#1120 - *மத்தேயு 8:3ல் குஷ்டரோகியை இயேசு தொட்டு சுகமாக்கினார் என்றுள்ளதே. நியாயபிரமாணத்தின்படி அது குற்றமில்லையா*?
*பதில்* இந்த சம்பவத்தை மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா மூவரும் எழுதியுள்ளபோதும், மூவருமே ஒரு முக்கியமான கருத்தையும் பதிவிட்டுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.
அவ்வசனங்களை அப்படியே கீழே பதிவிட்டபின் எனது கருத்துக்களை எழுதிகிறேன். நன்கு கவனிக்கவும்:
மத்தேயு 8:2-4 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். (மத். 8:2-4)
மாற்கு 1:40-44 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். (மாற்கு 1:40-44)
லூக்கா 5:13-14 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். (லூக்கா 5:13-14)
அந்த குஷ்டரோகி இயேசுவின் அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான்.
1-அவர் முன் குனிந்து, உமக்கு சித்தமானால், என்னை சுத்தப்படுத்த முடியும் என்று கேட்டுக்கொள்கிறான்.
2-அதைக் கேட்ட இயேசு, தாம் விரும்புவதாக பதிலளித்தார். அதன் பின்பு அவனைத் தொட்டார்.
3-ஆனால் இயேசுவின் தொடுகையில், அவர் உடனடியாக அந்த க்ஷனத்திலேயே தூய்மையானார்.
4- யாரிடமும் சொல்லாமல், நேராக ஆசாரியர்களிடம் போய்ச் காண்பிக்கச் சொல்கிறார்.
5-நேராக சென்று ஆசாரியனிடம் காண்பித்தபின்னர் சுத்திகரிப்புக்கான காணிக்கைகளைச் செய்யும்படி இயேசு சொன்னார் (லேவி. 14:2-20).
மேலே சொன்ன ஐந்து குறிப்புகளையும் மத்தேயு, மாற்கு & லூக்கா மூவருமே குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இருந்தபோதிலும், அந்த மனிதன் தனது சுகத்தை மறைக்க முடியாத சந்தோஷத்தில் வெளிப்படுத்தினான். (மாற்கு 1:45).
ஆசாரியர்களால் பிரகடனப்படுத்தப்படும் வரை, அந்த மனிதன் குணமடைந்ததைக் வெளியே கூறுவதை இயேசு விரும்பவில்லை. ஆசாரியனின் சாட்சியமில்லாமல், அது ஒரு மனிதனின் வார்த்தையாக மட்டுமேயிருக்கும்.
வேதத்தில் தொழுநோய் பற்றி அதிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அது பாவத்தின் அழிவு சக்தியின் வெளித்தோற்ற விளக்கமாகும். பண்டைய இஸ்ரவேலில் தொழுநோயானது ஒரு நபரது பாவத்தின் விளைவால் பெற்றுக்கொள்ளும் பாடமாக இருந்தது. 2நாளா. 26:19-20
இந்நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் ஒரு ஆசாரியனிடம் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் (லேவியராகமம் 13:2-3).
ஆசாரியன் மூலம் தனக்கு குஷ்டரோகம் இருப்பது உறுதியானால் அவன் தீட்டுள்ளவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும். அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது என்று லேவி. 13:43-46ல் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.
இச்சூழ்நிலையில் ஒரு குஷ்டரோகி தன் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் முற்றிலும் தூய்மையற்றவராக கருதப்பட்டார்.
மனிதனால் குணப்படுத்த முடியாத இந்த நோயை அவன் செய்த பாவத்திற்காக கடவுள் தொழுநோயின் சாபத்தை சுமத்தினார் என்று பலர் நம்பினர்.
இந்த நோய் மிகவும் தொற்றுள்ளதாக கருதப்பட்டது. காற்று வீசும்போது தொழுநோயாளி எவரும் 150 அடிக்குள் வர அனுமதிக்கவில்லை என்று ஒரு வரலாற்று தகவல் சொல்கிறது.
இயேசு தன் கையால் தொட்டு குணமாக்கின இந்த குஷ்டரோகியின் சம்பவத்திலிருந்து நாம் அறியும் முக்கிய பாடம் என்னவென்றால் கிறிஸ்துவின் மூலம், தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் பாவத்தின் வாதையிலிருந்து நாம் குணமடைய முடிகிறது என்பதே.
இந்த குறிப்பிட்ட குஷ்டரோகி இயேசுவிடம் வந்து தன்னை குணப்படுத்தும்படி வேண்டுகிறார்.
இச்சம்பவத்தில் ”அவர்களது பார்வையில்” எனது மூன்று கேள்விகளை அல்லது கருத்துக்களை முன்வைக்கிறேன்:
முதலாவதாக, அறியப்பட்ட வரையில், 800 ஆண்டுகளுக்கு முன்பு, நாகமானின் சம்பவத்திற்கு பின்னர் எவரும் குணமடைந்ததாக எந்தப் பதிவும் இல்லை. அப்படியென்றால், அசுத்தமாகக் கருதப்படும் தொழுநோயாளியை இயேசு ஏன் தொட வேண்டும்?
இரண்டாவதாக, யூதர்கள் தொழுநோயை பாவத்திற்கான நேரடி தண்டனை தீர்ப்பாகக் கருதினர். எனவே, இது ஒரு நியாயத்தீர்ப்பு என்றால், இயேசு ஏன் கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் சென்று துன்பப்பட்டவரைக் குணப்படுத்துவார்?
மூன்றாவதாக, அவர்கள் மத்தியில் அறியப்பட்ட அனைத்து நோய்களிலும், தொழுநோயானது குணப்படுத்த முடியாத மற்றும் தொற்றுநோயாகவும் மிகவும் பயங்கரமானதாவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பயங்கரமான அறிகுறிகளை விட்டுச் சென்றது. ஆகவே, நோய்வாய்ப்பட்டவர்கள் குணப்படுத்துதலைக் காட்டிலும் சுத்தப்படுதல் அவசியமாக கருதினர். அப்படியென்றால், நியாயபிரமாண சட்டம் சமூகத்திலிருந்து தொழுநோயாளியை தடைசெய்தபோது இயேசுவானவர் அவரை எப்படி அணுக முடியும்?
ஆனால் வெகு இரக்கத்துடனே, தொழுநோயாளியின் வேண்டுகோளுக்கு இயேசு பதிலளித்தார், “எனக்கு சித்தமுண்டு; நீ சுத்தமாகு” என்று அவன் மேல் கை வைத்தார்” (மத். 8:3).
தொழுநோயாளியைத் தொட்டால் அசுத்தம் என்று இயேசு அறிந்திருந்தார்; இருப்பினும், அவர் தயக்கமின்றி அதை செய்தார். உடனே அந்தக்ஷனத்தில் தானே / அந்நேரத்தில் தானே / உடனே (இவ்வார்த்தைகளை மத்தேயு மாற்கு லூக்கா மூவருமே குறிப்பிட்டுள்ளதை கவனிக்கவும்) கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமை தொழுநோயாளியை குணப்படுத்தியது.
அவனது தோல் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாறினது. அவரது நரம்புகள் மீட்டெடுக்கப்பட்டன மற்றும் அவனது தசைகள் வலுப்பெற்றன. தொழுநோயாளிகளின் குணாதிசயமான கரடுமுரடான, செதில்கள் நிறைந்த தோல் மறைந்தது.
அவன் உடனடியாக குணப்பட்டதிலிருந்து கவனிக்கும் போது, எனக்கு சித்தமுண்டு நீ சுத்தமாகு என்று சொன்ன க்ஷனத்தில் குணமடைந்திருக்கலாம் அல்லது தொட்டவுடன் குணமடைந்தும் இருக்கலாம். அப்படியான எந்த குறிப்பும் வேதத்தில் இல்லை. எவ்வாறாயினும், அந்த குஷ்டரோகி அந்தக்ஷனத்திலேயே குணமடைந்ததால் குற்றஞ்சாட்ட விரும்பியவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் குற்றப்படுத்த எந்த சாட்சியில்லாமலும் ஏதுவில்லாமலும் ஆகிறது.
நியாயபிரமாணத்தை துளியளவும் மீறாதவர் நம் இயேசு கிறிஸ்து என்பதை நாம் அறியவேண்டும்.
இயேசு கிறிஸ்து எந்த சூழ்நிலையிலும் பாவஞ்செய்யவில்லை. அவர் வாயிலே வஞ்சனை கூட காணப்படவுமில்லை (1பேதுரு 2:22)
அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ் கூட “அவர் குற்றமில்லாதவர்” என்று கூறினான் (மத். 27:4)
இயேசுவை விசாரித்து கொண்டிருந்த அதிகாரியான பிலாத்துவின் மனைவி “இயேசுவானவர் நீதிமான் என்றாள்” (மத். 27:19)
தீர விசாரித்த அதிகாரியான பிலாத்துவும் “இவர் குற்றமற்றவர்” என்று தீர்ப்பு கொடுத்தார் (மத். 27:23-24)
சிலுவையில் தொங்கிகொண்டிருந்த கள்ளன் “இயேசு தகாததொன்றையும் செய்யவில்லை” என்றான் (லூக்கா 23:41)
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த படைதலைவன் “இயேசு உண்மையான நீதிபரர்” என்றான் (லூக்கா 23:47)
இயேசுவும் தன்னிடத்தில் “எந்த குற்றம் இருந்தால் கண்டு பிடியுங்கள் என்று ஜனங்களிடத்தில் சவால் விட்டார்” யோ. 8:46
இயேசு கிறிஸ்துவின் விரோதிகள் பொய்யான சாட்சிகளைக்கூட எவ்வளவோ ஏற்படுத்தியும் ஒன்றுமே ஒவ்வாமல் அல்லது நிரூபிக்க முடியாமல் போனது என்பதையும் நாம் மறந்து விடமுடியாது. மத். 26:60, மாற்கு 14:56
ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் இங்கே இருக்கிறார் (மத். 12:8, மாற்கு 2:28, லூக். 6:5) என்ற கூற்றுப்படி நியாயபிரமாணத்திற்கும் இவர் ஆண்டவராயிற்றே.
இயேசு செய்த அற்புதங்கள் தேவ வல்லமையால் செய்யப்பட்டவை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாலும் (மத். 9:8) ஆனால் இயேசு அந்த வல்லமையால் பாவங்களை மன்னிக்க முடியும் என்ற கூற்றுடன் இணைத்தார் (மத். 9:6).
பாவங்களை மன்னிக்க இயேசு கிறிஸ்துவுக்கு உரிமை உண்டு என்பதையும் தான் தேவன் என்றும் தேவன் தாமே அற்புதங்கள் மூலம் சாட்சியமளிக்கிறார் (எபி. 2:4, ரோ. 9:5; 10:12; சங். 45:6; 103:19; ஏசா. 9:6-7; எரே. 23:5-6; மீகா 5:2; யோ. 1:1-3; 10:30; அப். 20:28; பிலி. 2:6-11; கொலோ. 1:16; 1தீமோ. 3:16; எபி. 1:8-13; 1யோ. 5:20).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக