#963 - *இரக்கமுள்ள தேவன் அமலேக்கியரையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொலை செய்து அழிக்க சொன்னது ஏன்*?
கடவுள் மன இரக்கமும் உருக்கமும் உடையவர் - மாற்றுக்கருத்தில்லை.. 1சாமுவேல் 15:3 ன்படி - அமலெக்கியரை சங்கரித்து அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அதன் மேல் இரக்கம் வைக்காமல் புருஷனையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் குழந்தைகளையும் மாடுகளையும் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கழுதைகளையும் கொன்று போடக் கடவாய் என்று சாமுவேலிடம் எடுத்துரைத்த கர்த்தர் சவுலின் மூலம் இரக்கம் பாராமல் அனைவரையும் கொலை செய்யக் கூறிய காரணம் அறிய விழைகிறேன்.
*பதில்*
இந்த பதிவு அநேகருக்கு முகச்சுளிவைத் தரும். ஆனால் ஒருவராவது உணர்ந்து வேதத்தை படித்து தன் பழக்கத்தை மாற்றுவார்கள் என்று விசுவாசிக்கிறேன்.
இந்த கேள்வி அமலேக்கியருக்கு மாத்திரம் அல்லாமல் கானானியர், நோவா காலத்தில் வாழ்ந்து அழிக்கப்பட்ட அனைவருக்கும், சோதோம் கொமோரா பட்டணத்தார், எகிப்திய தலைச்சன் பிள்ளைகள் மற்றும் கிறிஸ்துவின் வருகையில் உள்ள கீழ்படியாத அனைவருக்கும் பொருந்துகிறது !!
எச்சரிப்பின் செய்தி என்று எத்தனை முறை சொன்னாலும் சத்தியத்திற்கு கீழ்படியாமையில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சாட்டையடி என்றே சொல்வேன்.
நம் சொந்த மொழியில் தெளிவாக விக்கிரக ஆராதனையை தேவன் வெறுக்கிறார் என்று சொல்லியிருந்தும் – பயபக்தியும் பவ்யமும் வைத்துக்கொண்டே இயேசு என்று சொல்லி அவருக்கே ஒரு சிலையை செய்து வணங்குகிற ஜனங்கள் மற்றும் சிலுவையை தொட்டு கும்பிடும் ஜனங்கள் துவங்கி, நூற்றுக்கணக்கான வசனங்களை மணனம் செய்தாலும் - தேவனுக்கு முன்பாக நடுக்கமும் பயமுமில்லாமல் குதித்து கும்மாளம் போடும் ஜனங்கள் வரைக்கும் அனைவரும் தன் ஜீவன் இருக்கும் காலத்திலேயே அறிந்து புரிந்து லாபத்தையும் அங்கீகாரத்தையும் பொது விளம்பரத்தையும் விட்டு சத்தியத்திற்கு செவி சாய்க்க வேண்டிய எச்சிரிப்பு இது.
அமலேக்கியர், கானானியர், நோவா காலத்தில் வாழ்ந்தவர்கள், சோதோம் கொமோரா பட்டணத்தார், எகிப்திய தலைச்சன் பிள்ளைகள் ஆகிய அனைவருக்கும் *மனந்திரும்பும்படியான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டது*.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வேதத்திலிருந்து வாசித்து பார்க்கவும்:
அமலேக்கியர் - யாத். 17:14-16, உபா. 25:17-19
கானானியர் – யாத். 23:23-24, யோசு. 2:9-11
எகிப்தியர் – யாத். 7 முதல் 10 அதிகாரங்கள்.
நோவா காலத்தில் வாழ்ந்தவர்கள் – பேழை கட்டப்பட்ட வருஷங்கள் வரைக்கும். 1பேதுரு 3:20
இந்த சூழ்நிலையைப் பார்க்க பல காரணிகளை மனதில் கொள்ள வேண்டும்.
கொலை செய்வதற்கும் தண்டனையின்படி கொல்லுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
உயிரைப் பறிக்கும் கொலை என்பது வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வெறுப்பை உள்ளடக்கியது.
மறுபுறம், மரணதண்டனை (ஆதி. 9),
தற்காப்பு (யாத்திராகமம் 22:2), மற்றும் ஒரு நியாயமான போரில் (ஆதி. 14) அனுமதிக்கப்பட்ட ஆயுட்காலம் பற்றி வேதம் பேசுகிறது.
அமலேக்கியரோ கானானியர்களோ அல்லது பட்டியலிடப்பட்டவர்கள் எந்த வகையிலும் நிரபராதிகள் அல்ல. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தேவ வார்த்தைக்கு எதிர்த்து நின்றவர்கள்.
அவர்கள் ஒழுக்கக்கேட்டின் அடிப்படை வடிவங்களைக் கடைப்பிடித்த கீழ்படியாத மக்கள்.
தேவன் அவர்களின் பாவத்தை தெளிவாக விவரித்தார். லேவி. 18:25.
பத்து நீதிமான்கள் இருந்திருந்தாலும் சோதோம் மற்றும் கொமோராவின் நகரத்தை நான் அழிக்கமாட்டேன் என்றார். ஆதி. 18:32.
அந்த பட்டணத்தில் 10 நீதிமான்கள் கூட இல்லாததால்.... தன் மகா பெரிய கிருபையின் மூலம் மீதமிருந்த 4 நீதிமான்களை தான் அவர்கள் மீது வைத்த இரக்கத்தினால் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து காப்பாற்றினார்... இருந்த போதும் அதிலுமிருந்து ஒருவர் கீழ்படியாமல் உயிரை பறிகொடுத்தார். ஆதி. 19:15-16 26.
மற்றொரு சந்தர்ப்பத்தில், தார்மீக ரீதியாக தூய்மையான முப்பத்தி இரண்டாயிரம் மக்களை கடவுள் காப்பாற்றினார். எண். 31:25-35.
மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம் ராகாப்.
அவள் விசுவாசித்ததால்தேவன் அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றினார். எபி. 11:31. யோசு. 2:17, 6:17, 22-23
தேவன் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பொறுமையாகக் காத்திருந்தார், பொல்லாத மக்கள் மனந்திரும்புவதற்கு நேரம் கொடுத்தார். 2பேதுரு 3:9
அக்கிரமம் நிரம்பிய போது தீர்ப்பு வெளியாகிறது. ஆதி. 15:16
*இதிலிருந்து நமக்கான பாடம் என்ன?*
இக்காலங்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு:
மெகா விளம்பரங்களுடன் கூடிய அற்புத சுகமளிக்கும் கூட்டமும்,
(தேவன் பேசவேண்டியதை) தீர்க்கதரிசனத்தை சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு பயிற்சி கூடங்களும்,
ஆடல் பாடல்களுடன் கூடிய தங்களுக்குத் தாங்களே பெயர் வைத்துக்கொண்ட ஆவிக்குரிய இசைக் கச்சேரிகளும்,
பொய் எது உண்மை எது என்று வேறு பிரிக்கமுடியாத அளவிற்கு பெருகிப்போன விளம்பர வியாபார ஊழியங்களும், டிவி நிகழ்ச்சிகளும், உபவாச கூட்டங்களும், அரசியல் கட்சிக் கூட்டங்களை மிஞ்சும் அளவிற்கு வாகனங்களை ஏற்பாடு செய்து அனைத்து மாவட்டங்களிலிருந்து ஆள் சேர்த்து நடத்தும் ஜெபக் கூட்டங்களும் – நம் அனைவருக்குமான ஓர் எச்சரிப்பு மணி என்றே நான் சொல்லுவேன்.
சத்தியத்திற்கு செவி சாய்க்க வேண்டும்.
சத்தியத்தில் சொல்லப்படாத சகலவற்றிலிருந்தும் விடுபடவேண்டும்.
சாராயத்திற்கும் போதைக்கு அடிமையானவனைப் போல, சரியில்லாத உபதேசம் என்று அறிந்தாலும் உதறிபோட மனமில்லாமல் இரண்டு இடங்களிலும் கால்களை வைத்துக்கொண்டு வேஷம் போடும் ஜனங்களும் ஊழியர்களும் ஏராளம் பெருகிவிட்டனர்.
சொந்த சந்தோஷத்திற்காகவும், சுயலாபத்திற்கென்று ஏற்படுத்திக்கொண்ட சவுகரியத்தையும் - மோசேயின் நியாயபிரமணத்தை கிறிஸ்தவத்தில் நுழைக்காமல்; கிறிஸ்துவே நமக்கு தலை என்பதால் *கிறிஸ்துவின் உபதேசத்திற்கு மாத்திரம் செவி சாய்த்து புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு செவி கொடுப்போம்*.
2தெசலோனிக்கேயர் 1:7-10ல் சொல்லப்பட்ட நாளிலே நாம் பிழைத்துக்கொள்ள ஏதுவாகும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக