ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

#999 - தூதர்கள் ஆவிகளாயிருக்கும் போது தூதர்களின் அப்பம் என்று இருக்கிறதே?

#999 - *தூதர்கள் ஆவிகளாயிருக்கும் போது தூதர்கள் அப்பம் எப்படி சாப்பிட்டார்கள்?* தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான் ; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். சங். 78:25 - விளக்கவும்
 
*பதில்*
ஆயிரமாவது கேள்வியை நம்முடைய இந்த தொடர் நெருங்குவதால் உசிதமான கேள்விக்காக கடைசி 3ஐ ஒதுக்கி வைத்திருந்தேன். இந்த கேள்விக்காய் நன்றி.

அநேகருக்கு இந்த பதிவு ஒரு திருப்புமுனையை தரும்.

இந்த வசனத்தை வைத்து வேர்க்க விறுவிறுக்க பேசப்பட்ட பல மேடை பிரசங்கங்களின் மூலம் பலர் பூரித்து போனதுண்டு !!

தேவதூதர்கள் சாப்பிடும் ஆகாரத்தை தேவன் தன் பிள்ளைகளுக்கு கொடுத்தார் என்று அனைவரும் சிலிர்த்தார்கள்.

விளக்கத்திற்கு முன்னர் – “மன்னா தொடர்பான” சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன் :

எண். 11:7-9 அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது. ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; *அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது*. இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.

உபா 8:3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் *உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால்* உன்னைப் போஷித்தார்.

உபா. 8:16 *உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான* உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,

யோசு. 5:12 அவர்கள் *தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது*; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

நெகே. 9:20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் *வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி*, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

சங். 78:24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, *வானத்தின் தானியத்தை* அவர்களுக்குக் கொடுத்தார்.

யோ. 6:31 *வானத்திலிருந்து* அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.

யோ. 6:49 உங்கள் பிதாக்கள் *வனாந்தரத்திலே மன்னாவைப்* புசித்திருந்தும் மரித்தார்கள்.

யோ. 6:58 *வானத்திலிருந்திறங்கின* அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

மேலே குறிப்பிட்ட வசனங்களை மேலோட்டமாக வேகமாக வழக்கம் போல வாசித்திருப்பீர்கள். மறுபடியும் ஒருமுறை கவனத்தோடு *bold அடர்த்தி செய்யப்பட்ட* வார்த்தைகளை கவனிக்கவும்.

சங்கீதம் 78:25ல் *தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்*; என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?

தேவன் மற்றும் தூதர்கள் ஆவியாயிருக்கிறார்கள்.
தேவதூதர்கள் ஆவியானவர்கள் (எபி. 1:14).
அவர்களுக்கு மாமிசம் கிடையாது. லூக். 24:39.

சரீரம் இல்லாததால் – சரீர வளர்ச்சிக்கு தண்ணீரோ ஆகாரமோ பரலோகத்தில் அவசியமில்லை. ரோ. 14:17, 1கொரி. 8:8

*அப்படியென்றால் தூதர்களின் அப்பம் எதை குறிக்கிறது*?
தூதர்கள் என்றதுமே நம் கற்பனை சிறகுகள் உலாவ ஆரம்பித்து கதை புத்தகங்களிலும் படங்களிலும் பார்த்தது போல வெள்ளை நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு வர்ணத்தில் (ரோஸ் கலர்) அழகாக முதுகிற்கு பின்னால் 2 அல்லது 4 இறக்கைகளையும் தலையில் ஒரு வெள்ளை கிரீடம் அல்லது வட்ட ஒளியோடு கூட நம் சிந்தனையில் ஆரம்பித்து விடும்.

ஐ.நா சபை தூதர், அமெரிக்காவின் இந்திய நாட்டு தூதர் அல்லது தூதரகம் என்று நாம் செய்தியில் கேட்டால் இந்த எண்ணம் வருகிறதா?

தூதர்களின் அப்பம் என்ற வார்த்தை – உசிதமான, உன்னதமான, மேன்மக்கள், இராஜாக்கள், ஐசுவரியவான்கள், பலவான்கள், பலமுள்ள காளை, வீரமிகுந்தவர்கள் உண்ணும் அப்பம் என்று பொருள் !!

எபிரேய பாஷையில் தூதர்கள் என்பதற்கு 'abbı̂yr என்றுள்ளது.
இந்த வார்த்தையை கொண்டு வேதத்தில் மொத்தம் 17 இடங்களில் காணலாம். அந்த வசன குறிப்புகளை வேதத்தில் வாசித்துப் பார்க்கவும்.

சங். 78: 25, 50:13; 68:30; 76:5; 22:12;
ஏசா. 34:7; 46:12; 10:13;
எரே. 50:11; 8:16; 47:3; 46:15;
1 சாமு. 21:7;
யோபு 24:22; 34:20;
புலம்பல் 1:15;
நியா. 5:22;

*தூதர்களின் அப்பத்தை புசிக்க கொடுத்தார் என்றால் – இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்த வனாந்திரத்தில் பாலைவனத்தில் ஒன்றுமே விளையாத காய்ந்து போன இடத்தில் பலமுள்ள உன்னதமான அற்புதமான மேன்மையான வீரமுள்ள திடமுள்ள ஆகாரத்தை அவர்கள் பிதாக்கள் கூட இதுவரை சாப்பிடாத இப்பேற்பட்ட ஆகாரத்தை தேவன் ஆகாரமாக கொடுத்தார் என்பதே*.

துவக்கத்தில் குறிப்பிட்ட வசனங்களை *bold அடர்த்தி செய்யப்பட்ட வார்த்தைகளை* மறுபடியும் வாசிக்கவும்... எவ்வளவு மேன்மையான காரியத்தை தேவன் அவர்களுக்கு செய்தார் என்று !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக