#1088 - *விபச்சாரத்தில் ஈடுபட்டால் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படியிருக்க யூதா எவ்வாறு ஒரு வேசியுடன் சாதாரணமாக இருந்தார்*? ஆதி. 38:15
அன்று விபச்சாரத்தில் ஈடுபடுதல் தவறு இல்லையா? வேசி என்று எண்ணி தானே யூதா சென்றார்? விளக்கம் தேவை
*பதில்* : யூதாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்: ஏர், ஓனான், சேலா (ஆதி. 38:3-5).
கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவனாக இருந்ததால் முதல் மகன் ஏர் (என்ன செய்தார் என்று நமக்கு சொல்லப்படவில்லை) தாமார் என்ற பெண்ணை மணந்த சிறிது காலத்திலேயே (பிள்ளை உருவாவதற்கு முன்னமே) கொல்லப்பட்டார். ஆதி. 38:6-7
வாரிசு இல்லாமல் முதல் மகள் ஏர் இறந்ததால், அவரது மனைவி தாமாரை அடுத்த மூத்த (இரண்டாவது) மகனுக்கு வழங்கப்பட்டார். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஏரின் குழந்தைகளாக எண்ணப்படுவார்கள். (ஆதி. 38:8-9)
மூத்தவன் சந்தானமில்லாமல் மரித்தால், இளையவன், மூத்தவனின் மனைவியை திருமணம் செய்து சந்தானம் உருவாக்கவேண்டும் என்ற வழக்கம், பிற்காலங்களில் இஸ்ரவேலருக்கு கட்டளையாகக் கொடுக்கப்பட்டது. உபா. 35:5-6
தன் சந்ததியல்ல, மூத்தவனின் சந்ததியே வளரும் என்ற தீய எண்ணத்தில் ஓனான், தன் அண்ணனின் மனைவியுடன் சேர்ந்தபோதும், அவளை (தாமாரை) கர்ப்பமாக்காமலிருந்தார். ஆதி. 38:9
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். ஆதியாகமம் 38:10.
இரண்டு மகன்களை பறிக்கொடுத்த யூதாவுக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு, தன்னுடைய 3வது குமாரன் சேலா மாத்திரமே. தாமாரை இப்போது மணந்தால் ஒருவேளை 3வது மகனும் இரக்க நேரிடும் என்ற பயந்ததுமல்லாமல், சேலா திருமணத்திற்கான மூப்பு இன்னும் அடையாததால் சேலாவுக்கு வயதாகும் வரை தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பும்படி தாமாரிடம் கூறினார். ஆதி. 38:11
காலம் கடந்து போனது. பல ஆண்டுகளாகியும், சேலாவை தாமாருக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்கிற வாக்குறுதியை யூதா நிறைவேற்றவில்லை. இந்தச் சூழ்நிலையில், சந்தானம் உருவாக்க, தாமார் எடுத்த முடிவு தவறானது. மேலும், யூதாவின் மனைவி இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதி. 38:12.
திம்னா என்று ஊருக்கு யூதா வருகிறார் என்று அறிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தை தாமார் தேர்வு செய்து அங்கு வேசியைப் போல துணியை தலையில் போர்த்திக்கொண்டு உட்கார்கிறாள். அதாவது, யூதா ஒரு வேசியை தேட வாய்ப்புள்ளது என்பதை அவள் கேட்டதாக நான் சந்தேகிக்கிறேன். ஆகவே, அவள் ஒரு வேசியைப் போல உடை அணிந்து யூதாவுக்காக காத்திருந்தாள். ஆதி. 38:13-16
அதற்கான தொகை தன்னிடம் இல்லாததால் யூதா, தன்னுடைய இடத்திற்கு திரும்பியதும் மந்தையிளுள்ள ஆடு ஒன்றை விலைக்கிரயமாக தருவதாக ஒப்பந்தம் பேசிக்கொள்கின்றனர். ஆதி. 38:16-18
ஆனால் அந்நேரமட்டும் தனக்கு ஆதாரமாக ஏதாகிலும் தரவேண்டும் என்று அவள் வலியுறுத்த, யூதா தனது முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் கொடுக்கநேர்ந்தது. அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகிறாள். ஆதி. 38:18
பின்னர், யூதா தன் ஆதாரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளும்படியும், வாக்குக்கொடுத்தப்படி மந்தையிலுள்ள ஒரு ஆட்டை தன் சிநேகிதன் (வேலைக்காரன் அல்ல) மூலம் கொடுத்தனுப்புகிறான். ஆனால், அவன் வந்து விசாரிக்கையில், அந்த இடங்களில் தாசி ஒருவளும் இருந்ததில்லை என்று அந்த நண்பனுக்கு சொல்லப்படுகிறது. ஆதி. 38:20-22
யூதா சொன்னதைக் கவனியுங்கள், “அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்”. ஆதி. 38:23
தான் செய்தது தவறு என்று யூதா அறிந்திருந்தார். வேசி என்று நினைத்திருந்த அந்த பெண்ணிடம் தான் ஒப்படைத்த தன்னுடைய முத்திரை மோதிரத்தையும், ஆரத்தையும், தன் கோலையும் திரும்ப பெறுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. அது யாரும் அறியாத இரகசியமாக இருந்துவிடட்டும் என்று நினைத்தார். தான் செய்தது மறைவாய் இருக்கட்டும் என்று இரகசியமாக விட நினைத்தார்.
சுமார் மூன்று மாதம் சென்றபின்பு, தாமார் கர்ப்பமாக இருப்பதாக யூதாவிடம் கூறப்பட்டது. வ24
பொது ஜனங்களின் பார்வையில் ஒரு உத்தமனைப் போல இருக்கும் யூதா இப்போது, தன் மருமகள் குற்றம் செய்தவள் என்றும், அவளை தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்.
அவள் யூதாவினிடத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, தன்னிடம் உள்ள முத்திரை மோதித்தையும், ஆரத்தையும், கோலையும் தன் மாமனாருக்கு காண்பிக்க சொல்லி, இந்த பொருளுக்கு சொந்தக்காரனே என் கர்ப்பத்திற்கு காரணமானவன் என்று அறிவித்தாள். ஆதி. 38:25
வெளியூரில் சென்று தன் காமத்தை போக்கிக்கொண்ட தவறை இது வரை இரகசியமாக பாதுகாத்த யூதா இப்போது மறைந்திருக்கவில்லை. தன் ஜனங்கள் மத்தியிலேயே வெளிவந்துவிட்டது. தன் தவறை வெளியரங்கமாக ஒப்புக்கொள்கிறார். வ26
யார் என்று அறியாமல் செய்த தன் தவறை உணர்ந்த யூதா அவளை பின்னர் ஒருபோதும் சேரவில்லை. ஆதி. 38:26.
தாமார் செய்தது தவறு. ஆனால் யூதாவை அவளுடன் ஒப்பிடும்போது, தன் சொந்த பாவங்கள் மிகப் பெரியவை என்று கூறுகிறார். ஒப்பிடுகையில் அவள் அவனை விட நீதியுள்ளவள்.
அவர் செய்த பாவத்திற்கு அவர் சொந்தமானவர். அவர் தாமரின் இரட்டைக் குழந்தைகளை (வ27) அழைத்துச் சென்று அவர்களை தனது சொந்த மகன்களாக ஏற்றுக்கொண்டார். தாமருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஆதரவு இருந்தது. ஒரு மனிதன் தனது பாவங்களை விட்டு மனந்திரும்பி, அவன் உருவாக்கிய குழப்பத்தை சிறப்பாகச் செய்ய முயன்றதைக் குறிக்கும் செயல்கள் இவை.
எலிகூ சுட்டிக்காட்டியபடி, பாவத்திற்கு சரியான பதில் அதை விட்டு விலகுவதாகும். “நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன். நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே”. யோபு 34: 31-32.
யூதா பகிரங்கமாக தண்டிக்கப்பட்டார், அவர் தனது பாவத்தை விட்டுவிட்டார்.
துணிகரங்கொண்டு செய்வதைக் காட்டிலும், அறியாமல் செய்த இந்தக் காரியத்திற்கு மனந்திரும்பும்படி தேவன் தன் தண்டனையை தாமதப்படுத்தி மனந்திரும்புதலுக்கான சந்தர்ப்பம் அளித்தார் என்று காண்கிறேன். ஒவ்வொரு துளிப் பாவத்திற்கும் மரணத் தண்டனையை உடனடியாக் ககொடுக்கிறவராக இருந்தால், உலகம் காலியாக இருந்திருக்கும். ரோ. 3:23, சங். 73: 12-20, 2பேதுரு 3:9
தாமாரும், யூதாவும் பிற்காலங்களில் தங்கள் தவறை உணர்ந்திருந்தனர். மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்யவில்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வெள்ளி, 26 மார்ச், 2021
#1088 - விபச்சாரத்தில் ஈடுபட்டால் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படியிருக்க யூதா எவ்வாறு ஒரு வேசியுடன் சாதாரணமாக இருந்தார்? விபச்சாரத்தில் ஈடுபடுதல் தவறு இல்லையா? வேசி என்று எண்ணி தானே யூதா சென்றார்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக