#1134 - *புளிப்பில்லாத பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் என்று பவுல் 1கொரி. 5:8ல் கூறுகிறாரே விளக்கவும்*. 1கொரி. 5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
*பதில்* : எளிதில் வாசிக்கும்படியாகவும் எளிதில் புரிந்துக்கொள்ளும்படியாகவும் 13ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே வேதாகமம் அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டது.
ஆகவே, எந்த ஒரு வசனத்திற்குமான முழுமையான கருத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள அந்த முழு கடிதத்தையும் படிப்பது அவசியம். குறைந்தபட்சம் அந்தக் கடிதத்தின் சாராம்சம் முழுவதும் படிக்கவேண்டியது அவசியப்படுகிறது.
நீங்கள் குறிப்பிட்ட இந்த வசனப்பகுதியின் முழு சாராம்சமும் 1ம் வசனம் துவங்கி 13ம் வசனம் முடிய அதாவது 5ம் அதிகாரம் முழுக்கவுமே ஒரு கேள்விக்கு (1கொரி. 5:1) அப். பவுல் கொரிந்து சபையாருக்கு பதிலளித்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
யூதர்கள் மத்தியில் புளிப்பு, மிகவும் மத அக்கறையின் பொருளாக கருதப்பட்டது. புளித்த மாவை தங்கள் வீடுகளில் காணக்கூடாது என்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். புளித்த மாவு வீட்டில் இருந்தால் அவன் அறுப்புண்டுபோவான் என்ற பிரமாணமே இஸ்ரவேலருக்கு உள்ளது. யாத். 12:15-19.
யாத். 12:19 ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
“…துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல..” என்று புளிப்பு பாவத்தைக் குறிப்பதாக பவுல் 1கொரி. 5:8ல் நினைவுபடுத்துடுகிறார்.
தனது தகப்பனின் மனைவியை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு விபச்சாரத்தைக் குறித்து இந்த அதிகாரம் முழுவதும் பவுல் பதிலளிக்கிறார்.
அந்த மனிதனைக் கண்டிக்காமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவனை அங்கீகரித்தார்கள். (1கொரி. 5:2)
சகோதரன் என்னப்பட்ட அவன் பாவம் செய்தான் என்றறிந்தும் அவனை அங்கீகரிப்பதால் இங்கு ஒரு உதாரணத்தைக் கையாள்கிறார் பவுல்.
அதாவது கொஞ்சம் புளித்த மாவானது பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் மற்ற அனைத்து மாவையும் புளிக்கவைக்குமே. அப்படியிருக்கும்போது புளித்துப்போன (பாவம் செய்த) இந்த மனிதனை நீங்கள் உங்கள் ஐக்கியத்திலிருந்து நீக்காவிடில் சபையிலுள்ள மற்றவர்களும் கெட்டுப்போக இவன் காரணமாகிவிடுவான் என்று எச்சரிக்கிறார். 1கொரி. 5:6
நீங்கள் பாவமில்லாதவர்களானதால் (புளிப்பில்லாதவர்கள்) அந்த புளித்த மாவை (துணிகரமாய் பாவம் செய்தவன் இரட்சிக்கப்படும்படி) தள்ளிவிடச்சொல்கிறார். 1கொரி. 5:7
யூதக் கிறிஸ்தவர்கள் தங்களது பழைய நாட்களில் பஸ்காவை கொண்டாடினவர்கள். பஸ்காவில் புளிப்பு சேர்க்கப்படலாகாது. நீங்கள் உங்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடின பொழுது புளிப்பு இல்லாமல் அல்லவா உங்களது பண்டிகையைக் கொண்டாடினீர்கள் அதுபோல புளிப்பான பாவத்தை நீக்கும்படிக்கு கிறிஸ்து நமக்காக பஸ்காவாக பலியிடப்பட்டுள்ளாரே… அப்படியிருக்கும் போது புளித்ததை எப்படி உங்கள் மத்தியில் வைத்துள்ளீர்கள் என்று வினவுகிறார்.
8ம் வசனத்தில் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் என்ற வார்த்தையானது பண்டிகையை ஆசரியுங்கள் என்று அவர் சொல்லவில்லை மாறாக உங்களது பழைய வழக்கம் எவ்வாறு புளிப்பில்லாமல் பஸ்காவை அனுசரித்தீர்களோ அது போல உங்களது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் புளிப்பிற்கு (பாவத்திற்கு) இடமளிக்காமலிருக்க வேண்டும் என்பதே.
இந்தக் கருத்தை அதே அதிகாரத்தின் 11-13ம் வசனங்கள் நமக்கு உறுதிசெய்கிறது.
1கொரி. 5:11-13 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் *அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்*.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
திங்கள், 11 ஏப்ரல், 2022
#1134 - புளிப்பில்லாத பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் என்று பவுல் 1கொரி. 5:8ல் கூறுகிறாரே விளக்கவும்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக