#984 - *கொரோனா கொள்ளை நோயை காரணம் காட்டி கர்த்தருடைய பந்தியை TV யிலும் YouTubeலும் பல ஊழியர்கள் செய்தி கொடுக்க துவங்கி விட்டார்கள். இதைகுறித்து வேதத்தின்படி விளக்கவும்*.
*பதில்*
சுமார் 6 கேள்விகள் இதைக்குறித்து கடந்த வாரத்தில் கேட்கப்பட்டுவிட்டது. மற்ற கேள்விகள் பதிலளிக்க நிலுவையில் இருந்தாலும் இந்த கேள்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக பதிலளிக்கிறேன்.
கால சூழ்நிலைக்கேற்பவும் இயலாமையின் காரணமாகவும் தேவனுடைய கட்டளையை நம் வசதிக்கேற்றபடி வளைத்துக்கொள்ளலாமா என்றால் ஆரோனின் குமாரரையும் கன்மலைக்கும் முன்பதாக அரங்கேற்றப்பட்ட மோசேயின் கோபத்தையும் உங்கள் முன்பாக மிகப்பெரிய உதாரணமாக கொண்டு வருகிறேன். லேவி. 10:1-2, எண். 20:8-12
தேவச்செய்தியை சபை ஊழியர் இன்டெர்நெட்டிலும் நேரலையிலும் கொடுப்பதில் எந்த உபதேச குழப்பமும் ஏற்படுவதற்கில்லை. ஒலி பெருக்கி செய்யும் காரியத்தை இணையதளமும் நேரலையும் செய்கிறது.
சபையாக தொழுகையில் செய்யப்பட வேண்டிய சகல முறைகளையும் திட்டமும் தெளிவுமாக புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் கடைபிடிக்கப்படவேண்டியதை கிறிஸ்தவ மதத்தினர் மாதத்திற்கு ஒரு முறையாகவும் முக்கிய நிகழ்வுகளின் மத்தியிலும் வருஷத்திற்கு ஒரு முறையுமாக மாற்றினார்கள். (வாரந்தோறும் எடுக்கவேண்டுமா என்ற விபரத்திற்கு #509ஐ படிக்கவும்)
புளிப்பில்லாத ரொட்டியும் திராட்சை ரசத்தையும் பயன்படுத்தும்படி வேதம் சொல்லியிருக்க கிறிஸ்தவ மதத்தினர், கடையில் விற்கும் புளித்த ரொட்டியையும் (ஈஸ்ட் போட்ட Bread) போதையூட்டும் வைன் (wine)ம் பயன்படுத்தி துணிந்தனர்.
சபையானது கூடி வரவேண்டிய அவசியம் உள்ளது. பந்தியில் கலந்து கொள்ளும் போது வாராந்திர சுய சுகாதார பரிசோதனை செய்து கொள்கிறது. 1 கொரி. 11:27
கர்த்தருடைய பந்தியானது சபையாக ஒன்றுகூடும் போது இது கடைபிடிக்கப்படுகிறது. 1 கொரி. 11:17, 18, 20, 33, 34
*சபையானது – உடல் அளவில் (physically) ஒன்று கூடுவது அவசியமா*?
1கொரி 10:17ல் அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒரே அப்பத்தில் பங்குபெறும் அனைவரும் ஒரே சரீரமாக இருப்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
கர்த்தருடைய பந்தியை கவனமாக கையாள வேண்டும். அது கர்த்தரின் மரணத்தை நினைவுகூறுதலாகும். கர்த்தரின் மரணத்தின் மூலம் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் மோசேயின் நியாயபிரமாணம் முடிந்து கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையில் இருக்கிறோம் என்றும் கிறிஸ்து மீண்டும் வருகிறார் என்பதை நாம் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய கடமையையும் நினைவு கூறுகிறோம். 1கொரி. 11:24-26
சபை கட்டிடங்களில் கூடுவதை தான் அரசாங்கம் தடுத்திருக்கிறதேயன்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் சேர்ந்து உட்காருவதற்கு அரசாங்கம் தடைவிதிக்கவில்லை.
சபை என்பது தனி நபரைக்குறிக்கிறது. எபே. 1:23
அதே வேளையில் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கூடுவதை சபை என்றும் அழைக்கப்படுகிறது. 1கொரி. 14:28, 11:18
*ஏன் ஊழியக்காரர்கள் இன்டெர்னெட் மூலமாக இந்த முறையை கொண்டு வருகிறார்கள்*?
ஆரோன் அழைக்கப்பட்டது போல புதிய ஏற்பாட்டில், கிறிஸ்தவத்தில் எந்த மனிதரையும் பிரத்யேகமாக ஊழியத்திற்கென்று தேவன் அழைப்பதில்லை. எபி. 5:1-5
கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிந்த யாவரும் ஆசாரியர் என்று வேதம் சொல்கிறது. 1பேதுரு 2:5, 9, வெளி. 1:6, 5:10
கிறிஸ்து ஒருவரே நமக்கு பிரதான ஆசாரியர். எபி. 4:14, 5:10, 6:20
ஆகவே பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட எவரும் கர்த்தருடைய சரீரத்தில் ஒரு அங்கமாக வித்தியாசமில்லாமல் சேர்க்கப்பட்டவராகையால் கர்த்தருடைய பந்தியை கொடுப்பதற்கு எந்த ஆண்களும் தகுதியானவரே. அதிகாரம் மற்றும் உபதேசம் பந்தி பகிரும் போது அவசியப்படுவதால் ஞானஸ்நானம் பெற்றாலும் பெண்கள் அதை நடத்த வேதம் அனுமதிக்கவில்லை. 1தீமோ. 2:12
வேதம் இப்படி சொல்லியிருக்க - ஆரோனைப் போல தாங்கள் அழைக்கப்பட்டவர்கள் என்றும் பிரத்தியட்சமாக ஊழியத்திற்கென்று அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் என்றும் தங்களை தாங்களே தங்கள் நிறுவனங்கள் மூலம் தகுதிப்படுத்திக்கொள்வதால் – கர்த்தருடைய பந்தியை ஊழியர்கள் தான் நடத்த வேண்டும் என்று முன் வைக்கின்றனர்.
ஆனால் வசனத்தின் படி கூடி வருவது அவசியம் என்பதால் ஒரு வீட்டார் அல்லது இரு வீட்டார் சேர்ந்து கூடி - அவசியப்பட்டால் ஊழியர் கொடுக்கும் செய்தியை டிவி யில் கேட்டு பெலப்பட்டு ஒன்றாக பாடல் பாடி தேவனை ஸ்தோத்தரித்து தயார் செய்து வைத்திருக்கும் கர்த்தருடைய பந்தியை தாங்களே தங்களுக்குள் ஜெபம் செய்து பங்கெடுப்பது வேதத்தின் படி சரியானது.
ஊழியர் ஆன்லைனில் தன் குடும்பத்தோடு பங்கெடுக்கும் போது நீங்களும் அதே வேளையில் உங்கள் வீட்டில் 1க்கு மேற்பட்டவர்கள் சபையாக கூடி பங்கெடுப்பதிலும் உபதேச குறையில்லை.
ஆனால் அவர் ஜெபித்ததும் உங்கள் வாயை திறக்க சொல்லி கேமிராவில் அப்பத்தை காட்ட நீங்கள் அதை டிவி ஸ்கிரீனில் தொட்டு விட்டு பின்னர் சொந்தமாக தயாரித்த அப்பத்தை பிட்டு தன் வாயில் போட்டு புசிக்கும் இந்த நடைமுறை செயல்கள் கேலிகூத்தானவை.
வாரந்தோறும் சேர்க்கும் காணிக்கையை அதே போல கேமிராவில் காட்டிவிட்டு சொந்த பையில் போட்டுக்கொண்டால் – உங்கள் ஊழியர் ஏற்றுக்கொள்வாரா என்பது அவருக்கே வெளிச்சம் !!
வீட்டுக் காவலில் இருந்தபோது அப்போஸ்தலன் பவுல் அனைவரையும் காண வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே சாட்சி என்று தன் உள்ளான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பிலி. 1:8.
ஆகவே, ஒருவரை ஒருவர் நேரில் பார்க்ககூடாத இந்த கொள்ளை நோய் காலத்தில் சத்தியத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ளாமல் விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்.
கூடிய விரைவில் சபையாக அனைவரும் ஒன்று கூட ஜெபிப்போம்.
இக்காலங்களில் உள்ள டெக்னாலஜி வசதிகளை சத்தியத்திற்கு உட்பட்டு உபயோகப்படுத்தி தேவனை மகிமைப்படுத்துவோம்.
தங்கள் சபையினரும் ஆத்துமாக்களும் புதியவர்களும் வளர்ந்து வருபவர்களும் விசுவாசத்தில் குன்றி குளிர்ந்து போய்விடாதபடிக்கு சபை ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒருவருக்கொருவர் ஜெபத்தில் தாங்குவோம்.
வயிற்று பசியில் – பசி பசி என்று ஆகாரத்திற்கு ஏங்கி நிற்கும் ஒரு பிள்ளைக்கு டிவியில் பிரியாணியை காட்டி சாப்பிட்டுக்கொள் என்பது பம்மாத்து வேலையோ.
ஆன்லைனில் கர்த்தருடைய பந்தியை கொடுக்கிறேன் என்று சொல்வது வேதத்தின்படி தவறு. சத்தியத்தை உணர்ந்து கிறிஸ்துவிற்கு கீழ்படிய வேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக