சனி, 19 அக்டோபர், 2019

#567 - ஒருதரம் மரிப்பதும் ஒரே தரம் நியாயதீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வசனம் இருக்க லாசரு ஐஸ்வரியவான் சம்பவத்தில் அந்த ஐஸ்வரியவான் ஏற்கனவே தண்டனையை அநுபவிப்பதாக நாம் வாசிக்கிறோமே – விளக்கவும்.

#567 - *ஒருதரம் மரிப்பதும் ஒரே தரம் நியாயதீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வசனம் இருக்க லாசரு ஐஸ்வரியவான் சம்பவத்தில் அந்த ஐஸ்வரியவான் ஏற்கனவே தண்டனையை அநுபவிப்பதாக நாம் வாசிக்கிறோமே – விளக்கவும்*

*பதில்*
ஒருவர் இறக்கும் போது, அவர்கள் நேரடியாக பரலோகம் அல்லது நரகத்திற்கு செல்வதில்லை.

அவர்கள் தற்காலிகமான காத்திருப்பு இடத்திற்குச் செல்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஷியோல் (ஒய்ந்திருக்கும் இடம்) என்றும் புதிய ஏற்பாட்டில் பரதீசு  என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பரதீசின் பெரும்பாலான விவரங்கள் ஐஸ்வரியவான் மற்றும் லாசருவின் சம்பவத்தில் காணப்படுகிறது (லூக்கா 16:19-31)

இந்த சம்பவத்தின் மூலம், பாதாளம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதைக் அறிந்துகொள்கிறோம்.

வேதனைகள் நிறைந்த இடம் மற்றும் "ஆபிரகாமின் மடி" என்று அழைக்கப்படும் ஆறுதல் இடம் என்று இரண்டாக இருக்கிறது. இந்த ஆறுதல் செய்யும் இடத்தை பரதீசு என்றும் அழைக்கிறார்கள்.

இயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் சிலுவையில் இருந்த கள்ளனிடம், "இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (லூக்கா 23:43).

ஆயினும், இயேசு கிறிஸ்து பரதீசில் தங்கி இருக்கவில்லை என்பதை விளக்க பழைய ஏற்பாட்டின் "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்" (அப். 2:27) என்ற வசனத்தை பேதுரு மேற்கோள் காட்டினார்.

ஆகவே தான் பரதீசு என்பது ஆறுதலின் பகுதி என்று அறிகிறோம்.

ஆகவே எந்த ஒரு பிரிவில் ஒருவர் வந்துவிட்டாலும் மற்றொன்றுக்கு போகும்படியாக தங்கள் இருப்பிடங்களை மாற்ற முடியா வண்ணம் ஒரு பெரிய இடைவெளி இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் என்று கூறப்படுகிறது (லூக். 16:26)

இந்த இடங்கள் நிரந்தரமல்ல மாறாக காத்திருக்கும் இடமாக மட்டுமே செயல்படுகின்றன.

இயேசு கிறிஸ்து மரணத்தின் சாவியை வைத்திருக்கிறார் (வெளி. 1:18). அதாவது அவர் பாதாளத்திற்கு போகும் நுழைவாயிலையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகிறார்.

அவர் திரும்பி வரும்போது, கல்லறையைத் திறப்பார். "இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்"(யோவான் 5: 28-29).

ஆனால் எபி. 9:27ன் படி ஒரே தரம் நியாயதீர்ப்பு என்பது எப்படி புரிந்து கொள்வது?

ஒவ்வொரு நபரும் - நல்லவர் அல்லது கெட்டவர், விசுவாசி அல்லது விசுவாசி - இந்த பூமியில் வாழும் போது அவர் செய்த காரியங்களின்படி நியாயந்தீர்க்கப்படுவார்.

தீர்ப்பு மரணத்திற்குப் பிறகு நடைபெறுகிறது, ஆனால் அது தீர்ப்பின் நாள் என்றும் குறிப்பிடுகிறது. இது ஒரே ஒரு முறை நடக்கும் நிகழ்வு. எப்போதும்  நடந்துகொண்டிருக்கும் செயல்முறை அல்ல. (2தெச. 1:3-10)

மேலே சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது என்பது திண்ணம்.  அப்போது உண்மையுள்ளவர்களுக்கும் துன்மார்க்கருக்கும் உரியவை தீர்ப்பாக கொடுக்கப்படுகிறது.

ஆனால் ஒருவர் மரித்ததும் பாதாளத்தில் வேதனையையும் சுகத்தையும் அநுபவிக்க துவங்கிவிட்டால் தீர்ப்பு ஏன் பின்னர் கொடுக்கப்படுகிறது?

குற்றத்தில் ஒருவரை காவல்துறை கைது செய்தால் அவர் குற்றவாளி என்று அறிந்தாலும் நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவாரல்லவா?

அவரது குற்றம் தெளிவாக இருந்தாலும், அவர் இன்னும் ஒரு நீதிபதி முன் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்கொள்கிறார்.

அது போல நாம் எங்கு செல்கிறோம் என்பது நாம் செய்ததின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

இப்படியாக இறுதித் தீர்ப்பில் கிறிஸ்துவை கண்டு பரலோகமும் நரகமும் அவரவர் செய்கையின் படி பெற்றுக்கொள்கிறார்கள் (வெளி. 20: 11-15).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229    
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக