திங்கள், 10 ஜூன், 2019

#207 கேள்வி: அ) கிறிஸ்துவை அறியாத ஜனங்கள், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்தவர்கள் எங்கே செல்வார்கள்?

#207 *கேள்வி* : 4-அ) கிறிஸ்துவை அறியாத ஜனங்கள், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்தவர்கள் எங்கே செல்வார்கள்?  இல்லை கிறிஸ்து தான் ஆதி காலத்தில் இருந்தே இருக்கிறாரே என்று நீங்கள் கூறினால்,  (4-ஆ) இப்போது இருக்கும் கால கட்டத்திலேயே கிறிஸ்து ஜனங்கள் மேல் அவ்வளவு அன்பு செலுத்தியுமே அவர் கால கட்டத்தில் வாழ்ந்த ஜனங்களும், ஏன் இப்போது இருக்கும் ஜனங்களும் கூட அவர் அன்பை புரிந்து ஏற்று கொள்ளவில்லையே? ஏழு கேள்விகளின் நான்காவது கேள்வி - 4/7
 
*பதில்:*
4-அ) கிறிஸ்துவானவர் சிலுவையில் மரிக்கும் வரைக்கும் – தேவனை பின்பற்றும்படி தன் ஜனங்களுக்கு மோசேயின் மூலமாக 603+10 (மொத்தம் 613) கட்டளைகளை தேவன் கொடுத்தார்.

எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். (ரோ. 2:12)

அன்றியும் நியாயபிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயபிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயபிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயபிரமாணமாயிருக்கிறார்கள். (ரோ. 2:14)

புதிய ஏற்பாடு அல்லது புதிய கட்டளை அல்லது புதிய உடன்படிக்கையானது கிறிஸ்து வானத்திற்கு ஏறி சென்ற 10வது நாளில் அமலுக்கு வந்தது. அன்றைய தினத்திலிருந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை – இந்த புதிய சட்டம் அமுலில் இருக்கும் (2யோ. 1:9, எபி. 7:28)

கிறிஸ்துவிற்கு பின் புதிய சட்டத்தின் கீழ் வராத யாவருமே பரலோகம் போவது இயலாது என்ற வருத்தமான செய்தி 2தெச. 1:7ல் வாசிப்பதால் இஸ்ரவேலர்களும் இந்த புதிய சட்டத்தின் கீழ் வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது !!

நன்மை தீமையறியத்தக்க வகையில் வளர்ந்தவர்கள் எவரும் தான் கடவுளைப் பற்றி தெரியாது என்று சொல்வதற்கில்லை.

கடவுளை நான் அறியேன் என்று எவரும் போக்கு சொல்ல இடமில்லாத வகையில் அவர்களுக்கு இயற்கையே பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது.

மனிதனின் இருதயத்தில் நித்தியத்தை தேடுவதற்கான உந்துதலை தேவன் இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். ஆகவே, எவ்வளவு முறை மொட்டையும் காவடியும் சரீரக்கீறலையும் பாதயாத்திரையையும் மேற்கொண்டாலும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ள இன்னும் இன்னும் மனம் தேடுவதை அறியமுடியும். நம்மைப் படைத்த கடவுளின் உண்மையான இரட்சிப்பை ஞானஸ்நானத்தின் மூலம் அடைந்து பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் போது நித்திய சந்தோஷம் நம்மில் நிலைபெறுவதை நாம் உணர்கிறோம். பிர. 3:11; கொலோ. 1:14;  

எப்படியெனில்,
ரோ. 1:19-20 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக என்று பிலி. 3:16 நமக்கு நினைவுபடுத்துகிறது.

தேவன் நீதியாய் நியாயந்தீர்க்கிறவர். சங். 9:8; வெளி. 19:11

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார் என்ற அப். 17:30ஐயும் கவனிக்கவேண்டும். கடவுளை நோக்கி மனந்திரும்ப வேண்டியது ஒவ்வொரு உயிருக்கும் தானாகவே ஏற்படும் எண்ணம் இருப்பது நிதர்சனம். அதை அழித்து அதை மேற்கொண்டு கடவுளே இல்லை என்று தன்னில் தனது மனசாட்சியைக் கெடுத்துக்கொள்வது அறியாமையின் உச்சம்.

*கேள்வியின் 2வது பகுதி: 4-ஆ*
கிறிஸ்துவின் அன்பு அளவற்றது.

அவரை புரிந்து கொள்பவர்கள் – அவரது கட்டளையை மாத்திரம் பின்பற்றுவார்கள் (யோ. 14:15, 14:23, 14:31)

கிறிஸ்துவில் அன்பு செய்பவர்கள் – கிறிஸ்துவின் பெயரில் சபை வைத்திருப்பார்கள் (எபே. 5:27)

கிறிஸ்துவில் அன்பு செய்பவர்கள் – உலகிலேயே பரிசுத்த தாயாக மரியாளை நினைப்பார்களேயன்றி மரியாளை வணங்க மாட்டார்கள்.

கிறிஸ்துவில் அன்பு செய்பவர்கள் – ஆராதனை வேளையில் டான்ஸ் ஆடாமலும், குதிக்காமலும், கூச்சல் போடாமலும், ஊளையிடாமலும், விசில் அடிக்காமலும், பயத்தோடும் பக்தியோடும் தேவனை ஆராதிப்பார்கள் (அப். 9:31, எபி. 12:28, சங். 2:11;  89:7, 1பேதுரு 1:17, வெளி. 15:4, எபி. 4:1-2)

6ஆயிரம் புருஷர்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்த தேவன் தனது கட்டளைக்கு அப்படியே கீழ்படியாததால் அந்த எண்ணிக்கையிலுள்ள வெறும் 2 பேரை தவிர மோசே உட்பட ஒருவரும் வாக்குத்ததத்தத்தில் பிரவேசிக்கவில்லை !!! (எண். 14:30)

ஆகவே, தேவனுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல... கீழ்படிகிற சிலர் தான் தேவை.

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களாகிய நாம் அச்சு பிசகாமல் கிறிஸ்துவின் வசனத்தின் படி எல்லாவற்றிலும் நம்மை ஒப்பிட்டு பார்த்து எதில் மாறியிருக்கிறோமோ அவைகளை நாம் உயிரோடு இருக்கும் காலத்திலேயே களைந்து போடவேண்டும்.

முழு வாழ்க்கையையே தீர்மானிக்கும் கடைசி பரீட்சைக்காக தற்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் வினாத்தாள் தான் தற்போது நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை.

அந்த பரீட்சையின் விடையை வைத்தே தீர்ப்பு இருக்கும்.

எப்படிப்பட்ட விடையை எழுத வேண்டும் என்கிற வினாத்தாள் ஏற்கனவே நமக்கு லீக் ஆகியிருப்பதை சரியாய் பயன்படுத்திக்கொள்வோம் (யோ. 12:48)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக