வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

#754 - பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்ற ஏசாயா 66:17ல் வசனத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் வந்ததாக சொல்லப்படுகிறதே?

#754 - *பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்ற ஏசாயா 66:17ல் வசனத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் வந்ததாக சொல்லப்படுகிறதே?* சரியானதா? விளக்கவும்*.

*பதில்*
சூழ்நிலைக்கேற்ப சில வரிகள் வந்ததும் அதை நாம் சம்பந்தப்படுத்தி கொள்வது இயல்பானது தான்.

ஆனால் வேதத்தை படிக்கும் போது எப்போதும் முன்னும் பின்னும் அதன் சாரம்சத்தோடு படிக்க வேண்டும். இல்லையென்றால் உண்மையை அறிந்து கொள்ளாமல் நம் இஷ்டத்தை வலியுறுத்த ஆரம்பித்து விடுவோம்.

ஏசாயா புத்தகம் ஒரு மினி பைபிள் என்று வேத வல்லுனர்கள் அழைப்பதுண்டு.

வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளது போல ஏசாயாவில் 66 அதிகாரங்கள்.

66ம் புத்தகத்தின் (வெளிபடுத்தல்) கடைசி பகுதிகள்  கிறிஸ்துவின் வருகையையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து சொல்லப்படுகிறது போல ஏசாயா 66ம் அதிகாரத்தின் 15லிருந்து 24ம் வசனங்கள் வரை கர்த்தருடைய நியாயத்தீர்ப்பையும் மகிமையையும் வெளிப்படுத்தும் பகுதி இது.

கர்த்தரை அண்டி இரட்சிப்பை அடையாமல் தங்கள் விருப்பப்படி தொலைதூரம் கால்நடையாக போவதும்,
எருசலேமுக்கே காவடி எடுப்பதும்,
சிலுவையில் தங்களை அறைந்து கொள்வதும்,
40 நாள் உபவாசம் இருந்து தன்னை பரிசுத்தப்படுத்திக்கொள்கிறேன் என்று நம்புவதும்;
கிறிஸ்துவின் இரட்சிப்பின் திட்டத்திற்கு கீழ்படியாமல் சொந்தமாக பரிசுத்தம் செய்து கொண்டேன் என்று நம்பி கொண்டு இருப்பவர்கள் உண்மையிலேயே தங்கள் பாவங்கள் கழுவப்படாமல் பரலோகத்தில் பிரவேசிப்பதை இழக்கிறார்கள். (ஏசா. 66:17)

மேலும் தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்கள் என்று இந்த வசனத்தில் வருவது – விக்கிரக ஆராதனைக்காரரை குறிக்கிறது. ஏசா. 65:3-6

அடுத்ததாக பன்றி மற்றும் எலி இறைச்சியை குறித்து சொல்லப்படுவது – புறஜாதியினரையும் அவர்கள் பழக்கவழக்கங்களையும் குறிக்கிறது. ஏசா. 65:4

பன்றியும் எலியும் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள் சாப்பிடக்கூடாது என்று விலக்கப்பட்டவை. லேவி. 11:41-42, யாத். 8:26, உபா. 20:16-17, ஏசா. 65:3

தேவன் விலக்கினவற்றை பின்பற்றினவர்கள் சங்கரிக்கப்படுகிறார்கள்.

அதாவது இங்கு இறைச்சியை அல்ல – ஒப்பனையாக பாவத்தை குறிக்கிறது. ஏனென்றால் புதிய ஏற்பாட்டில் ஆகாரத்தை குறித்த எந்த தடையையும் தேவன் எடுத்துப்போட்டார் என்பதை நாம் அறிய வேண்டும். அப். 10:15

பன்றியிறைச்சியை இன்றும் ஐரோப்பியர்கள் / அமெரிக்கர்கள் / ரஷியர்கள் மற்றும் அநேக வெளிநாட்டினர் ருசியாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.

ஆகாரத்தை குறித்து அல்ல – விலக்கப்பட்டவையை செய்வது பாவம் என்றும் அவர்கள் சங்கரிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் என்பது மிக கொடியதாக இக்காலங்களில் அனைத்து நாட்டின் விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.

பணமோ புகழோ கம்யூனிஸமோ செழிப்போ அறிவோ விஞ்ஞானமோ விக்கிரகமோ நாத்திகமோ ஆத்திகமோ எதுவும் ஒரு பொருட்டல்ல – தன்னை படைத்த கடவுளை தேடினால் மாத்திரமே இந்த கொள்ளை நோய்க்கு விடிவுகாலம் வரும் என்ற எச்சரிப்பின் காலத்தில் இருக்கிறோம்.

குளிர் சாதனங்கள், மின்தூக்கி, சகல மருத்துவ வசதிகள், பிராணவாயு வழங்கும் கருவிகள், மின்சாரம் விட்டுப்போனால் அதை சீராக்கும் கருவி என்று சகல வசதியோடு 1000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் ஒரு மிகப்பொிய மருத்துவமனையை ஒன்பதே நாளில் கட்டி முடிக்கக்கூடிய சீனாவின் விஞ்ஞானம் மற்றம் தொழில் வளர்ச்சியை கண்டு உலகமே வியந்து போனாலும் – உயிர் பிழைக்க வழியில்லாமல் விழிபிதுங்கி உலகமே அஞ்சி கொண்டிருக்கிறது.

மனித ஞானமும் அறிவும் தேவனுக்கு முன்பாக தூசியும் பைத்தியமுமாக இருக்கிறது. பிர. 2:12, ஏசா. 44:25, 1 கொரி. 3:19

எந்த விக்கிரகமும், சிவப்பு நிறமும், பூஜைகளும் கம்யூனிஸமும்  பரலோகத்திற்குள் எடுத்து செல்லாது. கிறிஸ்து ஒருவரே அதற்கு வழி. கீழ்படியாதவர்கள் மீது கொள்ளைநோய் வரும் என்று கண்டிருக்கிறோமே. யாத். 9:3, எரே. 34:17

இந்த கொள்ளை நோயிலிருந்து அவர்கள் விடுபட உண்மையான தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்ற உணர்வை தேவன் கொடுக்கும்படியாக அவர்களுக்காக நாம் மண்றாடுவோம். இரட்டுத்தி சாம்பலில் உட்கார்ந்து தங்களை தாழ்த்தினால் அவர்கள் மாத்திரம் அல்ல நாமும் தப்பித்துக்கொள்வோம். சங். 35:13

இந்த நோய் அல்லது இது போன்ற வேறே கொள்ளை நோய்கள் நம்மையும் பிற்காலங்களில் தாக்கலாம்.. பாவத்தை விட்டோய்ந்து இரட்சிப்பை தேடி கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக