#1076- பழைய ஏற்பாட்டின் காலத்தில் சிங்க குகை, சூளை நெருப்பில் இருந்து காத்த தேவன்... ஆதி திருச்சபையின் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படும் போது (எரித்து, சிங்கங்களுக்கு இறையாக) ஏன் காக்கவில்லை?
அப்போஸ்தலர்கள்.. ஸ்தேவான்.. இரத்த சாட்சியாக ஏன் மரித்தார்கள்?
பதில் : உலகம் அநித்தியமானது. உலக ஜீவியமும் அநித்தியமானது. நாமனைவரும் இந்த உலகத்தில் பரதேசிகள். 2பேது. 1:2, 17, 2:11
சரீரத்தை கொலை செய்து அதன் பின்பு ஒன்றும் செய்ய திராணியில்லாதவர்களுக்கு பயப்படவேண்டியதில்லை என்றார் நம் ஆண்டவர். லூக். 12:4
அதாவது, இந்த உலக வாழ்க்கையானது மிக சொற்ப நாட்களே.
எடுத்துக்காட்டாக…
பிறந்து சுமார் 12 ஆண்டுகளுக்கு உலகம் தெரியாமல் வாழ்வோம்.
அடுத்த 12 வருடங்கள் படிப்பில் கவனம் செலவாகும்.
அடுத்த 35 வருடங்களுக்கு (25வயதிலிருந்து சுமார் 60 வயது வரை) பணம் ஈட்டுவதில் முற்படுவோம். பின்னர் சாவை எதிர்நோக்கி போராடுவோம்.
இதில் நித்திய ஜீவனுக்கென்று எந்த முயற்சியிலும் தன்னை சத்தியத்தின்படி ஈடுபடுத்திக்கொள்கிறவர்கள் எவரும் பாக்கியவான்கள்.
தேவனுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே மரணத்திற்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டார். தான் கொலை செய்யப்பட போவதைக் குறித்து பலமுறை அவரே அறிந்தும், மற்றவர்களுக்கு அறிவித்தும் இருந்தார். மத். 16:21, 17:23
உலகமானது, நித்திய வாழ்விற்காய் உத்தமமாக ஜீவிக்கிறவர்களை துன்புறுத்தும் என்று வேதம் சொல்கிறது. மத். 24:9, 10:17-22. சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன்.
யோ. 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
யோ. 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவன் என்று நினைக்குங் காலம் வரும்.
1பேது. 4:16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
வெளி. 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வெளி. 2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
மேலே பதிந்த வசனங்கள் நமக்கு மிகத் தெளிவாய் உணர்த்துகிற ஒரு காரியம் என்னவென்றால், உபத்திரவம் என்பது இந்த உலகத்தில் நிச்சயம் இருக்கும். பரலோக வாழ்க்கைக்காக நாம் அதனூடே கடந்து செல்லவேண்டியதே.
ஏனென்றால், இவ்வுலகத்தார் நீதியை எதிர்க்கிறவர்கள். நமக்கு கொடுக்கப்பட்ட சொற்ப ஆயுளில், தேவனுக்கென்று நாம் நம்முடைய வாழ்வை சரிசெய்துக்கொள்வதும், மற்றவர்களை இரட்சிப்பிற்குள் நடத்துவதும், சத்தியத்தை குறித்த வெளிச்சத்தை நாம் மற்றவர்களுக்கு எச்சரிப்பதிலும் நம் கடமையை பூரணப்படுத்திக்கொள்வது அவசியம். வெளி. 6:9-11, வெளி. 7:14
நம்முடைய இந்த உலகத்தின் பலன் பரலோகத்திலே வைக்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள பிரயாசப்படவேண்டும். இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுவதை நாம் கடந்து செல்லவேண்டியதே. 1பேது. 1:5-6.
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்று வேதம் தெளிவுப்படுத்தியுள்ளது. 2தீமோ. 3:12
எவ்வளவாக சத்தியத்திற்கு விரோதமாய் ஜனங்கள் எழும்பினாலும், நம்முடைய கடமையை செய்ய எதுவும் தடுப்பதல்ல. அப். 5:40-42
பவுலின் கடைசி வரிகள் நமக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெலனையும் தருகிறது. “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்”. பிலி. 1:20-24
ஒரு சுவாரஸ்யமான புரிதலை நாம் புதிய ஏற்பாட்டில் கவனிக்கவேண்டும்.
27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாட்டில்,
1-இராஜ்யத்தின் பணியை அநுதினமும் எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கும் “அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமும்”,
2-தப்பிப்போன மார்க்கத்தினின்று ஒருவரை திருப்பவேண்டியதை வலியுறுத்தி முடியும் “யாக்கோபு புத்தகமும்”
3-தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று.. என்று வலியுறுத்தும் 3யோவான் புத்தகமும்
முடிவில் …. “ஆமேன்” என்ற வார்த்தையை கொண்டிராது !!! ஆனால், மீதமுள்ள அனைத்து 24 புத்தகங்களிலும் முடிவு வார்த்தை ஆமேன் என்றிருக்கும் !!
ஆகவே, நான் மேலே குறிப்பிட்ட அந்த மூன்று கருத்துக்களை நாமும், நம் சந்ததியினரும் கிறிஸ்துவின் வருகை வரை எடுத்துச்செல்லவும், கடைபிடிக்கவும் வேண்டும் என்பது இதில் தெளிவாக விளங்குகிறது !!! வேதாகமம் எவ்வளவு மேன்மையுள்ளது பாருங்கள்..
மரணமே உன் கூர் எங்கே ??
உபாதைகளும், போராட்டங்களும், சந்தேகங்களும், எதிர்ப்புகளும், நம் ஊழிய பாரத்தை நிறுத்த நாம் அனுமதிப்பதில்லை.
பரலோக பயணமே நமக்கு அவசியம். நம் நேரம் இந்த உலகத்தில் முடியும் போது, தேவனே நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த பணியை மற்றவர் தொடர்ந்து செய்வர். நமக்கு தேவன் இளைப்பாறும் நேரத்தை தருகிறார். எபி. 4:10-11, எபி. 4:1
அப்போஸ்தலரும், சீஷர்களும் தங்கள் தங்கள் நேரம் வந்த போது, மரணத்திலிருந்து விடுபட்டு ஓடிஒளிய தேவனிடத்தில் வேண்டாமல், தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள்.
நானும் அந்த பிரயாணத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமும், முணைப்பும், வைராக்கியமும் உள்ளவன். தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் விசுவாசத்தில் பாதுகாப்பாராக.
எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://wp.me/pbU5iQ-1dK
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-----------------
சனி, 13 பிப்ரவரி, 2021
#1076- பழைய ஏற்பாட்டின் காலத்தில் சிங்க குகை, சூளை நெருப்பில் இருந்து காத்த தேவன்... ஆதி திருச்சபையின் கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படும் போது (எரித்து, சிங்கங்களுக்கு இறையாக) ஏன் காக்கவில்லை?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக