புதன், 6 மே, 2020

#928 - தேவனுடைய கிரியையான பிகெமோத் மற்றும் லிவியாதானை குறித்து விளக்கவும்.

#928 - *தேவனுடைய கிரியையான பிகெமோத் மற்றும் லிவியாதானை குறித்து விளக்கவும்.* யோபு 40-41 அதிகாரங்கள்.

*பதில்*
தேவனுக்கும் யோபுவுக்கும் இடையிலான இறுதி சந்திப்பின் இரண்டாம் கட்டத்தில் சர்வவல்லவர் மனிதனின் கட்டுப்பாட்டு திறனுக்கு அப்பாற்பட்ட ஒரு பயங்கரமான உயிரினத்தை குறித்து தெரிவிக்கிறார்.

இந்த அற்புதமான புத்தகத்தில், யோபு என்ற இந்த ஊத்ஸின் பிரபலமான மனிதர் தன் வாழ்க்கையில் கண்ட தொடர்ச்சியான பேரழிவுகளினால் சொத்துக்களை இழந்து, பத்து குழந்தைகளையும் இழந்து, சொந்த சரீரமும் மற்றவர் பார்த்தால் அரோசிக்கப்படும் நிலையில் அருவருப்பானதாக இருக்கும் நிலையில் மனைவியும் நண்பர்களும் வெறுக்கும் சூழ்நிலையில் நிலைகுலைந்து நிற்கும் நேரம் இது.

போதுமான அளவிற்கு யோபு தன் சார்பாக பேசிய பின், விரக்தியடைந்த தன் விசுவாசிக்கு தேவன் தன் பதிலையளிக்கிறார். யோபுவிடம் தோராயமாக அறுபது ஊடுருவக்கூடிய கேள்விகளை கேட்கிறார்.

முதலில், உயிரற்ற படைப்புடன் தொடர்புடையது (யோபு 38: 4-38),
பின்னர் உயிருள்ள உலகத்தைப் பற்றிய குறிப்பு (யோபு 38: 39-39: 30).

தொடர்ந்து இரண்டு பயங்கர சக்திவாய்ந்த உயிரினங்களை குறித்து வெளிப்படுத்துகிறார்.

ஒன்று நிலத்தின் உயிரினம் பிகெமோத் (யோபு 40:15-24), மற்றும் கடலின் மற்றொன்று, லிவியாதான் (யோபு 41:1-34).

இந்த மிகப்பொிய உயிரினங்கள் எதுவும் யோபு உட்பட எந்த மனிதனாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதாவது பூமியின் மீது தேவனுடைய தார்மீக செயல்பாட்டை விமர்சிக்க மனிதன் தகுதியற்றவன் என்று வெளிப்படுத்துகிறார்.

இந்த சுருக்கமான பின்னணியுடன் கவனிக்கவும்:

இந்த அற்புதமான மிருகங்களை அவர் படைத்ததை யோபுவின் சாந்தகுணம் மற்றும் சிறுமைஆகியவற்றுடன் ஒப்பிட்டு தேவன் பதிலளிக்கிறார்.

பிகெமோத் என்றால் என்னவென்று தெளிவாக நாம் சொல்வதற்கில்லை. சிலர் நீர் யானை என்றும் சிலர் முதலை என்றும் வாதாடுகிறவர்கள் உண்டு. ஆனால் யோபு 40-41ல் நமக்கு கொடுக்கப்பட்ட தடயங்களுடன் 100 சதவீதம் ஒத்துப்போவதில்லை.

பிகெமோத்தை குறித்து யோபுவிற்கு பரிட்சயம் இருந்திருக்க வேண்டும். அது தாவரம் சாப்பிடக்கூடியது (யோபு 40:15), தண்ணீருக்கு அருகில் வசிக்கிறது (யோபு 40:21–22), மிகவும் வலிமையானது (யோபு 40:16-18), அதன் படைப்பாளரால் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு பிகெமோத்தை கைப்பற்றுவது சாத்தியமில்லை (யோபு 40:24).

யோபு 40:17ன்படி இந்த உயிரினத்திற்கு சிறிய மரக்கிளைப் போன்ற வால் இருப்பதாகக் கூறுகிறது.

தேவன் மனிதனைப் படைத்த அதே நாளில் எல்லா விலங்குகளும் படைக்கப்பட்டன என்று ஆதியாகமம் 1:24–27 கூறுகிறது.

இது எப்போது அழிந்தது என்பதை கணிக்க முடியாவிட்டாலும் யோபுவின் காலத்தில் இருந்தன என்பது நம்பத்தகுந்தது.

யோபு தேவனிடம் கேள்வி எழுப்பியபோது, தன்னைக் கேள்வி கேட்கத் தயாராக இருக்கும்படி தேவன் சொன்னார் (யோபு 40:3-7)

பின்னர், தேவன் பிகெமோத் மற்றும் லிவியாதானை சுட்டிக்காட்டுகிறார். இந்த மிருகங்களை வேட்டையாடுவதற்கான யோபுவின் இயலாமையை ஒப்பிட்டுப் பார்க்க கேட்கிறார்.

லிவியாதான் யோபு 41ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். பரலோகத்தின் செயல்பாடுகள் பற்றி யோபு எவ்வளவு குறைவாகவே அறிந்திருந்தார் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் கர்த்தர் கடுமையாக கேள்வி எழுப்பினார்.

யோபு இந்த பூமியின் சூழலைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருப்பதால், முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கிய அற்புதமான தேவனுடைய தீர்மானத்தை குறித்து விமர்சனம் செய்வதற்கும் நாம் தகுதியற்றவர்கள் என்பதை உணர்கிறோம்.

உருவாக்கப்பட்ட உலகின் அற்புதங்களில் ஒன்றாக 40ம் அதிகாரத்தில் பிகெமோத்தையும் பின்னர், 41ம் அதிகாரத்தில், ஒரு திகிலூட்டும் கடல் உயிரினத்தையும் யோபுவிற்கு தெரிவிக்கிறார் தேவன்.

லிவியாதானின் துல்லியமான அடையாளம் தெளிவற்றதாக மறைக்கப்பட்டுள்ளது. இது பழங்கால உலகின் ஒருவித நீர்வாழ் உயிரினமாக இருந்தது. சில எழுத்தாளர்கள் இது ஒரு திமிங்கலம் அல்லது ஒரு பெரிய டால்பின் என்று பரிந்துரைத்துள்ளனர் - இருப்பினும் இந்த விலங்குகள் வசனத்தில் வழங்கப்பட்ட விளக்கத்திற்கு பொருந்தவில்லை.

யோபு 41ம் அதிகாரம் மூலம் லிவியாதான் என்ற இந்த உயிரினம் நிச்சயமாக ஒரு உண்மையான கடல் "அசுரன்" என்று தெரிவிக்கிறது. முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். இந்த உயிரினத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.

எனவே, மேலே எழுதியபடி அறியவேண்டிய தகவல் இதுதான். பூமியின் குடிமக்களுடன் ஒப்பிடும்போது தேவனுடைய செயல்பாட்டை தீர்மானிக்கும் நிலையில் இல்லை.

இதை தான் நாம் உணர வேண்டும். தமிழில் வழக்கச் சொல்லான “கற்றது கையளவு – கல்லாதது உலகளவு” என்பது இதன் மூலம் ஊர்ஜீதமாகிறது.

அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் லிவியாதான் என்ற பதம் ஐந்து இடங்களில் காண முடிகிறது. யோபு 3:8ல் வரும் லிவியாதான் என்பது "துக்கம்" என்ற அர்த்தத்தில் உள்ளது.

எபிரேய வேதாகமத்தில், லிவியாதான் என்ற சொல், மேற்கூறிய விதிவிலக்குடன், அங்கீகரிக்கப்பட்ட பதிப்பில் எப்போதும் மொழிபெயர்க்கப்படாமல் விடப்படுவது பின்வரும் வசனங்களில் காணப்படுகிறது:

யோபு 3:8; யோபு 41:1; சங். 74:14; சங். 104:26; ஏசா. 27:1.

யோபு 3:8 மற்றும் யோபு 41:1ல், முதலை என்ற அர்த்தத்தில் எபிரேய வார்த்தையால் குறிக்கப்பட்ட உயிரினம்.

சங். 74:14லும் இதே வார்த்தை வருகிறது.
சங். 104:26ல் தமிழில் திமிங்கலம் என்றிருந்தாலும் எபிரேயத்திலும் ஆங்கிலத்திலும் லிவியாதான் என்று உள்ளது.

ஆனால் ஏசா. 27:1ல் லிவியாதான் என்று சொல்லப்படும் விலங்கு என்பது ஓரளவு நிச்சயமற்றது.

லிவியாதான் என்ற சொல் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படாததால், ஊடுறுவுகின்ற வளைந்த பாம்பு" என்பது தெற்கு மற்றும் மேற்கில் ஆப்பிரிக்கா பகுதிகளில் பொதுவான பெரிய பாறைவாழ் பாம்புகளைக் குறிக்கும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் எழுதுகின்றனர் (ஸ்மித் வேதாகம சொல் அகராதி வரையறை)

மெய்யாகவே நம்முடைய தேவன் வல்லவர், சர்வ வல்லவர். அவரே நாம் தொழுது கொள்வதற்கும் ஆராதிப்பதற்கும் மகத்துவத்திற்கும் தகுதியானவர்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக