- ஒரு செடியை நட்டு தண்ணீர் ஊற்றி மீண்டும் மறுநாளில் வேறு இடத்தில் நட்டால் செடி செத்துப்போகும். எங்காவது ஓரிடத்தில் உறுதியாய் இருந்தால் மாத்திரமே வேர் பற்றி உறுதியாய் வளரும். தான் வளரும் இடம் உறுதியானதாகவும், நிலையானதாகவும் முறையானதாகவும் இருந்தால் அதில் வேர் பற்றி மரம் செழிப்பாய் வளர்ந்து நல்ல கனிகளை தரும். அதாவது, கிறிஸ்துவை தலையாய் கொண்டு, அவரது உபதேசத்தை மாத்திரம் முழுமையாய் பற்றிக்கொண்டு, அதற்கு மாத்திரமே கீழ்படிந்து முறையாய் வளர்ந்தால் – தேவனுக்கென்று சுகந்த வாசனையாய் கனிகள் வெளியில் வரும்!

4- சரியான ஐக்கியத்தில் உள்ளவர்கள் - உலகமனைத்திலும் எங்கு சென்றாலும், தேவனையே முறையாய் துதிக்கிறார்கள். ஆனால், வாரம் ஒரு கூடுகைக்கும், ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கூடுகையில் கலந்துக்கொள்ள பிரியப்படுபவர்களும் ஒழுங்கற்றவர்கள்.

மேலும், ஊர்களுக்கு புலம் பெயர்ந்து செல்பவர்களைக் குறித்து:
சபை தொடங்கிய காலத்தில், துன்புறுத்தலினால், கிறிஸ்தவர்கள் யூதேயா மற்றும் சமாரியா முழுவதும் சிதறினார்கள் (அப். 8:1).

சிதறினவர்கள் சுயமாக பிரசங்கியாளர்களாக இல்லாவிட்டாலும், தாங்கள் சென்ற இடங்களில், சுவிசேஷத்தைப் போதித்தார்கள் (அப்போஸ்தலர் 8:4).

பவுல், கொரிந்துவில் ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவினிடத்திற்கு சென்றார். அவர்கள் கூடாரம் செய்பவர்கள், அரசாங்கத்தால் ரோமை விட்டு வெளியேறும்படி கட்டளையிடப்பட்டிருந்தனர் (அப்போஸ்தலர் 18:1-3). பின்னர் அவர்களை எபேசுவில் காண்கிறோம். அவர்கள் பவுலுடன் அங்கு பயணம் செய்தனர் (அப்போஸ்தலர் 18:18-19). அங்கே அவர்கள் அப்பொல்லோவைக் கண்டு அவருக்கு சத்தியத்தை போதித்தனர் (அப்போஸ்தலர் 18:24-26). சுமார் ஒரு வருடம் கழித்து, அவர்கள் மீண்டும் ரோமுக்கு வந்துவிட்டார்கள் (ரோமர் 16:3). மேலும், பவுலின் நாட்களின் முடிவில், அவர்கள் மீண்டும் எபேசுக்கு வந்துள்ளனர் (2தீமோத்தேயு 4:19)

கொர்நேலியு, ரோமானிய நூற்றுக்கு அதிபதி (அப்போஸ்தலர் 10:1). தனது அரசாங்கம் எங்கு அனுப்பினாலும் அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.

அப். யாக்கோபு, வணிகத் திட்டங்களைப் பற்றி பேசுகிறார். "மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது." யாக்கோபு 4:13-16.

வியாபாரத்திற்காக பயணம் செய்வது தவறு என்று யாக்கோபு சொல்லவில்லை. தேவனே நம்மை நடத்துகிறார் என்றும் அவரது கட்டுப்பாட்டில் தான் நாம் இருக்கிறோம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

(நியாயசாஸ்திரி) வழக்கறிஞரான சேனாவும் அப்பொல்லோவும் கிரேத்தா தீவு வழியாக பயணிக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யும்படி தீத்துவிடம் கூறப்பட்டது (தீத்து 3:13).

கொரிந்துவைச் சேர்ந்த சகோதரர்களை எபேசுவில் சந்திப்பதைப் பற்றி பவுல் பேசுகிறார் (1கொரிந்தியர் 16:17-18).

வாழ்க்கையின் அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விடுபட ஓய்வு எடுப்பதும் தவறல்ல. "அப்போஸ்தலர்கள் இயேசுவோடு கூடி, தாங்கள் செய்ததையும் போதித்ததையும் அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தனிமையான இடத்திற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள் என்றார். (ஏனென்றால், பலர் வந்து போவார்கள், அவர்களுக்கு உணவு உண்பதற்குக் கூட நேரமில்லாதிருந்திருக்கும்) அவர்கள் படகில் ஏறி தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றார்கள்" என்று மாற்கு 6:30-32 காண்கிறோம்.

சபை முக்கியமானது (மத்தேயு 6:33) மற்றும் சபை கூடுகையை நாம் கைவிடக்கூடாது (எபிரெயர் 10:23-25).

முக்கிய கருத்து என்னவென்றால், ஒரு கிறிஸ்தவர் தனது பிராந்தியத்தில் அல்லது தன்னை வளர்த்த அல்லது தான் வளர்ந்த சபையில் தான் எப்போதும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தவறு.

1பேதுரு 4:9 மற்றும் எபிரெயர் 13:2 இல் உள்ள விருந்தோம்பலை கடைப்பிடிக்க வலியுறுத்துவதென்பது விருந்தினர்களை அதாவது பயணத்திலுள்ள கிறிஸ்தவர்களும் அடங்குவர்.

பவுலின் செய்தியை பேதுரு பாராட்டினார். மற்ற ஊர்களில் கூடும் சபைகளுக்கு நிருபங்களை அனுப்பினர்.

தனது மகன் அல்லது மகள் வளர்ந்து வயது மூப்பு அடையும் போது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

அதுபோல, தங்கள் சபையில் கூடும் ஆத்துமாக்கள் வளர்ந்து கனிகொடுக்கும்படிக்கு ஊழியர்கள் அவர்களை வளர்க்க வேண்டும்.

ஆனால், பரிதாபமாக பல இடங்களில் நான் பார்ப்பதும் இரகசியமாக இராஜதந்திரம் என்று நினைத்து கடைபிடிக்கப்படுவதும் என்னவென்றால் “செய்தி கொடுக்கவோ, ஊழியத்தில் மற்றவர்களை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு இடமளிக்காமல்” தனது மகன் அல்லது மருமகன் அல்லது ஆபத்து இல்லை என்று எவரை அடையாளம் காண்கிறார்களோ அவர்களை மாத்திரம் பயிற்சி கொடுத்து முன்நிற்க வாய்ப்பளித்து தனக்கு வரும் வசூலை பாதுகாத்து, சொந்த நிறுவனத்தை வளர்க்க நினைக்கும் சாமர்த்திய ஊழியர்கள் இக்காலங்களில் பெருகியிருக்கிறார்கள்.

இப்படியாக பயிர்கள் வளர்ந்து கனிகொடுக்காமல் வெதும்பி வெந்து கனியற்ற மரமாக செழித்து வளர்ந்தாலும் அவை யாவும் சுட்டெரிக்கப்படுவதற்கே கடைசியில் உதவும். அந்த ஆத்துமாவிற்கு உத்தரவாதம் அந்த ஊழியரே!!

ஆகவே, போதுமான அளவிற்கு சபையாருக்கு போதனையும், நிறைவானதையும் அளிக்கும் போது – அவர்கள் வேறு எங்கும் போவதற்கு இடமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக