புதன், 14 ஏப்ரல், 2021

#1090 - கிறிஸ்தவப் பண்டிகைகளைப் புறக்கணிப்பவர்கள் ஏன் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்? புத்தாண்டு வேதாகமத்தில் உள்ளதா? வருட மற்றும் மாதாந்திர வாக்குத்தத்த வசனங்களைக் குறித்தும் விளக்கவும்

#1090 - *கிறிஸ்தவப் பண்டிகைகளைப் புறக்கணிப்பவர்கள் ஏன் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்? புத்தாண்டு வேதாகமத்தில் உள்ளதா? வருட மற்றும் மாதாந்திர வாக்குத்தத்த வசனங்களைக் குறித்தும் விளக்கவும்*

*பதில்* : எந்த பண்டிகையும் கிறிஸ்தவம் அல்ல. ஆகவே கிறிஸ்தவப் பண்டிகைகள் என்று சொல்வது முறையல்ல. அவைகளை மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உட்புகுத்திக்கொண்டு கிறிஸ்தவத்தை மதமாக்கினார்கள்.

உங்கள் கேள்வியை சில விஷயங்களின் அடிப்படையில் கவனிக்க வேண்டியுள்ளது.

நம்முடைய எந்த நடைமுறையும் சூழ்நிலைகளின் காரணமாக தோன்றியிருந்தாலும், இறுதியில், அப்படிப்பட்ட எந்த கொள்கையையும் நீதியாய் கையாள்வதற்கு வேதமே நமக்கு அடிப்படை.

சிலைகளுக்கு முன்பு பலியிடப்பட்ட இறைச்சியை உண்ணும் ஒரு சம்பவத்தில், முதல் நூற்றாண்டில் மிகவும் உயிரோட்டமான பிரச்சினை இருந்தது. ஒரு சிலைக்கு, இறைச்சியை பலி செலுத்தினார்கள். அதன் ஒரு பகுதியை பலியாக ஏறெடுக்கப்பட்டதால், மீதமுள்ளவை சந்தையில் பொதுவான உணவாக விற்கப்பட்டது. ஒரு சிலையுடன் அந்த இறைச்சி தொடர்பு இருந்ததால் சர்ச்சை எழுந்தது.  1 கொரிந்தியர் 8: 1-13.

இதற்கு பவுல், ஒருவருடைய மனசாட்சி புண்படுத்தவில்லை என்றால், அவர் அந்த இறைச்சியை சாப்பிடலாம் என்றார். ஆயினும், ஒரு எச்சரிக்கை உள்ளது. ஒருவர் "பலவீனமான" (அதாவது முதிர்ந்த அறிவு இல்லாமல்) சேதமடையக்கூடிய சூழலில் ஒருவர் இருந்தால், அந்த பலவீனமான சகோதரனின் மனசாட்சி காயமடையாதபடி, அந்த சந்தர்ப்பத்தில் தவிர்ப்பது நல்லது என்றார் (வ9-10)

வாரத்தின் முதல் நாளில் கிறிஸ்துவின் மரணத்தை நினைக்கூற வேண்டும் என்ற கட்டளையைத் தவிர (லூக். 22:19) வேறு எந்த பிரத்யேகக் கட்டளையும் கிறிஸ்தவத்தில் கொடுக்கப்படவில்லை. கர்த்தருடைய பந்தியை அப்போஸ்தலரும், ஆதி சபையினரும் அதை கைக்கொண்டார்கள் என்றும் வேதாகமத்தில் காண்கிறோம். அப். 2:42, 20:7, 1கொரி. 11:17-24, 10:16

ஆகவே, நேரடியாக *விக்கிரகத்துடனும், விபசாரத்துடனும் தொடர்புடைய கிறிஸ்தவ மதப்பண்டிகைகளாகிய கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர்க்கும்*, புத்தாண்டு கூட்டங்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

உதாரணமாக, பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கவனியுங்கள். பண்டைய எகிப்தில், பார்வோனின் பிறந்த நாள் "புனித" நாட்களாக கருதப்பட்டது.  எந்த வேலையும் செய்யப்படவில்லை (McClintock and Strong 1969, 817). மேலும், John Lightfoot  குறிப்பிட்டது போல்: “யூத பள்ளிகள் பிறந்தநாளை விக்கிரகாராதனை வழிபாட்டின் ஒரு பகுதியாக வைத்திருப்பதை குறிக்கிறது” (1979, 217).

இக்காலங்களில் ஒரு மனிதன் தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசை வழங்கினால் அல்லது ஒரு குழந்தைக்கு பிறந்தநாள் விழா வைத்திருந்தால், நமது நம்பிக்கையை சமரசம் செய்துள்ளோம் என்று அர்த்தமா?

ஒரு விசேஷ தினத்தில் தனது மனைவியை இரவு உணவிற்கு அழைத்துச் சென்று பரிசுகளைக் கொடுக்கும் மனிதனைப் பற்றி என்ன நினைப்பது?

நிச்சயமாக, யாரும் அவ்வாறு குற்றம் சாட்ட மாட்டார்கள்.

*அப்படியென்றால் புத்தாண்டு தின கொண்டாட்டங்களை குறித்து என்ன சொல்வது*?
பழைய ஏற்பாட்டில் நியாயபிரமாணத்தின்படி, யூதர்களின் காலண்டர் முறையில் முதல் மாதமானது மார்ச் அல்லது ஏப்ரலில் வருவதாக காண்கிறோம். (யாத். 12: 2; உபா. 16: 1). அந்த நாளுக்காக எந்தவிதமான கொண்டாட்டத்தையும் தேவன் கட்டளையிடவில்லை.

புத்தாண்டு தினத்தன்று ஒரு கூட்டத்தினர் அதை ஒரு கேளிக்கை நாளாகவும், அந்த நாளில் எவ்வளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்க முடியுமோ அது அந்த வருஷம் முழுவதும் நீடிக்கும் என்ற ஒரு *ஆதாரமற்ற நம்பிக்கையில் மாம்சஇச்சைகளை நிறைவேற்றி குடியும், விபசாரமும், சகல அசுத்தங்களுடனும் கொண்டாடுவதும், மறுபுறம் அந்நாளை பக்திபரவசத்துடனும் ஒழுக்கத்துடனும் கடைபிடிப்பதையும்* நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஜனவரி 1ம் தேதி உலகம் துவங்கின நாள் என்ற ஆதாரமுமில்லை, அன்று இப்படி கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டளையும் வேதத்தில் இல்லை.

ஜனவரி 1ம் தேதியன்று, பிரத்யேக ஆசீர்வாத வசனத்தைத் தேடி எடுத்து *வேதாகம ஜோசியக்காரர்கள்*, தேவன் தனக்கு இந்த சபைக்காக வெளிப்படுத்தினதாக சொல்லி, தங்கள் ஜனங்களை வசியப்படுத்தி அவரவர் வீட்டுக்கு அனுப்பும் முறை இப்போது, ஒவ்வொரு மாதமுமே வந்துவிட்டது !!

ஒவ்வொரு நாளும் புதிய துவக்கமே.
படுக்கையை விட்டு எழுந்ததும், அந்த புதிய நாளில் ஜீவனை தந்த தேவனுக்கு நன்றி சொல்லி அந்த நாளில் நடக்கும் சகலமும் நன்மையாகவும் தேவனுக்கு மகிமையாகவும் இருக்கவேண்டும் என்று துவங்குவது அசீர்வாதம். மாற்கு 1:35, சங். 5:3, லூக்கா 4:42, 22:40, எபே. 6:18, சங். 127:1, யாக். 1:5

சமுதாய வழக்கத்தின்படி புத்தாண்டு கணக்கு துவங்கும் போது, புதிய நாளைப் போல புதிய வருஷத்தையும் மனதில் வைத்து இம்மட்டும் தேவன் செய்த நன்மைகள், பாராட்டின கிருபைகள், ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்லி, புதிய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுத்துக்கொள்வதினால் எந்த உபதேச கோளாறுகளும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், அன்று ஒரு பிரத்யேக வசனத்தை எடுத்துக்கொண்டு தேவன் கொடுத்த வாக்குத்தத்த வசனம் என்று சொல்வதோ *கிளி ஜோசியத்தை போன்ற ஜாதகத்தை வேதத்தில் தேடுவதாகும். அது தவறு*. ஏனெனில், வேதத்தை படிக்கும்போது அவ்வசனங்கள் யாருக்கு எப்போது யாரால் ஏன் எப்படி சொல்லப்பட்டது என்பதை அறிந்து உபயோகப்படுத்தவேண்டும்.

எ.கா. *நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்* என்ற வசனம் (ஆதி. 22:16-18) ஆபிரகாமிடம் தேவனால் சொல்லப்பட்டது. ஆனால், இந்த வாக்குத்தத்தம் தன் குமாரன் என்றும் பாராமல் தேவனுக்கு பலிசெலுத்த முற்பட்டபோது இந்த ஆசீர்வாதத்தை பெற்றார். மேலும், இந்த வாக்குத்தத்தம் அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவானவர் பிறந்து சகல தேசத்தாரையும் ஆபிராகமின் பிள்ளைகளாகவும் மாற்றி அது நிறைவேறிற்று (கலா. 3:6-7). இந்த வாக்குத்தத்தத்தை இன்றும் என் வாழ்க்கையில் நிறைவேற்றுவார் என்று ஒருவர் நினைத்துக்கொண்டால் இதன் தன்மையை வேதத்தின்படி புரிந்துக்கொள்ளவேண்டியது அவசியம் !!

சரியாக 00.00 மணிக்கு அலாரம் வைத்து கூச்சலிடுவதும், கதறுவதும், வாழ்த்துவதும் அறியாமையின் உச்சம்.

மேலும், புத்தாண்டில் சபையாராக கூடி தேவனுக்கு நன்றி சொல்வது ஒரு பண்டிகை அல்ல அது ஒரு ஜெபக்கூட்டமே.

அதே வேளையில், தங்கள் பாரம்பரியங்களுடனும், கற்பனைகளுடனும், கேளிக்கைகளுடனும் அந்நாளை பண்டிகையாக்கி கொண்டாடுவதை தேவன் வெறுக்கிறார். ஏசா. 1:13


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +918144776229    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக