புதன், 1 பிப்ரவரி, 2023

#1173 - விசுவாசித்தும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு மரித்துவிட்டால் பரலோகம் போவார்களா?

#1173 - *விசுவாசித்தும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு மரித்துவிட்டால் பரலோகம் போவார்களா?*

ஐயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒரு சந்தேகம். ஒரு மனிதன் இயேசுதான் தெய்வம் அவர்தான் என்னை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று விசுவாசித்து ஆண்டவருக்குள் சேர நினைக்கிறார். அதாவது தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க நினைக்கிறார். ஆனால், அதற்குள் அவர் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து விடுகிறார். இப்போது அவர் ஆண்டவருடைய பிள்ளையாக மாறி இருப்பாரா இல்லையா? அதாவது இப்போது அவர் பரலோகத்திற்குள் வர முடியுமா?

*பதில்* : தன்னை ஒரு பாம்பு கடித்து விட்டதாகவோ, விநோதமான பூச்சி ஒன்று கடித்துவிட்டது என்றறிந்தாலோ மருத்துவ உதவிக்கு எவரும் காத்திருப்பரோ? இரட்சிப்பிற்கு ஞானஸ்நானம் என்று அறிந்தவுடனேயே பரம கட்டளைக்கு சடுதியிலே கீழ்படிதல் வருகிறது.

கிறிஸ்துவை நம்பியும் ஞானஸ்நானத்திற்குள் கீழ்படிதலுக்கு முன்பே அவர் மரித்துவிட்டால் “ஐயோ அப்பாவி அந்த மனிதருக்கு தேவன் இரங்கி பரலோகத்திற்குள் விட்டுவிடுவார்” என்ற தனது நம்பிக்கையை எவராவது ஆமோதிக்க வேண்டும் என்று பலருக்கு ஏக்கம் உள்ளது. அதனிமித்தம், இரட்சிப்பிற்கு ஞானஸ்நானம் அவசியமில்லை என்ற உள்ளார்ந்த ஆசை அல்லது தனது அதீத நம்பிக்கைக்கு ஆதாரத்தை தேட முயல்கிறார்கள்.

விசுவாசம் வேதாகமத்தை கேட்பதிலிருந்து (அறிந்துக்கொள்வதிலிருந்து) வருகிறது (ரோமர் 10:17).

வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்டது (2பேதுரு 1:20-21).

அவர் தமது வார்த்தைகளின் மூலம், மூன்று விஷயங்களை நம்மை *கண்டித்து* உணர்த்துகிறார்.

"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்" (யோ. 16:8).

இரட்சிப்பை (மீட்பு/விடுதலை) பற்றி பேசுவதற்குக் காரணமே, “இந்த” நேரத்திலேயே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற அவசரம் உள்ளது.

"அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, *இப்பொழுதே* அநுக்கிரககாலம், *இப்பொழுதே* இரட்சணியநாள். " (2கொரி. 6:2).

ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிவிட்டால், எந்த மாற்றத்தையும் தனக்குள் தானே செய்துக்கொள்ள இயலாது. காலம் கடந்தே போய்விட்டது. "மனுஷர் இறந்தபின்னர், நியாயத்தீர்ப்பு தான் வருகிறது" (எபி. 9:27). இதை எவராலும் மாற்ற முடியாது.

இயேசுவை விசுவாசிக்கும் ஒருவர் கீழ்படியவில்லையெனில் அல்லது தாமதப்படுத்துகிறார் என்றால், இயேசு கிறிஸ்து சொன்னதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே அதன் பொருள்.

வசனம் சொல்லப்பட்டதும் விசுவாசம் வருகிறது, மனந்திரும்புதல் வருகிறது ஞானஸ்நானத்திற்கான கீழ்படிதல் வருகிறது. மாற்கு 16:16

வசனத்தைக் கேட்டவர்கள் விசுவாசித்தார்கள், மனந்திரும்பினார்கள், விசுவாசத்தை அறிக்கையிட்டார்கள், பாவமன்னிப்பிற்கென்று (உடனடியாக) ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். அப். 2:36-38; 22:16; 8:12; 10:46-48; 16:25, 31-33; 19:4-5

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன் (1பேதுரு 4:11)

தேவக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் ஏன் அவசரம் காண்பிக்கவேண்டும்? ஏனென்றால் எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை மக்கள் அறிந்திருந்தனர். நாளை என்ன நடக்கும் என்று நாம் அறியாதிருக்கிறோம். நமது வாழ்க்கை எப்படிப்பட்டது? அது சிறிது நேரம் தோன்றி மறைந்துவிடும்" (யாக்கோபு 4:14).

இன்னுமொரு வாய்ப்பு என்பதே கிடைக்காமல் போகும் தற்போதுள்ள வாய்ப்பை பயன்படுத்த பிரியமில்லாதவர்கள்!!

உண்மையில், எவரும் தேவனை உண்மையாக விசுவாசித்து (நம்பி), அவர் கட்டளையிட்டபடி கீழ்பந்து செய்யத் தயாராக இருக்கும் போது, விசுவாசித்த நொடிக்கும் ஞானஸ்நானத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அவ்வளவு பெரியதாக இருக்காது.

கீழ்ப்படிவதற்கு முன் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. கர்த்தர் தம்முடையவர்களைக் கவனித்துக்கொள்கிறவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எத்தியோப்பிய மந்திரி வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே, தண்ணீரைக் கண்டவுடனேயே "இதோ, தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுவதற்கு என்ன தடை?" என்று கேட்டார்!

பதில், "நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், தடையில்லை என்பதே" (அப். 8:37-38).

இரட்சிப்பைத் தடுப்பது மனிதனின் இதயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். யோவான் 5:28-29

2தெசலோனிக்கேயர் 1:6-9ம் வசனங்கள் *நம்மை பதம் பார்க்கிறது*. வேதத்திலிருந்து அவைகளை வாசிக்கவும்.

விசுவாசிக்கிறேன் ஆனால் ஞானஸ்நானம் எடுக்க இன்னும் நேரம் இருக்கிறது என்பவர்களுக்கு இந்த பதிவு ஒரு திருப்புமுனையை தரும்படி ஜெபிக்கிறேன்.

லூக்கா 13:3-5ம் வசனங்களையும் அவர்கள் வாசிக்க வேண்டியது அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக