#1169 - *பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனைக்கு செல்லும் போது…இடுப்பில் பெரிய கயிறு கட்டி தான் செல்வார் காரணம் அவர் பாவம் செய்திருந்தால் உள்ளேயே செத்துவிடுவார்... எனவே அவரை அந்த கயிறு மூலம் தான் இழுப்பார்கள் என்ற இந்த கூற்று உண்மையா? வசன ஆதாரம் இருக்கிறதா?*
*பதில்* : பழைய பிரமாண சட்டத்தின்படி வருடத்திற்கு ஒரே ஒருமுறை (யாத். 30:10), பிரதான ஆசாரியன் தன் பாவத்திற்கும் இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்கான பாவநிவிர்த்தி செய்வதற்காகவும் பலிகளின் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்தில் கொண்டு வர வேண்டும்.
பாவநிவிர்த்தி நாளில், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதற்கு முன், பிரதான ஆசாரியன் குளித்து, விசேஷ ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் (லேவி. 16:4). பிறகு தனக்கும் தன் குடும்பத்துக்காகவும் பாவநிவாரண பலியாக ஒரு காளையைப் பலியிட வேண்டும் (லேவி. 16: 6 & 11).
மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கும் முன்பு செய்யவேண்டிய காரியங்களில் எந்த தவறு நேர்ந்தாலும் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் உள்ள ஆசாரியன் சாவான் என்று தேவன் எச்சரித்தார்.
மகா பரிசுத்த ஸ்தலத்துனுள் போவதற்கு முன்னர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை லேவியராகமம் 16ம் அதிகாரம் முழுவதும் படித்துப்பார்க்கவும்.
குறிப்பாக வசனங்கள் : லேவி. 16:2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
மற்றும் லேவி. 16:13 தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
லேவியராகமம் 16ல் இரண்டு முறை, மரண தண்டனையைக் குறித்த கண்டிப்பான தகவல் இருப்பதை கவனிக்கலாம். கண்டிப்பான நெறிமுறையைப் பின்பற்றும்படி கடவுள் பிரதான ஆசாரியனை எச்சரிக்கிறார்.
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதன் தீவிரத்தன்மையின் காரணமாக, யூதர்கள் பிரதான ஆசாரியரின் காலில் கயிற்றைக் கட்டும் யோசனையை பிற்காலங்களில் வகுத்திருக்கலாம்.
ஆனால், பிரதான ஆசாரியன் தன் காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு கூடாரத்தினுள் நுழைவார் என்ற கருத்திற்கு வேதாகமத்தில் எந்த குறிப்பும் இல்லை. இந்த தகவல் கி.பி. 13ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட Jewish Traditions by Zohar என்ற புத்தகத்தில் வந்தவை. (Acharei Mot, verse 198). கிறிஸ்துவிற்கு பின்னர் சுமார் 1300ம் ஆண்டுகளில் வந்த தகவல் என்பதை கருத்தில் கொள்ளவும்.
பாரம்பரியத்தின் படி கயிற்றின் நோக்கம், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் தனது கடமைகளின் போது ஆசாரியன் இறந்துவிட்டால், உடலை மீட்டெடுப்பதற்கு என்று பயன்படுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டது.
யாத்திராகமம் 28:33-35ம் வசனங்களின்படி, பிரதான ஆசாரியரின் ஆடையின் விளிம்பில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். பிரதான ஆசாரியன் ஒரு வேளை மரித்திருந்தால் இந்த மணிகளின் சப்தம் அந்த ஆசாரியன் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிய மணிகளும் வழிவகை செய்தன. ஆனால், இந்த மணிகளின் நோக்கம் இவை தான் என்று குறிப்பிடுவதற்கு வேதத்தில் எதுவும் இல்லை.
பிரதான ஆசாரியர் எந்த நோக்கத்திற்காகவும் கயிறுகளை கட்டவேண்டும் என்று வேதம் குறிப்பிடவில்லை. பிரதான ஆசாரியர் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்பது குறித்து தெளிவாக யாத்திராகமம் 28-35ம் அதிகாரங்களில் காணலாம்.
குறிப்பாக சொல்லவேண்டுமெனில், மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கும் போது இடுப்பில் அல்லது காலில் கயிறு கட்டுவதென்பது லேவி. 16:4ம் வசனத்தின்படி தேவனுடைய கட்டளைக்கு உட்பட்டதல்ல.
References:
1-https://pulpitandpen.org/2014/06/02/the-rope-around-the-high-priests-ankle-myths-thatll-preach/
2-Zohar Vol. 16 Emor, Section 34
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக