சனி, 3 அக்டோபர், 2026

#1251 - பரலோகத்திற்கு செல்வதற்கு ஊழியக்காரர்களின் அனுமதி இருந்தால் தான் ஆண்டவர் அனுமதிப்பாரா? நம்மை நடத்துகிறவர்கள் யார்? எபி. 13:17ஐ குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து பெரியப்பா என்றால் சபை ஊழியர்கள் சித்தப்பாவாம். சித்தப்பாவை பார்த்தால் தான் பெரியப்பாவை பார்க்க முடியும் என்று போதிக்கிறார்கள். இதைக் குறித்து விளக்கவும்.

#1251 - *பரலோகத்திற்கு செல்வதற்கு ஊழியக்காரர்களின் அனுமதி இருந்தால் தான் ஆண்டவர் அனுமதிப்பாரா? நம்மை நடத்துகிறவர்கள் யார்? எபி. 13:17ஐ குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து பெரியப்பா என்றால் சபை ஊழியர்கள் சித்தப்பாவாம். சித்தப்பாவை பார்த்தால் தான் பெரியப்பாவை பார்க்க முடியும் என்று போதிக்கிறார்கள்*. இதைக் குறித்து விளக்கவும்.



*பதில்* : ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்க ஊழியத்தைக் கையிலெடுத்த சகல கேடும் தான் அடைந்ததுமல்லாமல், தன்னை நம்பி அண்டியிருக்கும் மற்றவர்களையும் குழியில் அமிழ்த்துகிறவர்களின் முட்டாள்தனமான போதனை இவை. 


சத்தியத்தை அறியாதவர்கள் இயேசுவை, 'இயேசப்பா' என்று சப்பாத்தி தட்டிக்கொண்டிருந்தனர். அதையும் கடந்து இப்போது நீங்கள் சொல்லும் இந்த மடமையான புதிய கூட்டம் அவரை 'பெரியப்பா' என அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்கள் சத்தியத்தை முறையாக அறியாதவர்கள் என்பது தெளிவு. 


பரலோகத்திற்குச் செல்ல ஊழியக்காரர்களின் அனுமதி அல்ல, கிறிஸ்துவின் அனுமதி அவசியம். பரலோகத்திற்குச் செல்லும் வழியும் கதவும் "இயேசு கிறிஸ்து மட்டுமே" (யோவான் 14:6). 



நம்முடைய இரட்சிப்பும் பரலோகப் பிரவேசமும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலியினாலும், அவர் மேலுள்ள விசுவாசத்தினாலும், அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பாவமன்னிப்பிற்கென ஞானஸ்நானம் பெற்று, சத்தியத்தில் முடிவு மட்டும் நிலைநிற்கும் பொழுது அந்தப் பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 



"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே கொடுக்கப்பட்ட வேறொரு நாமமும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12). 

ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியைக் காட்டும் வழிகாட்டிகளே தவிர, பரலோகத்தின் கதவைத் திறக்கும் அல்லது பூட்டும் அதிகாரிகள் அல்ல. 



"பெரியப்பா – சித்தப்பா" என்பதெல்லாம் தவறான உவமை; முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது. 
தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரே ஒரு மத்தியஸ்தர் மட்டுமே உண்டு, அவர் "இயேசு கிறிஸ்து" (1 தீமோத்தேயு 2:5). 



சபை ஊழியர்களை "சித்தப்பா" போல நடுவில் வைத்து, அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை அணுக முடியும் என்று போதிப்பது வேதாகம உண்மையைத் திரிப்பதாகும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் இரத்தத்தினால் பிதாவாகிய தேவனை நேரடியாக அணுகும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் (எபிரெயர் 4:16). 



எபிரெயர் 13:17 கூறுவது: "உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்..."



*யார் நம்மை நடத்துகிறவர்கள்?*
சபையில் தேவ வார்த்தையைப் போதித்து, தேவ வழியில் நம்மை வழிநடத்துபவர்கள். அவர்கள் ஆத்துமாக்களுக்காக தேவனிடத்தில் "உத்தரவாதம் பண்ணுகிறவர்கள்" (Accountable). அதாவது, கூட்டத்தை ஆளுவதற்கோ அல்லது தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்கோ அல்ல; மாறாக ஆத்துமாக்களைப் பராமரித்து வழிநடத்தும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தேவனுடைய வார்த்தையை உண்மையாய் போதிக்கும்போது, சபை ஒழுங்கிற்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள். 
இது ஆவிக்குரிய வழிகாட்டுதலுக்கான கீழ்ப்படிதலே தவிர, அவர்களின் விருப்பத்திற்கு அடிமையாகவோ, அல்லது பரலோக இரட்சிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுப்பதாகவோ அர்த்தமல்ல. 



பி.கு: வேதாகமத்தை முறையாய் படித்து, அறிந்து, விசுவாசித்து, யாருடைய வற்புறுத்தலுமின்றி, தானே முன்வந்து, "இதுவரை நான் தவறான சத்தியத்தில் வாழ்ந்துவிட்டேன். ஆகவே, நான் முறையாய் இனி வாழவேண்டும்" என்று, சத்தியத்தின்படி வசனத்தை விசுவாசித்து, மனந்திரும்பி, விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பின்னர், மீண்டும் தான் இதுவரை இருந்த கூட்டத்தில் தான் இருப்பேன், அது தான் எனது தாய் சபை என தனது பழைய நட்பில் மீண்டும் நுழைந்தால், கிறிஸ்துவின் இரட்சிப்பை இழந்து அவரது சிலுவைக்குப் பகைஞராகி, கிருபையாய் பெற்ற இரட்சிப்பை கேலி கூத்தாக நினைப்பதாகும்.









 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வேதாகம ஆசிரியர்

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

#1250 – புறஜாதியான கொர்நெலியு கர்த்தரை நோக்கித் தான் ஜெபித்தாரா? அவரது ஜெபம் எப்படி கேட்கப்பட்டது? அப்போஸ்தலர் 10:4

*#1250 – புறஜாதியான கொர்நெலியு கர்த்தரை நோக்கித் தான் ஜெபித்தாரா? அவரது ஜெபம் எப்படி கேட்கப்பட்டது?* அப்போஸ்தலர் 10:4 
 
*பதில்* : யூதன் அல்லாத புறஜாதியினரில் இரு வகையினர் இருந்தனர். கொர்நெலியு சிலை வழிபாடு செய்யாமல், ஒரே மெய்யான தேவனை வழிபட்ட "தேவபக்தியுள்ளவன்" (God-fearer) வகுப்பைச் சேர்ந்தவன். அப். 10:1-2 -ம் வசனங்கள் அதை நமக்குத் தெளிவுப்புடுத்துகிறது. 
 
கொர்நெலியு தேவனைப் பயபக்தியோடு வழிபட்ட போதிலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் மூலமாக வரும் இரட்சிப்பைப் பற்றியும் அறியாமல் இருந்தான். சத்தியத்தை அறியும் அவனது தாகத்தையும் ஜெபத்தையும் தேவன் கேட்டார்.
 
*இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் பாடம்?*
தேவனை உண்மையாய்த் தேடுகிறவர்களுக்குச் சத்தியம் வெளிப்படும் (எரே. 29:13)
 
கிறிஸ்துவிற்குள் இரட்சிக்கப்பட்டவர்களில் கொர்நெலியு, யூதரல்லாதவர்களான புறஜாதியாரில் முதலாம் நபர்.  அப்போஸ்தலர் 11:18 — "இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமைந்திருந்து: அப்படியானால் தேவன் புறஜாதியாருக்கும் ஜீவனுக்கு ஏதுவான மானசாந்த அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்."
 
கொர்நெலியுவின் வழக்கமான பக்தியும், சத்தியத்தைத் தேடும் தாகமும் நிறைந்த ஜெபங்களை தேவன் கேட்டார் (அப்போஸ்தலர் 10:4). அவனுக்கு இயேசுவின் மூலமான இரட்சிப்பைக் வெளிப்படுத்துவதற்காகவே தூதனை அனுப்பி பேதுருவை அழைத்துவருமாறு கூறினார் (அப்போஸ்தலர் 11:14).
 
புதிய உடன்படிக்கையான கிறிஸ்துவின் காலத்தில், “கர்த்தர்” என்னும் தமது நாமத்தை பிதாவானவர், குமாரனாகிய கிறிஸ்துவிற்கு கொடுத்தார். “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலி. 2:11”
 
ஆகவே, புதிய உடன்படிக்கையின் காலமாகிய கிறிஸ்துவின் காலத்தில் வாழும் நாம், நமது ஜெபங்களில், “கர்த்தாவே, கர்த்தாவே” என இயேசுவை நோக்கி ஜெபிக்காமல் பிதாவை நோக்கி நாம் ஜெபிக்கவேண்டும் என்பதை வேதம் நமக்குக் கற்று கொடுக்கிறது. 
 
ஜெபமானது பிதாவை நோக்கி ஏறெடுக்கப்படவேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். மத். 6:9
 
அதேனென்றால் பிதாவானவரே சகலத்திற்கும் சகலமாயிருக்கும்படி கிறிஸ்துவானவர் பிதாவானவருக்கு தன்னை கீழ்படுத்தினார் – 1கொரி. 15:28
 
வெகு குறைவாக ஒரு சில இடத்தை தவிர – மற்ற எல்லா ஜெபங்களும் பிதாவை நோக்கியே ஏறெடுக்கப்பட்டது (அப். 7:59)
 
இயேசுவானவர் நமக்கு அப்பா அல்ல... அவர் நமக்கு மூத்த சகோதரன் – எபி. 2:11-12
 
கிறிஸ்துவானவர் பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிறார் !! 1பேதுரு 3:22, எபி. 10:12, எபி. 1:13, அப். 7:56
 
கர்த்தர், ஆண்டவர் என்ற பதங்கள் – இயேசுவை குறிக்கிறது (அப். 2:36, பிலி. 2:11)
 
ஜெபம் – தேவனை நோக்கி அதாவது பிதாவை நோக்கி கிறிஸ்துவின் வழியாக பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு ஏறெடுக்கப்பட வேண்டும் (யோ. 14:6)
 
ஆகவே புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பரமேறுதலுக்கு பின்னர் – பிரதானமாக நம்முடைய ஜெபம் பிதாவை நோக்கி இருக்கிறது. (யோ. 14:6)
அந்த ஜெபத்தை கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்கிறோம், (யோ. 16:23)
ஆவியானவரின் பெலத்தோடு ஜெபிக்கிறோம். (1 பேதுரு 1:2)
 
நம்முடைய ஜெபம் – பிதாவை நோக்கி இருப்பதால், ஜெபம் ஏறெடுக்கும் போது பிதாவையே குறிப்பிடுகிறோம்.
 
கிறிஸ்துவை நோக்கி ஜெபம் பண்ணி – கிறிஸ்துவினுடைய ரெக்கமன்டேஷனோடு கிறிஸ்துவினிடத்தில் ஜெபத்தை ஒப்புகொடுப்பது புரியாத வகையில் ஜெபிப்பதாகும்.
 
நாம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுக்கும் போதே – பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்று பிதாவை நோக்கி ஜெபம் பண்ண கற்றுக்கொடுத்து இருக்கிறாரே (மத். 6:9)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*



Print Friendly and PDF

வியாழன், 24 செப்டம்பர், 2026

#1249 – பெண்கள் அமைதியாய் இருக்கவேண்டும் என வசனம் தெளிவாய் சொல்லியிருக்க, சபையில் பெண்களை வசனம் வாசிக்க அனுமதிக்கிறார்களே இது எப்படி?

#1249 – *பெண்கள் அமைதியாய் இருக்கவேண்டும் என வசனம் தெளிவாய் சொல்லியிருக்க, சபையில் பெண்களை வசனம் வாசிக்க அனுமதிக்கிறார்களே இது எப்படி?*

*பதில்* : சபையில் பெண்கள் பேசுவது மற்றும் வசனம் வாசிப்பது குறித்த கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "பெண்கள் அமைதலாயிருக்க வேண்டும்" என்ற கட்டளை, எந்தெந்தச் சூழல்களுக்குப் பொருந்தும் என்பதையும், சபையின் தலைமைத்துவத்திற்கும் (Leadership) பொதுவான பங்கேற்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இந்தக் கேள்வியை கேட்டு தமிழக கிறிஸ்துவின் சபை வட்டாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி தன்னை நீதிமானாய் காட்டிக்கொள்ள இக்காலங்களில் அதிகம் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. 
 
இதைப் பற்றிய தெளிவை அடைய, முதலில் சபை நிர்வாகம் மற்றும் வேதப்பூர்வ வரம்புகள் குறித்து அறியவேண்டும்.
 
பலமுறை இதைக்குறித்து நான் தெரிவித்திருந்தாலும்; தன் வாழ்நாளின் பல வருடங்களை பல நாடுகளிலும் பல பிராந்திய சபைகளிலும் அநேகரை சத்தியத்தில் வழிநடத்தி ஊழியத்தில் ஈடுபட்டு நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு வேத வல்லுநரின் கட்டுரையை அப்படியே இங்கு மொழியாக்கம் செய்கிறேன். 
 
*எழுதியவர்:* 
1973-1992 ம் ஆண்டுகளில் கானி டபிள்யூ. ஆடம்ஸ், அமெரிக்கா, இத்தாலி மற்றும் பல நாடுகளில் உள்ள கிறிஸ்துவின் சபைகளுடன் இணைந்து செயல்பட்ட ஒரு பிரபல சுவிசேஷகரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.
 
*கட்டுரை:*
“ஸ்திரீகளும் சபையின் காரியநிருவாகக் கூட்டங்களும்”
(பிரதி எடுக்கப்பட்ட இடம்: Guardian of Truth Magazine XXXVIII: 5 (March 3, 1994), p. 3-4)


மூப்பர்கள் உள்ள இடங்களிலும் மூப்பர்கள் இல்லாத இடங்களிலும் நடைபெறும் சபையின் காரியநிருவாகக் கூட்டங்களில் (Business meetings) ஸ்திரீகள் பங்கேற்க வேண்டும் என்று சில வட்டாரங்களில் பெருகிவரும் ஒரு தூண்டுதல் காணப்படுகிறது. ஸ்திரீகள் மௌனமான பார்வையாளர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகையில், தீர்மானம் எடுக்கும் செயல்பாடுகளில் அவர்கள் பேசலாம் என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். ஒரு சகோதரர் வாதிடுகையில், ஸ்திரீகள் பிரசன்னமாயிருந்து பங்கேற்கலாம் என்பது மாத்திரமல்ல, அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அந்த ஆலோசனைகள் வேதவசனத்திற்குப் புறம்பானவை என்று கூறுகிறார். கடந்த சில ஆண்டுகளாக சில பத்திரிகைகளில் இந்த மேலெழுந்தவாரியான கருத்துக்களை ஆதரித்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
 
ஒவ்வொரு சபையிலும் மூப்பர்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும் (அப். 14:23; தீத்து 1:5). தகுதிகள் இந்த வேலைக்கு ஆண்களையே சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் ஒரு மனைவியையுடைய புருஷராயும், தங்கள் சொந்தக் குடும்பங்களை நன்றாய் நடத்துகிறவர்களாயும் இருக்க வேண்டும் (1 தீமோ. 3:2,4). இது ஸ்திரீகளுக்கு விலக்களிக்கிறது. உதவிக்காரரும் அவ்வாறே ஆண்களாயும், புருஷர்களாயும், உண்மை charity/உண்மையுள்ள மனைவியைக் கொண்டவர்களாயும் இருக்க வேண்டும் (1 தீமோ. 3:11,12). மூப்பர்கள் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும், உதவிக்காரர்கள் சபையின் சிறப்பு ஊழியக்காரர்களாகவும் செயல்படுகிறார்கள்.
 
ஆனால், மூப்பர்களும் உதவிக்காரர்களும் நியமிக்கப்படுவதற்கு முன்பே சபைகள் வேதவசனத்தின்படி நிலைத்திருக்கவும் செயல்படவும் முடியும். தெய்வீகத் தகுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். பவுலாலும் பர்னபாவினாலும் ஸ்தாபிக்கப்பட்ட ஆசியா மைனரில் இருந்த சபைகள், அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்து ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை ஏற்படுத்தும் வரை மூப்பர்கள் இல்லாமலேயே செயல்பட்டன (அப். 14:23).
 
ஆராதனைக்காக மக்கள் கூட்டம் கூடி, தேவன் தம்முடைய ஜனங்களின் உள்ளூர் சபைக்குக் கொடுத்த ஊழியத்தை மேற்கொள்ளும்போது, சில தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. 
 
கர்த்தருடைய நாளில் எந்த மணிநேரத்தில் சபை கூட வேண்டும்? கர்த்தருடைய பந்தி ஆயத்தமாயிருப்பதை யார் கவனித்துக் கொள்வார்? இந்த நோக்கத்திற்காக எந்த இடம் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்? யார் போதிப்பார்? பாட்டை யார் முன்னின்று நடத்துவார்? எத்தனை பாடல்கள்? சபையின் ஜெபங்களை யார் முன்னின்று நடத்துவார்? எத்தனை ஜெபங்கள்? தேவையிலுள்ள பரிசுத்தவான்களுக்கு உதவி செய்வதிலோ, அல்லது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்களைத் தெரிந்தெடுத்து ஆதரிப்பதிலோ சபை எவ்வாறு செயல்பட வேண்டும்? வேதவசனத்தின்படி செயல்படும் எந்தவொரு சபையிலும், கவனிக்க வேண்டிய காரியநிருவாகக் காரியங்கள் இருக்கவே செய்யும்.
 
"சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது" (1 கொரி. 14:26). "சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" (1 கொரி. 14:40).
 
*கட்டுப்பாடுகள்:*
சபைகளில் ஸ்திரீகள் "பேசாமலிருக்கக்கடவர்கள்" என்றும், தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட காரியங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினால், "வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்" என்றும் போதிக்கப்பட்டார்கள் (1 கொரி. 14:34-35). இது "அடங்கியிருப்பது" (under obedience) காரியத்தின் பகுதியாகக் கருதப்பட்டதுடன், வேதம் சொன்னதற்கும் இணக்கமாய் இருந்தது ("வேதமும் அப்படியே சொல்லுகிறது"). அதற்கு மாறாகச் செய்வது "அயோக்கியமாயிருக்கும்" (v. 35). தேவ ஆவியால் ஏவப்பட்ட வேதம் மேலும் போதிக்கிறதாவது: "ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்" (1 தீமோ. 2:11-12). இதற்காக அவர் இரண்டு காரணங்களைக் கொடுத்தார்: (1) மூப்பு உரிமை ("முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான்"), மற்றும் (2) ஏவாள் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அவளுடைய பகுத்தறிவு பலவீனமாக இருந்தது. அவள் தன் புருஷனுக்கு முன்பாக ஓடி, நியாயமான சிந்தனைக்கு இடம் கொடாமல் உணர்ச்சிவசப்பட்டாள்.
 
இந்தத் தெய்வீகச் சத்தியங்களைப் புறக்கணித்து மற்ற வேதப்பகுதிகளிலிருந்து வைக்கப்படும் எந்தவொரு வாதமும் ஆரம்பத்திலிருந்தே தவறானதாகும். மனிதர்களுக்குத் தவறில்லாத பகுத்தறிவு இல்லை, ஆனால் மதிக்கப்பட வேண்டிய ஒரு தெய்வீக ஒழுங்கு உள்ளது.
 
ஆண்களினதும் பெண்களினதும் பங்களிப்பில் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ள நவீன சமூகத்தின் அழுத்தத்தை இன்று பலர் உணர்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் பங்களிப்புகளைக் குழப்பிக் கொள்வது குடும்ப அமைப்பிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான விவாகரத்து விகிதங்களிலும், மகிழ்ச்சியற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்தும் இதற்குச் சான்றுகளைக் காணலாம். பல சபைகளில், அதிகமான ஸ்திரீகள் வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது பொருளாதாரத் தேவையின் காரணமாகவோ, அல்லது அதிக வசதிகளைப் பெறுவதற்காகவோ, தங்கள் கல்வியை நியாயப்படுத்துவதற்காகவோ, அல்லது மனநிறைவை அடைய முயல்வதற்காகவோ இருக்கலாம். இதனுடன், கர்த்தருக்குள் இருக்கும் சில சகோதரிகளிடையேயும் அணுகுமுறை மாறியுள்ளது. சிலர் அதிக வெளிப்படையாகப் பேசுகிறார்கள், சிலர் கட்டளைகள் இடப் பழகியிருக்கிறார்கள், மேலும் சிலர் எப்போதும் சண்டையிடும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள். பலர் நவீனக் கல்வி முறையின் விளைவாகவே இவ்வாறு உருவாகியுள்ளனர். பொழுதுபோக்கு ஊடகங்களும் தொடர்ந்து இதையே போதிக்கின்றன. இத்தகைய எண்ணங்களால் மனநிறைவு பெற்ற இளைஞர்களை நாம் கிறிஸ்துவிடம் வழிநடத்தும்போது, இந்த விஷயங்களில் சில பதற்றங்கள் ஏற்படுவது இயல்பே.
 
சபையின் காரியநிருவாகத் தீர்மானங்களில் பெண்களின் பங்களிப்பை மாற்றி அமைக்க ஊக்குவித்த, நல்நோக்கம் கொண்ட சகோதரர்களால் இந்தப் பதற்றங்கள் மேலும் அதிகரித்துள்ளன. நவீன பெண்களும் (மற்றும் ஆண்களும்) கீழ்ப்படிதல், அடங்கியிருத்தல், பணிவு ஆகியவற்றைப் பற்றிக் கேட்க விரும்புவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது "உரிமைகளுக்கான" காலம். நாம் ஆண் ஆதிக்கவாதிகள் என்று தீர்க்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
 
*அப்போஸ்தலர் 6 மற்றும் 15:*
ஸ்திரீகள் காரியநிருவாகக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று வாதிடுபவர்கள் அப்போஸ்தலர் 6 மற்றும் அப்போஸ்தலர் 15 ஆகிய அதிகாரங்களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும், காரியங்களைச் பரிசீலிக்க சீஷர்களின் திரள் கூட்டம் கூடிவந்தது என்று வாதிடப்படுகிறது. ஒவ்வொரு வேதப்பகுதியையும் ஆராய்வோம்.
 
அப்போஸ்தலர் 6-இல், கிரேக்க விதவைகளுக்குச் செய்யப்பட்ட அன்றாட விநியோகம் தொடர்பாக ஒரு பிரச்சனை எழுந்தது. இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்தது. தெய்வீக வெளிப்பாடு அதற்குத் தீர்வு கண்டது. பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலர்கள் சபையைக் கூட்டி, தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்தினார்கள். முதலாவதாக, இது மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் வேலை மற்றும் தகுதிகளைப் பற்றிப் பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் இணையான ஒரு போதனைச் சூழலாகும். முழுச் சபையும் அந்த உபதேசத்தைக் கேட்க வேண்டியிருந்தது. முன்னுரிமைகள் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தது. அப்போஸ்தலர்கள் பந்திவிசாரணை செய்வதற்குத் தேவவசனத்தைப் போதிக்கும் தங்கள் வேலையைப் புறக்கணிக்க முடியாது (வச. 2). அவர்களால் அதைச் செய்ய முடியாததால், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை நிறைவு செய்யும் ஏழு ஆண்களை (பிரச்சனையைக் கையாளுவதற்குப் போதுமானவர்கள்) தெரிந்தெடுக்கும்படி தெய்வீக ஞானம் கட்டளையிட்டது. அப்போஸ்தலர்கள் அவர்களை "இந்தக் காரியத்திற்காக" "நியமிப்பார்கள்" (வச. 3). சபை இந்த உபதேசத்தைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, ஏழு ஆண்களைத் தெரிந்தெடுத்தது. "அவர்கள்" (சபை) அந்தத் தேர்வைச் செய்தார்கள். ஸ்திரீகள் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய ஏதோவொரு காரியநிருவாகக் கூட்டம் அங்கு நடைபெற்றிருக்க வேண்டும் என்று சிலர் இங்கிருந்தே யூகிக்கிறார்கள். அந்த ஏழு ஆண்களை அவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்பது விரிவாக விளக்கப்படவில்லை. என் வாழ்நாளில் பல முறை மூப்பர்களையும் உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுக்கும் காரியங்களில் நான் ஈடுபட்டிருக்கிறேன், ஆனால் ஒருபோதும் காரியநிருவாகக் கூட்டத்தில் ஸ்திரீகள் பிரசன்னமாயிருந்ததில்லை. ஆயினும், பெயர்களை முன்மொழிவதற்கும், அந்த ஆண்களைத் தெய்வீகத் தகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் நேரமளிக்கும் ஒரு திட்டத்தை எங்களால் எப்போதும் வகுக்க முடிந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பெயர்களைப் பரிந்துரைக்கவும், பரிந்துரைக்கப்பட்டவர்கள் மீது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். சீராகச் செயல்படும் எந்தவொரு சபையிலும் தகவல்கள் எப்போதும் வழங்கப்பட வேண்டும். ஆனால், விவேகம் முடிவு செய்யும் எந்தவொரு நடைமுறையும், கீழ்ப்படிதல் மற்றும் அடங்கியிருத்தல் கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. இந்தப் வேதப்பகுதியை எடுத்துக்கொண்டு, காரியநிருவாகக் கூட்டத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு உட்படப் பின்பற்றப்பட்ட நடைமுறையை நமக்குச் சொல்ல யாரால் முடியும்? எந்த சகோதரி முன்வந்து பேசினார்? அவள் என்ன சொன்னாள்? இது சபை "அப்போஸ்தலருடைய உபதேசத்திலே... உறுதியாய்த் தரித்திருந்த" வழக்கு அல்லவா (அப். 2:42)? இன்றைய காரியநிருவாகக் கூட்டங்களில் ஸ்திரீகள் பங்கேற்பதை ஆதரிப்பவர்கள், அப்போஸ்தலர் 6-லிருந்து அதற்கு நியாயத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் மிகுந்த கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சபை, தெய்வீக உபதேசத்திற்கு இணங்க, சிறப்பு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தது; அதுபோலவே பல ஆண்டுகளாகச் சபைகளும் தெய்வீக வழிகாட்டுதல்களுக்கு இணங்க உதவிக்காரர்களையும் (மற்றும் மூப்பர்களையும்) தேர்ந்தெடுத்து வருகின்றன. 1 கொரிந்தியர் 14 மற்றும் 1 தீமோத்தேயு 2 ஆகிய அதிகாரங்களின் கட்டுப்பாடுகள் ஒதுக்கி வைக்கப்பட்டன என்று வாதிட யாராவது ஆயத்தமாக இருக்கிறார்களா?
 
அப்போஸ்தலர் 15 என்பது தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் ஒரு பிரச்சனை தீர்க்கப்பட்ட மற்றொரு சந்தர்ப்பமாகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புறஜாதியார் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமா இல்லையா என்ற கேள்வி தீர்க்கப்பட வேண்டியிருந்தது. சிலர் அந்தியோகியாவுக்குச் சென்று, எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களுக்கு விரோதமாகப் போதிக்கிறார்கள் என்று கூறி, பவுல் மற்றும் பர்னபாவின் ஊழியத்தை பலவீனப்படுத்தினர். இது முழுச் சபைக்கும் கவலைக்களிக்கும் ஒரு காரியமாக இருந்தது. பவுலும் பர்னபாவும் எருசலேமுக்குச் சென்றனர், அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூட்டப்பட்டனர். சிலர் பேசி, தவறாக வழிநடத்தப்பட்ட யூத நிலையை ஆதரித்தனர். அவர்களில் யார் ஸ்திரீகள்? அவர்கள் என்ன சொன்னார்கள்? அங்கிருந்த ஒரு சகோதரியாவது 1 கொரிந்தியர் 14:34-35 மற்றும் 1 தீமோத்தேயு 2:11-12 ஆகிய வசனங்களின் கட்டுப்பாடுகளை மீறினாரா? ஆம், காரியத்தைச் பரிசீலிக்க அவர்கள் அனைவரும் கூடிவந்தார்கள். அது ஒரு தீவிரமான உபதேசப் பிரச்சனையாக இருந்தது. முன்னாயிரமாண்டுவாதம் (premillennialism), வாத்திய இசை, சபையின் இயல்பு, ஊழியம் மற்றும் அமைப்பு, மற்றும் பல பிரச்சனைகள் குறித்து தேவவசனத்தைப் போதிப்பதற்காக முழுச் சபையையும் கூட்ட வேண்டிய பல சந்தர்ப்பங்கள் ஆண்டாண்டு காலமாக நமக்கு ஏற்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் இருவருமே அந்த உபதேசத்தைக் கேட்க வேண்டியிருந்தது. சத்தியத்திற்கு இணங்க செயல்படுவதற்கான தேர்வுகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருந்தது. விவாதம் முடிந்ததும், அப்போஸ்தலர்கள், மூப்பர்களின் சம்மதத்துடனும் அங்கீகாரத்துடனும், ஒரு அப்போஸ்தல தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி, பவுல் உட்பட அனைத்து அப்போஸ்தலர்களும் ஒரே காரியத்தையே போதிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் அதை மற்ற இடங்களில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பினர். ஸ்திரீகள் வாக்களித்தார்களா? யாராவது வாக்களித்தார்களா? இந்த நடவடிக்கை "அப்போஸ்தலர்களுக்கும் மூப்பர்களுக்கும் முழுச்சபைக்கும் நலமாகத் தோன்றியது" (வச. 22). அவர்கள் ஒருமனப்பட்டிருந்தார்கள்.
 
சபைகளுக்குத் தேவனுடைய சத்தியம் போதிக்கப்பட்டு, அவர்கள் அதில் மகிழ்ச்சியடைந்து, அதற்கு இணங்கச் செயல்பட்ட பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கிறேன். அதேவேளையில், அந்த உபதேசம் திரளான ஜனங்களுக்கு நலமாகத் தோன்றாமல், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமலோ அல்லது தங்கள் நடைமுறையை மாற்றிக்கொள்ளாமலோ இருந்த மற்ற சந்தர்ப்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
 
அப்போஸ்தலர் 6 மற்றும் அப்போஸ்தலர் 15 ஆகிய இரண்டிலும் முழுச் சபையும் கூடிவந்து காரியங்களைப் பரிசீலித்தது என்ற உண்மை, சபையின் காரியநிருவாக அம்சங்களைத் தொடும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய காரியநிருவாகக் கூட்டங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களிலும் தெய்வீக வெளிப்பாடே பிரச்சனையைத் தீர்த்தது. ஆண்கள், பெண்கள் அனைவரும் கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்கள் மூலம் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் போதித்ததை நடைமுறைப்படுத்தினார்கள்.
 
சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியைப் பெற்று, அடங்கியிருப்பதையும் கீழ்ப்படிதலையும் பற்றி கர்த்தர் சொன்னதை கனம்பண்ணுகிற எந்தவொரு சகோதரியாவது, 1 கொரிந்தியர் 14:34-35 மற்றும் 1 தீமோத்தேயு 2:11-12 ஆகிய வசனங்களை மீறும் பெரும் ஆபத்து உள்ள ஒரு சூழலில் தன்னை ஏன் உட்படுத்திக்கொள்ள விரும்புவாள்? எந்தவொரு சகோதரனாவது அவளை அவ்வாறு செய்ய ஏன் ஊக்குவிக்க வேண்டும்? தேவன் ஆண்களைக் குடும்பத்திலும் சபையிலும் தலைமைத்துவப் பொறுப்புகளில் வைத்துள்ளார். அங்கு தொடர்பாடலும், புரிதலும் இருக்கட்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படட்டும், ஆனால் வேதப்பூர்வமான கட்டுப்பாடுகள் மதிக்கப்படட்டும். (அவரது கட்டுரை முடிவுற்றது)
 
*மேற்கண்ட கட்டுரையின் அடிப்படையில் "பெண்கள் வசனம் வாசிப்பது சரியா?" என்ற கேள்விக்கான தெளிவுரை:*
மேலேயுள்ள கானி டபிள்யூ. ஆடம்ஸ் அவர்களின் கட்டுரை விளக்குவது போல, வேதவசனம் பெண்களின் பேச்சை முற்றிலும் தடை செய்யவில்லை; மாறாக, ஆண்கள் மீது அதிகாரம் செலுத்துவதையும், சபையை வழிநடத்தும் தலைமைத்துவப் பணிகளையுமே தடை செய்கிறது (1 தீமோ. 2:11-12).   
 
*இந்த வேதக் கொள்கையின் அடிப்படையில், சபைக் கூட்டங்களில் பெண்களின் பங்களிப்பை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:*
சபைக் கூட்டத்தில் கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கை பண்ணுவது, பாடல்கள் பாடுவது மற்றும் வேதாகம வசனங்களை வாசிப்பது போன்றவை தலைமைத்துவப் பணி (Leadership function) அல்ல. எனவே இவை வேத வரம்பை மீறுவதாகாது. 
 
வேதாகம வகுப்புகளில் வசனங்களை வாசிப்பதோ அல்லது சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்பதோ ஆண்கள் மீது அதிகாரம் செலுத்துவதாகாது; அது ஒரு தலைமைத்துவப் பணியும் அல்ல.
 
சபையின் காரியநிருவாகக் கூட்டம் என்பது சபையை வழிநடத்தும் தீர்மானங்களை எடுக்கும் ஒரு தலைமைத்துவப் பணியாகும். எனவே, இத்தகைய விவாதங்களில் பங்கேற்பதில் இருந்து ஸ்திரீகளுக்கு வேதப்பூர்வமான வரம்புகள் உள்ளன. 
 
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதற்காக மட்டும் கூட்டப்படும் கூட்டங்கள், தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவப் பணி அல்ல. எனவே, அத்தகைய அறிவிப்புகளைக் கேட்கும் கூட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :*

*Q&A Book ஆர்டர் செய்ய :*

*வலைதளம் :*

*YouTube “வேதம் அறிவோம்” :*

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

#1247 - ஆதியாகமம் 37:26-28 வசனத்தின்படி யோசேப்பின் சகோதரர்கள் யோசப்பை குழியிலிருந்து தூக்கி எடுத்து விற்றதாக கூறப்படவில்லை. ஆனால், குழியில் போட்ட சகோதரர்கள் அவரை எடுத்து இஸ்மவேலரிடத்தில் விற்றார்கள் என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன?

#1247 - *ஆதியாகமம் 37:26-28 வசனத்தின்படி யோசேப்பின் சகோதரர்கள் யோசப்பை குழியிலிருந்து தூக்கி எடுத்து விற்றதாக கூறப்படவில்லை. ஆனால், குழியில் போட்ட சகோதரர்கள் அவரை எடுத்து இஸ்மவேலரிடத்தில் விற்றார்கள் என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன?* மேலும் வசனம் 28 இல் மீதியானியர் இஸ்மவேலர் கையில் விற்று போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வசனம் 36 இல் பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திபார் என்பவனிடத்தில் விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து தெளிவாக விளக்கவும்.
 
*பதில்* : ஆதியாகமம் 37:28-ல் “அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்...” முந்தைய வசனத்தில் (27) யூதா மற்றும் சகோதரர்கள் என்று குறிக்கப்படுவதால் “அவர்கள்” என்பது யோசேப்பின் சகோதரர்களைக் குறிக்கிறது என்று தோன்றுவது இயல்பானது.
 
ஆனால் 28-ஆம் வசனத்தின் அமைப்பை மட்டும் வைத்து, “சகோதரர்களே யோசேப்பை குழியிலிருந்து எடுத்தார்கள்” என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
 
ஆதியாகமம் 37:28 — மீதியானிய வர்த்தகர்கள் வந்து யோசேப்பை குழியிலிருந்து எடுத்ததாக வாசிக்க முடிகிறது.
 
ஆனால் ஆதியாகமம் 37:29-ல் ரூபன் திரும்பி வந்து: “இதோ, யோசேப்பு குழியில் இல்லை” என்று அறிந்து தன் வஸ்திரங்களைக் கிழிக்கிறான்.  யோசேப்பை குழியில் போட்ட பிறகு, சகோதரர்கள் அங்கே தொடர்ந்து இருந்தார்கள் என்று அவசியமில்லை. ரூபன் யோசேப்பை மீட்க நினைத்தவன். அவன் திரும்பி வந்தபோது யோசேப்பு இல்லை. எனவே, வசனம் 28-ஐ நேரடியாக வாசித்தால், வர்த்தகர்கள்/மீதியானியர்கள் யோசேப்பை குழியிலிருந்து எடுத்துச் சென்றார்கள் என்று புரிந்து கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது.
 
யூதாவின் கூற்றை கவனிக்கவும். “அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்...” அதாவது, யோசேப்பை விற்பது என்ற திட்டத்தை சகோதரர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 
 
ஆதியாகமம் 37:36: “மீதியானியரோ அவனை எகிப்திலே பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.” என்கிறது.
 
அதாவது, 
யோசேப்பு 
↓
குழியில் போடப்பட்டான்
↓
மீதியானிய/இஸ்மவேல வர்த்தகர்கள் வந்தார்கள்
↓
யோசேப்பு அவர்களுடன் எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டான்
↓
போத்திபாரிடம் விற்றார்கள்
 
*கூடுதல் தகவல்:*

 இஸ்மவேலர் – இஸ்மவேல் — ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவன். (ஆதி. 16:15)
 மீதியானியர் -  மீதியான் — ஆபிரகாமுக்கும் கேத்தூராளுக்கும் பிறந்தவன். (ஆதி. 25:1-2)
 
ஆதியாகமம் 37-ல் நடக்கும் நிகழ்வுகளின் சரியான வரிசை:
 
1. *யோசேப்பு குழியில் தள்ளப்படுதல்:*
சகோதரர்கள் யோசேப்பின் அங்கியைக் கழற்றி, அவனைத் தண்ணீரில்லாத ஒரு வெறுமையான குழியில் போட்டார்கள் (ஆதியாகமம் 37:23-24).
 
2. *யூதாவின் யோசனை:*
எகிப்தை நோக்கிச் செல்லும் இஸ்மவேலரின் வர்த்தகக் குழுவைக் கண்டு, "நாம் யோசேப்பைக் கொல்வதை விட, இந்த இஸ்மவேலருக்கு விற்றுவிடுவோம்" என்று யூதா சகோதரர்களிடம் கூறினான் (ஆதியாகமம் 37:26-27).
 
3. *மீதியானிய வர்த்தகர்கள் யோசேப்பை எடுத்தல்:*
மீதியானிய வர்த்தகர்கள் அந்த வழியாகக் கடந்து சென்றபோது, யோசேப்பைக் குழியிலிருந்து தூக்கியெடுத்தார்கள் (ஆதியாகமம் 37:28).
 
4. *வெள்ளிக்காசுக்கு விற்கப்படுதல்:*
யோசேப்பு இருபது வெள்ளிக்காசுக்கு இஸ்மவேலர்களிடம் விற்கப்பட்டான்; அவர்கள் அவனை எகிப்திற்குக் கொண்டுசென்றார்கள் (ஆதியாகமம் 37:28).
 
5. *ரூபனின் அதிர்ச்சி:*
யோசேப்பைக் காப்பாற்ற நினைத்த ரூபன் குழிக்குத் திரும்பி வந்தபோது, யோசேப்பு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான் (ஆதியாகமம் 37:29-30).
 
6. *தகப்பனை ஏமாற்றுதல்:*

சகோதரர்கள் வெள்ளாட்டுக்கடாயைக் கொன்று, அதன் ரத்தத்தில் யோசேப்பின் அங்கியைத் தோய்த்து, யாக்கோபிடம் கொண்டுசென்று ஒரு காட்டுமிருகம் அவனைப் பட்சித்துவிட்டது என்று நம்ப வைத்தார்கள் (ஆதியாகமம் 37:31-33).
 
7. *போத்திபாரிடம் விற்கப்படுதல்:*
எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட யோசேப்பை, பார்வோனின் பிரதானியும் தலைசாரதியுமான போத்திபார் என்பவனிடத்தில் மீதியானியர்/இஸ்மவேலர்கள் விற்றார்கள் (ஆதியாகமம் 37:36, 39:1).
 
சகோதரர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டு, ஆட்டின் இரத்தத்தில் தோய்த்து, யாக்கோபிடம் கொண்டு சென்று, யோசேப்பை விற்ற சம்பவத்தை மறைத்து, “ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் (ஆதி. 37:31-34). அதனால், சகோதரர்கள்தான் யோசேப்பை விற்பதற்கான சதியை செய்தவர்கள் என்பது சந்தேகமற்றது.
 
*ஆகவே சுருக்கமாக:*
சகோதரர்கள் — சதியை செய்தவர்கள்.
மீதியானிய/இஸ்மவேல வணிகர்கள் — யோசேப்பை எடுத்துச் சென்ற வணிகர்கள்.
போத்திபார் — எகிப்தில் அவனை வாங்கியவர்.
தேவன் — இந்த முழு சம்பவத்தையும் தமது திட்டத்திற்குள் பயன்படுத்தியவர்.
 
அதனால் “சகோதரர்கள் யோசேப்பை விற்றார்கள்” என்பது சம்பவத்தின் பொறுப்பைச் சொல்லும் பொதுவான கூற்று. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும்:*

Print Friendly and PDF