சனி, 13 ஜூலை, 2019

#270 - வெள்ளிக்கிழமை சாயந்திரம் அடக்கம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்து ஞாயிறன்று உயிர்த்தெழுந்தார். 1½ நாள் தானே ஆகிறது. யோனா இரவும் பகலும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் 3நாள் இருந்தது போல மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்பது எப்படி பொருந்தும் ? (வசனம் மத் 12:40)

#270 - *வெள்ளிக்கிழமை சாயந்திரம் அடக்கம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்து ஞாயிறன்று உயிர்த்தெழுந்தார் என்றால் 1½ நாள் தானே ஆகிறது*. 

யோனா இரவும் பகலும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் 3நாள் இருந்தது போல மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்பது எப்படி பொருந்தும் ?  (வசனம் மத் 12:40)

*பதில்*:
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் எதிரிகளும் இயேசு 3 நாள் கல்லறையில் இருப்பார் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்.

* மத். 12:40 மற்றும் யோ 2:19, மத் 17:22-23ஐ பார்க்கவும்.

மத். 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

யோ. 2:19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

மத். 17:22-23 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

*அவர் எதிரிகளும் இதை அறிந்திருந்தார்கள்*:
மத் 27:62-64 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.  ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.

*எவ்வாறு நாட்களை கணக்கிடவேண்டும் என்பது ஒரு கேள்வி இங்கு இருக்கிறது*?
நாம் ரோமர்களின் முறையை பின்பற்றி நடுஇரவு துவங்கி மறு நடு இரவு வரைக்கும் ஒரு நாள் என்று கணக்கிடுகிறோம்.

ஆனால் இஸ்ரவேலர்களோ ஒரு சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய அஸ்தமனம் வரைக்கும் ஒரு நாள் என்று கணக்கிடுவார்கள்.

*உதா*. : இந்த வேலையை முடிக்க எனக்கு 3நாள் ஆனது என்று ஒருவர் சொல்வாராகில் அவர் தொடர்ந்தேச்சையாக 72மணி நேரம் வேலை பார்த்தார் என்பது அர்த்தமல்ல.

*கடைசி வாரத்தின் நிகழ்வுகளை கவனிக்கவும்*:
யோ. 12:1ல் பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார் என்று பார்க்கிறோம்.

யூத முறைமையில் யோவான் தினங்களை கணக்கிட்டு எழுதியிருக்கிறார்.

1) பஸ்கா பண்டிகை ஓய்வு நாளில் வருவதானால் (வெள்ளி சூரிய அஸ்தமனம் துவங்கி சனி சூரிய அஸ்தமனம் வரை), அந்த வாரத்தின், வாரத்தின் முதல் நாளில் அதாவது ஆறு நாட்களுக்கு முன்னர் இயேசு பெத்தானியாவிற்கு வந்திருக்க வேண்டும் (சனிக்கிழமை சூரிய அஸ்தமனதிலிருந்து ஞாயிறு சூரிய அஸ்தமனம் வரைக்கும்)

2) மார்தாள் மரியாள் & லாசருவுடன் இரவு உணவு உட்கொண்டதால் இயேசுவானவர் மாலை வேளையில் வந்தார் என்று அறிகிறோம். (யோ 12:2)

*மறு நாள் – ஞாயிற்றுக்கிழமை*
(யோ. 12:12-13) – குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு எருசலேமிற்குள் சென்றது.

மாற்கு 11:11-12ன் மூலம் அன்று சாயந்திரமே கிறிஸ்து பெத்தானியாவிற்கு திரும்பி விட்டார் என்று அறிகிறோம்.

*அடுத்த நாள் (திங்கள்)*
அத்தி மரம் சபிக்கப்படுகிறது (மாற்கு 11:13-34)

தேவாலயம் – சுத்தம் செய்யபடுகிறது (மாற்கு 11:15)

*அதற்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை)*
அத்தி மரம் காய்ந்திருக்கிறது (மாற்கு 11:19-20)

அடுத்த சம்பவங்கள் எல்லாம் மாற்கு 14:1 & மத். 26:1-2ன் படி பஸ்கா நாளின் 2நாட்களுக்கு முன்னர் நடந்தவைகளை குறிப்பிடுகிறார்கள்.

பஸ்கா நாளானது ஓய்வு நாளில் / சனிக்கிழமை நடந்ததாக அநேகர் உத்தேசிக்கிறார்கள்.

ஆக விடுபட்ட புதன்கிழமையில் எதுவும் நடக்கவில்லை / அல்லது குறிப்பிடப்படவில்லை என்று புரிகிறது.

நியாயபிரமாணத்தின்படி பஸ்காவை முதல் மாதத்தின் 14ம் நாளின் சூரிய அஸ்தமனத்தில் புசிக்க வேண்டும் (லேவி. 23:5)

மாற்கு 14:12, மத். 26:17, லூக்கா 22:7ன் படி இயேசுவும் சீஷரும் கடைசி பந்தியானது – ஆயத்த நாளில் உட்கொண்டார்கள் என்று அறிகிறோம்.

நியாயபிரமாணத்தின் படி பஸ்காவை முதல் மாதத்தின் 14ம் நாள் கடைபிடிக்கவேண்டு மென்றால் அந்த நாள் ஒவ்வொரு வருஷத்திலும் ஓய்வு நாளான சனிக்கிழமை தான் வருமென்பது நாம் சொல்லமுடியாது.

எந்த நாளிலும் முதல் மாதத்தின் 14ம் நாள் வரும் பட்சத்தில் – அந்த நாளையும் வழக்கமாக வரும் ஓய்வு  நாளை போன்று விசேஷ ஓய்வு நாளாக கருத வேண்டும் என்பதும் இஸ்ரவேலருக்கு கட்டளை (யாத். 12:16, லேவி. 23:6-8)

இப்படிப்பட்ட முக்கியமான / வித்தியாசமான நாளையும் சிறப்பு ஓய்வு நாளாக அழைக்கப்பட்டது (லேவி. 23:24)

1) இயேசுவும் அவருடைய சீஷர்களும் கடைசி மாலை வரை இருந்த பின்னர் கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றார்கள்.

2) ஜெபம் நடந்து கொண்டிருந்த வேளை - சீஷர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்த வேளையில் - இயேசு கிறிஸ்துவை ஒரு படை கைது செய்து அன்னாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர் (யோவான் 18: 12-13).

3) அடுத்து அவர் பிரதான ஆசாரியரான காய்பா வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் (யோவான் 18:24). காய்பாவின் வீட்டில் தான் சேவல்  கூவும் சம்பவம் நடந்தது, எனவே அது விடியற்காலையில் இருந்தது என்பதை நாம் அறிகிறோம் (யோவான் 18: 25-27).

4) பின்னர் அதிகாலையில் அவர் பிலாத்து வீட்டுற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கே நாம் ஒரு உண்மையைக் காண்கிறோம்: அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். (யோவான் 18:28).

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான் - யோவான் 19:14

சிலுவையில் அறையப்பட்டபோது, ​​சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மரணங்கள் / பிரேதங்கள் நிறைவடைவது குறித்து கவலை இருந்ததை நாம் கவனிக்க வேண்டும் - அந்த நாள் *பெரிய ஓய்வு நாளுக்கு* ஆயத்த நாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள் (யோ. 19:31)

அது இன்னும் ஆயத்த நாள் என்றும் அடுத்த நாள் ஒரு விசேஷ ஓய்வு நாள் என்றும் யோவான் குறிப்பாகக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.  இது ஒரு சிறப்பு ஓய்வு நாள் / ஒரு முக்கியமான நாள் / பழைய ஏற்பாட்டு வார்த்தையின் படி ஒரு பரிசுத்தமான நாள் என்று யோவான் கூறுகிறார். இந்த நாள் சனிக்கிழமையாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; இது மாதத்தின் பதினான்காம் நாளில் வருகிறது என்பதே முக்கியம்

அதே ஆயத்த நாளில் யோசேப்பு இயேசுவின் உடலைக் கேட்க வந்தார்.

மாற்கு 15:42-43 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது. கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
 
இயேசுவின் சரீரத்தை அவசர அவசரமாக அடக்கம் செய்யத் தயாராகி ஒரு கல்லறையில் வைக்கிறார்கள் – “யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்” (யோவான் 19:42).

அவசரம் என்னவென்றால், சூரிய அஸ்தமனத்தில் அது பஸ்கா நாளாக மாறியது, பஸ்கா துவங்கிவிட்டால் அடக்கம் செய்வது உட்பட எந்த வேலையும் செய்ய முடியாது.

பஸ்கா முடிந்த அடுத்த நாள், யூதத் தலைவர்கள் பிலாத்துவிடம் மன்றாடுவதைக் காண்கிறோம். 

மத். 27:62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:

மத். 27:63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.

மத். 27:64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.  

*லூக்காவின் பதிவுப்படி*:
லூக். 23: 50 யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.

லூக். 23:51 அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.

லூக். 23:52 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,

லூக். 23:53 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

லூக். 23:54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

லூக். 23:55 கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

லூக் 23:56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். 

லூக்காவின் பதிவு (லூக். 23:50-56) கவனிக்க வேண்டிய ஒன்று:

பஸ்காவின் *ஆயத்த நாளில்* இயேசு அடக்கம் செய்யப்பட்டார்.

ஓய்வு நாள் நெருங்கியது (பஸ்காவின் சிறப்பு ஓய்வு நாள்), எல்லோரும் ஓய்வுநாளில் ஓய்வெடுத்தனர் (சிறப்பு ஓய்வு நாள் அல்லது வாரத்தின் வழக்கமான ஓய்வுநாள்).

*பஸ்கா எப்போது நடைபெற்றது*?
அநேகர் கருதுவது போல் – பஸ்காவானது சனிக்கிழமையன்று நடைபெற்றதாக கணக்கிடும் பட்சத்தில் ஒரு நாள் குறைவதை மறந்துவிடுகிறார்கள்.

புதன்கிழமையை விட்டு வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையின் நிகழ்வுகள் மிகதெளிவாக நமக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை காணமுடியும்.

வெள்ளிக்கிழமையன்று பஸ்கா வந்திருக்குமேயானால் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரண்டு நாளும் ஓய்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருப்பது – வேதத்தின்படி ஊர்ஜீதப்படுத்தப்படுகிறது.

இதனால் பதிவுகளில் எந்த முரண்பாடும் சிரமமும் இல்லை என்று நாம் அறிய முடிகிறது.

விளக்கபடத்தை பார்க்கவும்:



இந்த அருமையான கேள்விக்காய் நன்றி
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2


வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

1 கருத்து:

  1. தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த மகத்தான கிருபைக்கு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு