புதன், 30 மார்ச், 2022

#1131 - நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 1கொரி. 13:10 - விளக்கவும்

#1131 - *நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 1கொரி. 13:10 - விளக்கவும்*

*பதில்* : "நிறைவானது" என்ற வார்த்தையை பலரும் இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டு அர்த்தம் கொள்கிறார்கள். இயேசு பரிபூரணமானவர், அவருடைய வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும், இயேசு திரும்பி வரும் வரை அற்புத ஆவிக்குரிய வரங்கள் தொடரும் என்று பவுல் கூறுவதாக பலர் நினைக்கவும் கற்பிக்கவும் செய்கிறார்கள்.

ஆனால், பவுலின் கூற்றுகளை சற்று கவனிக்கவேண்டும்:
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அற்புத ஆவிக்குரிய வரங்கள் முடிவடையும் என்று சொல்வதால் பயன் என்ன?  கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் வானமும் பூமியுமே முடிவடையுமல்லவா? 1கொரி. 15:23-24.

மேலும், இப்பொழுது (எழுதிய காலத்தை குறிப்பிடுகிறார்) விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கிறது. அதில் அன்பே பெரியது என்று பவுல் கூறுகிறார். 1கொரி. 13:13

கவனிக்க வேண்டியவை என்னவென்றால்;
கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு விசுவாசமும் நம்பிக்கையும் அவசியப்படுகிறதா?

காணப்படுகிறது நம்பிக்கையல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது (ரோ. 8:24).

நாம் கிறிஸ்துவுடன் இணையும் வரையே நம்பிக்கை அவசியப்படுகிறது.

எபிரேயரின் எழுத்தாளர், விசுவாசமே காணாதவற்றின் அத்தாட்சி என்கிறார்(எபி. 11:1). கிறிஸ்துவுடன் நாம் சேர்ந்திருக்கும்போது கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் அவசியமோ?

ஆகவே, ஆவிக்குரிய வரங்களின் அவசியத்திற்கான கால முடிவிற்கு பின்பு உள்ள ஒரு காலத்தை விவரித்து விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு நிலைத்திருக்கும் என்கிறார்.

மேலும், 1கொரி. 13:12-ஆம் வசனத்தில்: ”இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” என்று வருவதால் இன்னும் சிலர்; நாம் தேவனை நேருக்கு நேராக பார்க்கவில்லை என்பதால் கிறிஸ்துவின் வருகையின் காலத்தை முன்னிட்டே பவுல் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். ஆனால் நாம் கவனமாகப் படித்தால் பவுல் சொல்வது இதுவல்ல என்பது தெளிவாகப் புரியும்.

“தேவனை” நேருக்கு நேர் காண்போம் என்று வசனம் கூறவில்லை. மாறாக… இப்போது மங்கலாக (நிழலாட்டமாய்) பார்ப்பதைக் காட்டிலும் நேருக்கு நேர் இருப்பதைப் போல தெளிவாகப் பார்ப்போம் என்று பவுல் கூறுகிறார்.

அப்படியானால் நிறைவானது என்று பவுலின் வார்த்தையின் அர்த்தம் என்ன?
முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வரங்கள் மூலம் பெற்ற வரம்புக்குட்பட்ட அறிவு மற்றும் தகவலை குறைவானது என்று குறிப்பிடுவதால், பெற்ற அறிவில் முழுமையானதாகவும் இனி வரம்பற்றதாகவும் இருப்பதை "நிறைவானது" என்பதைக் குறிக்கிறது.

1கொரி. 13:8-13 வசனங்களை மீண்டும் படித்து, இந்த விளக்கம் எவ்வாறு சிறப்பாகப் பொருந்துகிறது என்றும் பவுல் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.

கொரிந்தியர்கள் போராடும் இந்த ஆவிக்குரிய வரங்கள் நிறுத்தப்படும் என்று 8 ஆம் வசனத்தில் பவுல் அறிவிக்கிறார். 1கொரி. 13:8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

9 ஆம் வசனத்தில் பவுல் சொல்வதைக் கவனியுங்கள்:
அவர்கள் தேவனிடமிருந்து பகுதியளவு அறிவையும் பகுதியளவு வெளிப்பாட்டை மட்டுமே கொண்டிருந்தனர். வரங்கள் மூலம் துண்டு துண்டாக, பகுதி பகுதியாக அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறார். 1கொரி. 13:9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

ஆனால் தேவனுடைய முழு அறிவும் வெளிப்பாடும் கொடுக்கப்படும்போது, இந்த ஆவிக்குரிய வரங்கள் (பகுதி பகுதியாய் கிடைப்பது) முடிவடையும். 1கொரி. 13:10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

வசனம் 11 இல் பவுல் இந்த ஆவிக்குரிய வரங்களை "ஆரம்ப வழிகள் அல்லது ஆரம்ப காரியங்கள்" என்றும் "குழந்தைக்கேற்ற வழிகள்" அதாவது துவக்கத்திற்கே அவசியமானது என்றும் விவரிக்கிறார். 1கொரி. 13:11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

ஆகவே, ஆவிக்குரிய இந்த வரங்களால் ஆரம்பம் பெறும் முதல் நூற்றாண்டு ஆரம்ப கிறிஸ்தவர்கள் இன்னும் முதிர்ச்சியடையவேண்டிய வழி வரப்போகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.

கொரிந்திய கிறிஸ்தவர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் குறைந்த அறிவும் புரிதலும் உள்ள காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு அப்போஸ்தலராலும் தீர்க்கதரிசிகளாலும் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டிருந்த வார்த்தைகளால் கற்றுக்கொண்டிருந்தனர்.

ஆனால் சகலமும் வெளிப்படுத்தப்பட்டு இம்மாதிரியான குறைவானவை நிறைவாகும் காலக்கட்டம் வரும்போது இவை இனி தேவையில்லை என்ற சரியான மற்றும் முதிர்ச்சி வருகிறது.

எடுத்துக்காட்டாக: உங்களுக்கு பிறந்த குழந்தை இது தான் என்று புதியதாய் மருத்துவமனையில் பிறந்திருக்கும் குழந்தையை வேறொருவர் உங்களுக்கு அடையாளம் காட்டவேண்டியது அவசியம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த செவிலியரோ அல்லது மருத்துவரோ அல்லது தாயோ உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்த வேண்டியதில்லை. நிறைவான ஊர்ஜிதம் கிடைத்தப்பின் குறைவானதை வெளிப்படுத்தும்படிக்கு வேறொருவர் உங்களுக்கு அவசியப்படுவதில்லை.

மேலும், 1கொரி.13:12ம் வசனம் அழகாக இருக்கிறது.  “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்”. ஒரு கண்ணாடியில் மங்கலாகப் பார்ப்பது போல் தான் அவர்களின் அப்போதைய அறிவு நிலையை பவுல் விவரிக்கிறார்.

நமது மூக்கினுள்ளே இருக்கும் முடியைக் கூட துல்லியமாய் காணும்படிக்கு இக்காலங்களில் நாம் பார்க்கும் கண்ணாடிகள் போல முதல் நூற்றாண்டின் கண்ணாடிகள் இருந்ததில்லை.

கண்ணாடிகள் என்று இங்கு கொரிந்தியருக்கு குறிப்பிடுவது கண்ணாடியால் செய்யப்பட்டவையும் அல்ல.

பழங்காலத்தில் கண்ணாடிகள் உலோகத்தினால் செய்யப்பட்டவை. அவர்களது பிம்பங்களை அவற்றில் காணும்போது தெளிவாக அல்ல மங்கலாகவேத் தெரியும். உதாரணத்திற்கு அலுமினிய பாத்திரத்தில் நமது முகத்தை நாம் பார்த்தால் எப்படியிருக்கும்? அதுபோலவே மங்கலாக அவர்கள் பார்வையில் இருக்கும்.

ஆனால் சரியான நேர்த்தியான கண்ணாடி வரும்போது, மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். அது நேருக்கு நேர் பார்ப்பது போல் இருக்கும்!

12 ஆம் வசனத்தின் மீதியைக் கவனியுங்கள். “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்."

இது ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு. அறிவை ஓரளவு மட்டுமே பெற முடியும். தேவனுடைய புதிய உடன்படிக்கை ஒரு நேரத்தில் ஒரு துண்டு துணடாக வெளிப்படுத்தப்பட்டது.

எபேசியர் நிருபத்தை எழுத பரிசுத்த ஆவியால் பவுல் தூண்டப்பட்டார்.
பேதுரு தனது இரண்டு கடிதங்களை எழுத பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டார். யாக்கோபு தனது கடிதத்தை எழுத பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டார். ஆவியானவரால் யோவான் மூன்று கடிதங்களை எழுதினார்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காலம், தேவ சித்தம் சிறிது சிறிதாக வெளிப்படும் காலமாகும். அப்படி அவசியமில்லாத ஒரு காலத்தையே பவுல் இங்கு 1கொரி. 13:10ல் எழுதினார். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்!
தேவனுடைய முழு வெளிப்பாடு வந்ததும், குறைவானது நிறைவாகிறது.

நாம் தேவனை மங்கலாகப் பார்க்கவில்லை. அவருடைய முழுமைபெற்ற வார்த்தையால் தேவனை நாம் தெளிவாகக் காண முடிகிறது.

நாம் பார்க்க வேண்டிய அனைத்தையும் கடவுள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடவுளை அவருடைய வார்த்தையின் மூலம் நாம் இப்போது அறிந்து கொள்ளக்கூடிய தெளிவு, வேதம் வெளிப்படுவதற்கு முன்பு மனித வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாதது.

ஆவிக்குரிய இந்த வரங்கள் தேவனுடைய அறிவை வெளிப்படுத்தின. அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் தேவ வார்த்தைகளை எழுதி நிறைவேற்றின பின்பு, தொடர்ந்து வெளிப்படுத்துதல் தேவையற்றதாக இருக்கும்.

ஆகவே, தேவனுடைய முழு வெளிப்பாடு வந்தவுடன் மூன்று விஷயங்கள் மட்டுமே இருக்கும்: விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு. இவை நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த கிறிஸ்தவ பண்புகள். இவற்றில் பெரியது அன்பு.

அப்போஸ்தலர் 8:18 மற்றும் ரோமர் 1:9-11 இல் நாம் கற்றுக்கொண்டதற்கு இது எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கவனியுங்கள்.

அப்போஸ்தலர்களால் மட்டுமே ஒரு கிறிஸ்தவருக்கு ஆவிக்குரிய வரங்களை கொடுக்க முடியும். அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பின்பு இவ்வரங்களை வழங்க வழியில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 13ல் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறார். ஆவிக்குரிய வரங்கள் முடிவடையும் என்று பவுல் கூறுவது மட்டுமல்லாமல், தேவனுடைய வெளிப்பாடுகள் அனைவரும் படிக்கவும் தெரிந்துகொள்ளவும் வேதவசனங்களாக எழுதப்பட்டவுடன் அவை முடிவடைந்தது.

முதல் நூற்றாண்டின் இறுதிக்குள் வேத எழுத்துக்கள் முடிக்கப்பட்டன என்பது பரவலாக அறிந்தது.

தேவனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் தேவன் வெளிப்படுத்தியுள்ளார்.

இனி எவராவது தேவன் எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொன்னால், அது வேதத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் அவர் சாபத்திற்குள்ளாகிறார். வெளி. 22:18-19

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக