வெள்ளி, 10 மே, 2019

#145 - புறஜாதிகளுக்கு சுவிசேஷம் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன? வரலாற்று ஆதாரங்கள் மற்றும் வேத குறிப்புகள்.

#145 - *புறஜாதிகளுக்கு சுவிசேஷம் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன?* வரலாற்று ஆதாரங்கள் மற்றும் வேத குறிப்புகள் தரவும்.

*பதில்*:
மாம்சத்தின்படி இஸ்ரவேலர் அல்லாதோர் அனைவரும் புறஜாதியினர் என்று வேதம் சொல்கிறது. ரோ. 9:24, ரோ. 2:14, எபே. 2:11-12

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட புறஜாதிகள் என்பது இஸ்ரவேலர் அல்லாத நம்மைப்போல உள்ளவர்களை.

உங்களுடைய கேள்வியில் புறஜாதிகள் என்று குறிப்பிடுவதை *கிறிஸ்தவரல்லாதோர் என்ற புரிதலோடு* இந்த பதிலை எழுதுகிறேன்.

மிகவும் அழகாக பேதுரு அப்போஸ்தலன் கொர்நேலியுவிற்கு சொல்லும் வார்த்தைகள் நமக்கு முன்னோட்டம்.
படிக்கவும் அப். 10:34-43.

மேலும் அத்தேனே பட்டணத்தாருக்கு பவுல் பிரசங்கித்த முறையும் நமக்கு பெரிய சவால்.
படிக்கவும் அப். 22ம் அதிகாரம் முழுவதும்.

கிறிஸ்தவரல்லாதவரிடத்தில் பேசும்போது - அவர்கள் தெய்வங்களை ஒருபோதும் சுட்டிக்காட்டி பேசக்கூடாது. அவர்களுடைய பக்தி அவர்கள் அறிந்த வண்ணம் வைராக்கியமாக இருக்கிறார்கள். அந்த பக்தியை அவமாக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.

எல்லா மதங்களும் நன்மையை தான் போதிக்கிறது. நாம் நல்லவர்களாக வாழவேண்டும் என்று எல்லா அரசாங்கங்களும் சொல்கிறது.

ஆனால் எந்த அரசாங்கமும் ஒரு குற்றவாளியை சட்டபடி *மன்னித்து* வெளியே விடாது.

தண்டனை கொடுக்கும் அல்லது நிரபராதி என்று விடுதலை செய்யும். அது போல தான் எல்லா மதங்களும்.

தவறு செய்தால் - சாமி கண்ணை குத்தும் அல்லது நாக்கை அறுத்துவிடும் என்பது அவர்களின் தெய்வங்களை குறித்த பயம்.

*அப்படியென்றால் கிறிஸ்தவத்தில் என்ன வித்தியாசம்*?
கிறிஸ்தவம் மதம் அல்ல.

பரலோகம் எப்படி போக வேண்டும் என்று நமக்கு காண்பித்து அந்த வழியை கற்றுகொடுக்கும் மார்க்கம் (வழி) கிறிஸ்தவம் – மத் 22:16, மாற்கு 12:14, லூக் 20:21,  அப். 9:2, 18:25-26, 19:9, 22:4, 24:14, 24:22, 25:19, 26:5, எபி. 10:19-20, யாக். 5:20.

அழுக்கான ஒருவன் – சுத்தமான தண்ணீரில் மூழ்காமல் - அழுக்கு தண்ணீரில் எவ்வளவு கழுவினாலும் சுத்தம் அடையபோவதில்லை.

ஏற்கனவே ஒரு குழியில் விழுந்து கிடப்பவர்கள் – கூட இருக்கும் மற்றவர்களை தூக்கிவிடமுடியாது !! எரே. 6:15,

தவறில் விழுந்து கிடப்பவர் – தவறு செய்தவர்களை மீட்க முடியாது.. மத். 15:14

உயிரோடு கூடவே இருக்கும் சொந்த அப்பாவை அறியாமல் வேறொரு படத்தை பார்த்து அப்பா தகப்பனே என்று சொந்தம் பாராட்டினால் – கூடவே இருந்து பார்த்துக்கொண்டிருந்த உண்மையான அப்பா எவ்வளவு வேதனைப்படுவார்?

நம்மை தன் சொந்த கரங்களால் வனைத்து உருவாக்கின தேவனை அறியாமல் பல வகையான விதங்களில் அறியாமல் வேறொன்றை வைத்து உரிமை கொள்ளும் போது இந்நாள் வரை உண்மையான கடவுள் நம்மீது எவ்வளவு கவலையோடு இருப்பார் என்பதும் நாம் அறியாமல் அவருக்கு விரோதம் செய்தது விளங்கும்.

எத்தனை மைல் தூரம் கால் நடையாய் நடந்து போனாலும், காவடி எடுத்தாலும், சொந்த சரீரத்தை கீறிக்கொண்டாலும், மொட்டை அடித்துக்கொண்டாலும், அன்னதானம் வழங்கினாலும், மண்டகாபடி செய்தாலும், ஆயிரம் அல்லது கோடி ஸ்தோத்திரம் எழுதினாலும் உச்சரித்தாலும் – இவை எல்லாம் சொந்த முயற்சிகள் !!

நாம் ஏற்கனவே கீழே விழுந்தவர்கள். ஆகையால் – நம்மை நாமே அதே அழுக்கில் எவ்வளவு முயற்சி செய்தாலும் சுத்தப்படுத்திக்கொள்ள முடியுமா?

ஆகவே தான் -
ஆதியிலே இருந்த பரிசுத்தமுள்ள தேவன் - உலகத்தையே உருவாக்கி - பாவம் செய்தவர்களை மீட்கும்படி பரிசுத்தமுள்ள தேவனே மாம்சத்தில் மனிதனாக இறங்கிவந்து நமக்கு பரிசுத்தத்தின் பாதையை உண்டு பண்ணினார். (1 தீமோ. 3:16)

அப்படிப்பட்ட இயேசுவை நம்பி, அவர் போதனையை அறிந்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவரை பற்றிக்கொண்டு, அவர் கட்டளைக்கு கீழ்படியும் போது – நம்முடைய பாவத்தை மன்னித்து பரலோகம் போகும் வழியின் நிச்சயத்தின் வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளியாகிறோம்.

*வரலாற்று சான்றுகள்*:
பரிசுத்த வேதாகமம் 66 புஸ்தகங்கள் கொண்டது.
40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பலவேறு காலகட்டங்களில் ஏறத்தாழ 4006 வருடங்களை அடக்கி சுமார் 1600 வருட இடைவெளியில் பலதரப்பட்ட ஜனங்கள் ஒருவரை ஒருவர் அறியாத காலத்தில் எழுதியிருந்தாலும் அவை அனைத்தும் – இயேசுவை நோக்கியே பிரதிபலிப்பது எவ்வளவு ஆச்சரியம் !!

இப்படி முரண்பாடற்ற ஒரு உன்னதமான எழுத்துக்களை தன் ஜனங்களை கொண்டு தேவனே எழுதினார் என்று 2தீமோ 3:16ல் வாசிக்கும் போது நம்பாமல் இருக்கவே முடியாது.

வேதாகமத்தில் உள்ளவைகளை எழுதியவர்கள் பரிசுத்தவான்கள்.

வாழ்க்கையில் பரிசுத்தத்தை கடைபிடித்தவர்கள்.

அனைவரும் உயிரோடு வாழ்ந்தவர்கள்.

இன்றும் அவர்களுக்கு சரித்திரத்தில் இடமுண்டு.

வேதாகமத்தில் எல்லா சம்பவங்களும் – கால நேரத்தோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இயேசு பிறந்த இடம் வாழ்ந்த இடம் சிலுவையில் இறந்த இடம் அடக்கம்பண்ணப்பட்ட இடம் வானத்திற்கு ஏறிசென்ற இடம் – இன்னமும் அப்படிப்பட்ட இடங்களை எவரும் நேரில் அங்கு சென்றால் காணமுடியும். 2016ல் நான் போய் நேரடியாக பார்த்தும் இருக்கிறேன்..

வேதாகமம் ஒரு காவியமோ – கதையோ – புராணமோ அல்ல.
உலகமொழியில் சொல்ல வேண்டுமென்றால் வேதாகமம் ஒரு சரித்திர புத்தகம்.

ஆகவே தான் இது வரை – முழு வேதாகமமும் 275 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2,000 மொழிகளில் வேதாகம “பகுதிகள்” மொழிபெயர்க்கபட்டுள்ளது.

வேதத்தில் குறிப்பட்டவை நிஜத்தில் நடந்தது. மத். 1:22, 2:15, யோ. 15:25, லூக்கா 21:22.

இனி இப்படி தான் நடக்கும் என்று சொல்லப்பட்டவைகளும் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டேயிருக்கிறது.

வானத்திற்கு ஏறிபோன இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது (அப். 1:11) – அவரை ஏற்றுக்கொண்டு அவர் சொல்படி நடக்கிறவர்கள் மாத்திரம் பரலோகம் போவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (மத். 24:31, வெளி. 20:15)

எழுதப்பட்டவை எல்லாம் உண்மையாக நடந்தேறியிருக்கும் போது இதுவும் நிச்சயம் நடக்கும் – தயாராக இருங்கள் என்று சொல்வது அவசியம்.....

இன்னும் ஏராளம் ஏராளம்... இவைகள் போதுமென்று நம்புகிறேன்.. நல்ல இந்த கேள்விக்காய் நன்றி பிரதர்

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக