*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரே ஒரு விண்ணப்பத்தை ஜெபிக்க கொடுத்தாலும், அதை எவ்வளவு ஜோடிக்க முடியுமோ அவ்வளவு ஜோடித்து விலாவாரியாக வசனங்களை அடுக்கடுக்காக சொற்றொடராக சொல்லி, வியர்த்து விறுவிறுத்து ஆமென் ஆமென் ஆமென் என்று போடுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
அவர்கள் ஜெபித்து முடித்ததும், சுமாராக அமைதியாக பொறுமையாக ஜெபிப்பவர்களுக்கு ஐயோ நமக்கு இப்படி ஜெபிக்க தெரியவில்லையே என்று பயமே வந்து விடுகிறது.
போதகனை மிஞ்சுவது தானே சீஷனின் முயற்சி !! (மத். 10:24)
ஜெபத்தை குறித்து வேதத்தில் உள்ள குறிப்புகளோ முற்றிலும் வித்தியாசமானது...
ஜெபம், சுருக்கமாக இருந்தால் மிக மிக மிக போதுமானதே !! (பிர. 5:2)
திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகளையே சொல்வதும், உச்சரிப்பதும் வீண் (மத். 6:7). அப்படி ஜெபிப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார் இயேசு !!
ஒரு மணி நேர ஜெபம், 24 மணி நேர ஜெபம் என்று குடும்பப் பெண்களை வசப்படுத்தி குடும்பங்களையும் கவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிற இந்த கால நவீன போதகர்களை குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். மாற்கு 12:40
அவர்களுக்கும் அதிக ஆக்கினை உண்டு – மத். 23:14, லூக்கா 20:47
மேடை போட்டோ, விளம்பரப்படுத்தியோ, குழுவில் தெரிவித்தோ, பாஸ்டரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டோ அல்ல, *ஜெபம் பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்*. – மத். 6:6
சிறைபிடித்துக்கொண்டு வரப்பட்ட சிறு பிள்ளை கூட புரிந்து கொள்ளும்படி எளிமையாக ஜெபம் இருந்திருக்கிறது.. (2 இரா. 5:2-3)
தாழ்த்தி, உற்சாகமாய், ஊக்கத்தோடு நம்பிக்கையோடு சுருக்கமாக உத்தமமாய் தேவனிடத்தில் ஜெபிப்போம்.
தேவன் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பவர் (சங். 121:4)
விக்கிரகஆராதனைக்காரர் செய்வது போல உரத்த சத்தமாய்க் கரங்களை தட்டிக்கொண்டே ஜெபித்து அவரை எழுப்ப வேண்டிய அவசியமில்லை (1 இரா. 18:27)
இவ்வகை கூட்டத்தாரின் நிமித்தம் உண்மைக் கிறிஸ்தவரின் நற்பெயரே சமுதாயத்தில் கெட்டுப்போனது என்று “நான் சொல்லி எவரும் அறிய வேண்டியதில்லை”...
அவர் ஜீவனுள்ளவர். நம் தாழ்மையான ஜெபத்தை கேட்டு நிச்சயமாய் பதில் தருகிறவர்.
மிகக் கொடுமையான கொள்ளைநோயின் காலங்களில் நாம் வாழ்கிறோம். அனைவருக்காகவும் நாம் ஜெபிப்போம். விளம்பரத்திற்காக அல்ல, உண்மையாய் கண்ணீர்விட்டு முழுமனதுடன் நம் பிதாவிடம் மன்றாடுவோம். நிச்சயம் பதிலளிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக