சனி, 4 ஏப்ரல், 2020

#849 - பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே மூழ்கி ஞானஸ்நானம் பெற்றவர்கள், பின்மாற்றத்தில் போய், பின்பு உணர்வடைந்து, மனந்திரும்பினால், மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

#849 - *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே மூழ்கி ஞானஸ்நானம் பெற்றவர்கள்,  பின்மாற்றத்தில் போய், பின்பு உணர்வடைந்து, மனந்திரும்பினால், மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா?*

*பதில்*
ஞானஸ்நானம் எதற்காக எடுத்தார்கள் என்பது முதலாவது கேள்வி.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் பெயரால் கொடுக்கப்பட்டது சரி தான். ஆனால் இவர்கள் எதற்காக எடுத்துக்கொண்டார்கள் என்பது அவசியம்.

ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளும் போது அந்த புரிதல் இல்லாமல் எடுத்திருந்தால் – வேதத்தின் படி முறையாக
சுவிசேஷத்தை அறிந்து
விசுவாசித்து
மனந்திரும்பி
பாவத்தை அல்ல – விசுவாசத்தை அறிக்கையிட்டு
பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.

முறையாக பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் சில சூழ்நிலையினால் பாவத்தில் விழுந்து பின்னர் உணர்வடைந்து மனந்திரும்பும் பட்சத்தில் – அவர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஞானஸ்நானமானது விருத்தசேதனத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. கொலோ. 2:11-13

விருத்தசேதனம் பெற்ற ஒரு யூதர் முறை தவறினால் மறுபடியும் அவர் விருத்தசேதனம் செய்து கொள்ள விரும்பினாலும் செய்ய வாய்ப்பு இல்லை !!

அது போல – ஞானஸ்நானம் என்பதும் ஒரே ஒரு முறையே !!
ஒரே ஞானஸ்நானம் என்று எபே 4:5ல் பார்க்கிறோம்.

அது போல ஒரு முறை திருமணம் செய்தவர்கள் தவறின போது மறுபடியும் அதே மனைவியை அல்லது கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசிமில்லை.. மனங்கசந்து தன் தவறை உணர்ந்து ஒப்புரவாக வேண்டியது தான் அவசியப்படுகிறது.

கிறிஸ்தவனை எப்படி விழத்தள்ளலாம் என்று பிசாசு திரிந்து கொண்டே தான் இருக்கிறான்.

ஆகவே தான் பேதுரு சொன்னார் – “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 5:8-9).

மன்னிக்க முடியாத பாவம் இல்லை.

"துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (எசே. 18:21-23).

யோவான் அப்போஸ்தலன் வழிதப்பும் போது உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதிய வசனம் :

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 1யோ. 2:1-2

ஆனால் - சில பாவங்களில் ஈடுபடுவது *மனந்திரும்ப விரும்பாத* ஒரு மனப்பான்மைக்கு வழிவகுக்கும்.

அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1யோ. 2:4

மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எபி. 6:6

தான் செய்த பாவத்தை உணர்ந்து மனங்கசந்து செய்த பாவத்தைவிட்டு மனந்திரும்பி *பாவத்தை அறிக்கையிட்டு* ஒப்புரவாக வேண்டும் – யாக். 5:16

முறையாக ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் பாவத்தில் தவறிவிழுந்து உணர்ந்த மனந்திரும்பியவர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க அவசியமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக