#1127 - *வயதில் முதியோர் அல்லது பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறலாமா?*
*பதில்* : காலில் விழுந்து பெரியவர்களுக்கு மரியாதை செய்வது தமிழர்கள் மற்றும் கிழக்கத்தியர்களின் (1கொரி. 14:25, தானி. 2:46) கலாச்சாரம் மட்டுமல்ல குறிப்பாக விக்கிரகாராதனைக்காரரின் கலாச்சாரமும் கூட.
இந்த தலைப்பிற்கான கேள்வி இதுவரைக்கு நம் தொகுப்பில் வராதது ஆச்சர்யமே.
வேதத்திலிருந்து ஐந்து சம்பவங்களை கோடிட்ட பின்னர் இந்த கேள்விக்கான பதிலை நாம் காண்பது தெளிவான புரிதலையுண்டாக்கும்.
*1-சுமார் 96 வயது நிரம்பிய அப்போஸ்தலனாகிய யோவானின் செயல்:*
வெளி. 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
*2-இரண்டாவது முறையும் அதே அப்போஸ்தலனாகிய யோவானின் செயல்:*
வெளி. 22:8-9 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
*3-பேதுருவை வணங்கும்படி அவரது பாதத்தில் விழுந்த கொர்நெலியூ:*
அப். 10:25-26 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
*4-பவுலுக்கும் பர்னபாவுக்கும் லீஸ்திராவின் ஜனங்கள் செய்த செயல்:*
அப். 14:10-15 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
*5-சீஷர்கள் இயேசு கிறிஸ்துவைப் பணிந்துக் கொண்டது:*
மத். 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
மத். 15:25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
மத். 28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
லூக். 24:52-53 அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
யோ. 20:28-29 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
*கேள்விக்கான பதில்* :
அப்போஸ்தலனாகிய யோவான் தனக்கு வானத்து இரகசியங்களை தீர்க்கமாக காண்பித்த தூதன் ஒருவேளை ஆண்டவராக இருக்குமோ என்ற நினைவில் (நமது புரிதல்) காலில் விழுந்த போது ஏற்கனவே எச்சரிக்கை பெற்றிருந்தும் முடிவில் தன்னையும் தனது பூரிப்பையும் கட்டுபடுத்த முடியாத அளவு என்று குறிப்பிடும் அளவிற்கு மீண்டும் இரண்டாவது முறையும் அந்த தூதனது காலில் விழுந்த போது நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்ற தெளிவான விளக்கத்தால் நினைப்பூட்டப்படுகிறார். வெளி. 22:9 !!
வணங்கும்படி என்ற யோவானின் இரண்டு செயலில் பயன்படுத்தப்படும் வார்த்தையும் கிரேக்கத்தில் ப்ரொஸ்க்யூனியோ என்றுள்ளது. அதற்கு பணிந்துக் கொள்தல், வணங்குதல், மரியாதை செலுத்துதல், தொழுதுக்கொள்தல் என்று அர்த்தம்.
மரியாதையின் நிமித்தம் அல்லது வணங்கும் நிமித்தம் பவுலையும் பர்னபாவையும் லீஸ்திரா தீவார் வந்தபோது பவுல் அதை எதிர்த்து அவர்களுக்கு சத்தியத்தை சொன்னதை மேலே கவனித்திருப்பீர்கள்.
மரியாதையின் நிமித்தமாக எவரது காலில் விழும் செயலானது தன்னை முழுவதுமாய் அந்த மனிதருக்குக் கீழ்படுத்துவானது. அதாவது முழுவதுமாய் தன்னை அவருக்கு முன் தாழ்த்தி வெறுமையாக்கி அவரை மேன்மைபடுத்தும் செயல். நமக்கு மேலானவர்களை மரியாதை செய்யும்படிக்கு காலில் விழும் செயலானது விக்கிரகாராதனைக்காரர் மத்தியில் பழக்கப்பட்ட ஒரு செயல் அது. தங்களது தெய்வமாகவும் நீரே தெய்வமாக எங்கள் வாழ்வில் உதவி செய்தவர் என்றும் பல வகையில் மரியாதையான வார்த்தைகளைச் சொல்லி பெரியவர்களையும் முதியவர்களின் பாதத்தில் விழுந்து வணங்குவார்கள்.
தேவனே நம்மை உருவாக்கியவர். மற்ற யாவும் சிருஷ்டிக்கப்பட்டதே. அவரையன்றி எதையும் எவரையும் நாம் *நமஸ்கரிக்கவும் சேவிக்கவும்* வேண்டாம் என்கிறது வேதம். யாத். 20:5
அவர் எரிச்சலுள்ளவர் என்பதை மறக்கவேண்டாம் !! யாத். 20:5…. தனக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார் !!
வழக்கச்சொல்லில் சொல்லவேண்டுமானால்… தேவனை அறிந்த தேவப்பிள்ளைகள் தங்களது முழுமையான தொழுகையை, மரியாதையை, சமர்ப்பனத்தை, அர்ப்பணிப்பை – தேவனுக்கு செலுத்தாமல் வேறு விக்கிரகத்திற்கோ, மனிதர்களுக்கோ செலுத்தினால் – அவர் வட்டியும் முதலுமாக வசூலிப்பார் – கவனம் !!!
ஒரு அந்நியன், அதாவது விக்கிரகாராதனைக்காரன் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து உண்மையான கடவுளையறிந்த பின்னர் – எவரும் கற்றுக்கொடுக்காதபோதே அவனுள் அவன் எடுத்த தீர்மானம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம். கீழே வாசிக்கவும் :
நாகமான், தான் காணவந்த தேவ மனுஷனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து யோர்தானில் 7 தரம் மூழ்கிய போது தனது சரீரத்தின் குஷ்டம் நீங்கி சிறுபிள்ளையின் மாம்சம் போல (2இரா. 5:14) ஆனதை கண்டபோது மனமாற்றம் அடைந்து எடுத்துக்கொண்ட தீர்மானங்களை கவனியுங்கள் :
1-யார் உண்மையான தெய்வம் என்பதை அறிந்தார்.
2-யாரிடத்தில் வல்லமை இருக்கிறது என்று உணர்ந்தார்.
3-விக்கிரக ஆராதனை தவறு என்பதை தெரிந்து கொண்டார்.
4- இஸ்ரவேல் தேவன் ஒருவரே கடவுள் என்பதை தீர்மானம் பண்ணினார்.
5-பூமியெங்கும் வேறு எவறும் தெய்வம் இல்லை என்பதை பிரகடனம் பண்ணினார். (2இரா. 5:15)
6-தன் நாட்டில் போய் உண்மையான தேவனுக்கு காணிக்கை செலுத்தும்படிக்கு ஒரு பலிபீடத்தை கட்ட பிரியப்பட்டார் - 2இரா. 5:17
7-அந்த பலிபீடம் கட்டுவதற்கு விக்கிரகம் நிறைந்த அந்த ஊர் மண்னினால் கட்டாமல் இஸ்ரவேலின் மண்னினால் கட்டவேண்டும் என்று 2 கழுதை சுமக்கும் மண்னை தன் ஊருக்கு எடுத்து செல்கிறார் (2இரா. 5:17)
8- அது மாத்திரமல்ல அந்த சந்தோஷமான சூழ்நிலையிலும் கூட இனி ஒருபோதும் எச்சூழ்நிலையிலும் விக்கிரகத்திற்கு அல்லது விக்கிர கோவிலுக்கு முன்னதாக தன் *தலையை கூட சாய்க்கக் கூடாது* என்ற வைராக்கியத்தை தீர்மானமாக எடுத்தது தான் நாம் அறிய வேண்டிய பாடம் (2இரா. 5:18). எப்படியென்றால் இந்த பராக்கிரமசாலியாகிய நாகமான் தன் எஜமானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறவர் (2இரா 5:1) அவர் வெளியே போகும் போது அல்லது தங்கள் தெய்வத்தை கும்பிடும் படி கோவிலுக்கு போனாலும் நாகமானை கூட்டி செல்வது வழக்கமாக இருந்ததால் எஜமானோடு அந்த விக்கிரகக் கோவிலுக்குள் உள்ளே போகும் போது கீழே விழுந்து வணங்கிக்கொண்டிருக்கும் தனது எஜமானனை உதவியாக கைபிடித்து தூக்கி விடநேரும் போது தனது (நாகமானின்) சரீரம் வளைய வாய்ப்பு உள்ளது. அந்த வேளையில் தன் சரீரமோ தலையோ குணிய வேண்டி வந்தால் அதை விக்கிரகத்திற்காக நான் தலை வணங்கியதாக நினைத்துவிட வேண்டாம் என்கிறார் !! எழுதும் போதே எனக்கு உற்சாகமாக இருக்கிறது.
இப்பேற்பட்ட விசுவாசத்தில் நாம் வளரவேண்டும். நாகமானைக் காட்டிலும் நமது விசுவாசம் மேலோங்கியிருக்கவேண்டும்.
மரியாதையின் நிமித்தமாக கூட எவரது காலில் விழுவதும் கிறிஸ்தவர்களுக்கு தடுக்கப்பட்டதே !!
*என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்* : 1997ல் சுமார் 20க்கும் மேற்பட்ட வயதான தாய்மார்கள் எனது திருமண வரவேற்பு நாளில் வரிசையாக நின்றுக் கொண்டிருந்தனர். ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் இருவரும் கீழேயிறங்கி அங்கு வரிசையில் நிற்கும் அனைவர் காலிலும் விழுந்து வணங்கி சுருள் (அவர்கள் பாஷையில் அன்பளிப்பு பணம்) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். நான் உரத்தக் குரலில் சப்தமாக ”எவர் காலிலும் விழமாட்டேன்” இஷ்டம்னா குடுக்கட்டும் இல்லனா எனக்கு உங்கச் சுருள் வேண்டாம் என்றேன். அவர் உடனே, காலில் விழ வேண்டாம் வணக்கம் சொல்லி வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.. ஒவ்வொருவரை சந்தித்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி அந்த அன்பின் சுருளை (!) பெற்றுக்கொண்டேன்…. வீடு வந்து ஆர்வத்துடன் அவர்களது சுருளை நானும் மனைவியும் திறந்து பார்த்ததில் சில சுருள்கள் வெறும் ந்யூஸ் பேப்பர் தான் இருந்தது எங்களது வாழ்வில் சுவையான நிகழ்வு !!
தேவன் ஒருவரையே நாம் வணங்குகிறோம். அவர் ஒருவருக்கு முன்பதாக மாத்திரம் நம் தலை குணியட்டும். வானத்து தூதரானாலும் அவனும் நம்மைப் போல தான் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக