ஞாயிறு, 24 மார்ச், 2019

#75 - அந்நிய பாஷையை எனக்கு கற்றுதருவீர்களா?

#75 - *அந்நிய பாஷையை எனக்கு கற்றுதருவீர்களா?* அன்மையில் நான் ஒரு சபைக்கு போனபோது புரியாத பாஷையில் நடுவே அநேகர் பேசினார்கள். கேட்டபோது பரலோக பாஷை என்றார்கள். அந்த பாஷையை நான் எங்கு கற்றுக்கொள்ள முடியும்?

*பதில்* :
அருமை சகோதரரே, இந்த அற்புதமான கேள்வியை என்னிடத்தில் கேட்டதற்காய் நான் தேவனுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன். வேக வேகமாக படித்து விடாமல் பொறுமையாய் வரி வரியாக கீழே என்னுடைய பதிலை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் எந்த சபைக்கு போனீர்கள் என்று சொல்லவில்லை.
சுமார் கடந்த 50 ஆண்டுகளில் இருந்து ஒரு கிறிஸ்தவ மத சபையினர் மாத்திரம் இந்த வித்தியாசமான பாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள். காலபோக்கில் அவர்களுடைய ஆதிக்கம் பரவ தொடங்கியதால் - இவர்கள் தான் தேவ மனிதர்கள் என்று பலர் நம்பி, தாங்கள் காலகாலமாய் போய்கொண்டிருந்த சபையை விட்டுவிட்டு அங்கு போக துவங்கியதும் தங்கள் ஜனத்தொகையை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கரிஸ்மாடிக் (Charismatic) என்று தனிப்பிரிவை துவங்கி தக்க வைக்கவைத்துக்கொண்டார்கள். இதில் பல நூற்றாண்டுகளாக அமைதியையே வழிபாடாக வைத்து ரோம் போப்பின் கட்டளைக்கு உட்பட்ட கத்தோலிக்கர்களும் அடங்குவர் !!

*அந்த பாஷையை குறித்து வேதம் என்ன சொல்கிறது*?
கிறிஸ்து பரலோகம் போன 10ம் நாளில் சபை துவங்கிய போது – மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்தின் அடிப்படையில் ஏறத்தாழ 14 தேசத்திலிருந்து (அப். 2:9-11) 3000த்திற்கும் மேற்பட்ட ஆண்கள் (பெண்களும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த 3000 எண்ணிக்கையில் இல்லை), எபிரேய பாஷையில் பெந்தேகோஸ்தே என்ற 50ம் நாள் பண்டிகையை கொண்டாட எருசலேம் நகரத்தில் கூடி வந்தார்கள்.

ரோமர் 10:4ன் வசனப்படி கிறிஸ்து நியாயபிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். அதாவது நியாயபிரமாணத்தின் கடைசி காலம் அது!

எல்லோரும் கூடி வந்திருந்த அந்த வேளையில் பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் இறங்கி அந்த பகுதியில் இருந்த மேல் வீட்டில் கூடி இருந்தவர்களில் 12 அப்போஸ்தலர்களை நிரப்பினார் (அப். 2:2-3).

அந்த தருணத்தில் இவர்கள் எல்லோரும் பலவிதமான பாஷைகளை பேசுவதாக அங்கு கூடி வந்த ஜனங்கள் தங்கள் காதுகளில் கேட்டார்கள். 

அது மாத்திரமல்ல, இவர்கள் எதை பேசுகிறார்கள் என்பதை கூடியிருந்த ஜனங்கள் புரிந்து கொண்டார்கள் (அப். 2:11).

கூடியிருந்தவர்கள் பலவிதமான மொழிகளை பேசுபவர்களாய் இருந்த போதும் இந்த அப்போஸ்தலர்கள் பேசுவதை அவரவர்கள் தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்து கொண்டார்கள் !!

அந்த கூட்டத்தில் சிலர் இவர்களை பார்த்து போதையில் பேசுகிறார்கள் என்று சொன்னதும் – பேதுரு எழுந்து நின்று ஜனங்களை பார்த்து இப்படிப்பட்ட சம்பவம் அன்று நடக்கும் என்பதை ஏற்கனவே யோவேல் தீர்க்கதரிசி சொன்னதை மேற்கோள் காட்டினார் (அப். 2:16-17).

அந்த துவக்க காலத்தில் எபிரேய மொழியில் அல்லது அரமாய்க் மொழியில் அல்லது கிரேக்க மொழியில் சொல்லப்படுபவைகளை வேறு மொழி பேசுபவர்கள் புரிந்து கொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் தாமே அவரவர்கள் தங்கள் தங்கள் மொழியில் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்த்தார். 

தற்போது இப்படி பரிசுத்த ஆவியானவர் மொழிபெயர்த்து நமக்கு சொல்வதில்லை.

அவர்வர்கள் மொழியிலேயே வேதம் அவரவர் வசதிக்கு கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டதால் தேவன் நமக்கு எதை சொல்ல சித்தம் கொண்டாரோ அவை அனைத்தையும் அப்போஸ்தலர்கள் மூலமாக சொல்லிவைத்துவிட்டார் (யோ. 20:30-31).

வருஷங்கள் கடந்த போது, இப்படி வேற்று மொழியில் சபையில் பேசுபவர்களை பவுல் ஒழுங்குபடுத்தினார்.

அதாவது சபையில் வேற்று மொழியில் பேசுவதாக இருந்தால் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது அதிகட்சமாக மூவர் பேசலாம் என்றார். அதுவும் ஒவ்வொருவராக தான் பேசவேண்டும் என்றார். எல்லாரும் ஒன்றாக அல்ல – ஒருவர் மாறி ஒருவர் தான் பேசவேண்டும். 1 கொரி. 14:27.

அதோடு நின்றுவிடாமல் – மேலும் ஒரு கண்டிஷனும் இருக்கிறது.
அந்நிய பாஷையில் சபையில் பேசுவதாக இருந்தால் – ஒருவர் பேச – மற்றவர் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்.

அப்படி மொழிபெயர்க்க ஆள் இல்லை என்றால் சபையில் அந்நிய பாஷையை பேசக்கூடாது என்றும் – விரும்புபவர்கள் தங்களுக்குள்ளேயே (சப்தம் வெளியே வராமல்) பேசிக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார்  (1 கொரி. 14:27-30)

தற்போது உள்ள சபைகளில் எந்த மொழியில் பேசுகிறார்கள் என்பது பேசுபவர்களை தான் கேட்கவேண்டும்.

*மிக முக்கியமாக* :
பரலோகத்திலிருந்து தேவன்  ஆதாமிடம் பேசும் போதும்
ஆபிரகாமிடம் பேசும் போதும்
மோசேயோடு பேசும் போதும்
எலியா, எலிசாவொடு பேசும் போதும்
மற்ற தீர்க்கதரிசிகளோடு பேசும் போதும்
கழுதை மூலமாக மனுஷனோடு பேசும் போதும்
புதிய ஏற்பாட்டில் சவுலோடு பேசும் போதும்
பேதுருவோடும் யோவானோடும் பேசும் போதும்
தேவ தூதன் மரியாளோடு பேசும் போதும்
தேவ தூதன் கிதியோனிடம் பேசும் போதும்
மற்ற எந்த இடத்திலும் / எப்பொழுதும்  – தேவனானவர்,
மனிதனை தன்னுடைய பாஷையில் பேசவேண்டும் என்று தேவன் சொல்லவேயில்லை. மாறாக மனிதன் பாஷையில் தான் பேசினார் !!!!!

பல வருடங்களாக தேவ தூதர்கள் பேசும் பாஷையை தாங்கள் பேசுவதாக  சொல்பவர்கள் – 60 அல்லது 70 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கும் முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவராவது மற்றவர் பேசும் அந்நிய பாஷையை  மொழி பெயர்க்க முடிந்ததா?

மேலும் பவுல் - தாங்கள் பேசியதை தாங்களே மொழி பெயர்க்க சொல்லவில்லை – யாராவது அந்நிய பாஷையில் பேசுகிறதுண்டானால் வேறொருவர் மொழிபெயர்க்க வேண்டும் என்றார் (1கொரி. 14:27)

அந்நிய பாஷையில் பேசினால் தான் அபிஷேகம் பெற்றவர் என்கிற பரவலான கூற்றை இந்த மதத்தினர் பரப்பியதால், தங்களுக்கு ஊழிய பட்டமும் அங்கீகாரமும் கிடைப்பதற்காக தங்களை தாங்களே ஒருவித பரவசத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கும் இப்படிப்பட்டதான முறைமையில் இருப்பவர்கள் வேதத்தின்படி சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் நினைப்பது போன்று அந்நிய பாஷையை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாது. பேசுவது மொழியாக இருந்தால் அதற்கு இலக்கணம் அவசியம் !!

நம் சொந்த தாய் மொழியில் வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தெளிவாய் புரிந்து நாம் நம்முடைய மகத்துவமான தேவனிடத்தில் சேருவோம்.

இந்த கேள்விக்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மேலும் சந்தேகமிருப்பின் தாராளமாய் கேட்கவும். வேதம் என்ன சொல்கிறது என்று அறிவோம். தேவன் தாமே உங்களோடு இருப்பாராக. ஆமேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

2 கருத்துகள்:

  1. ஒருவர் அனுப்பியது:

    அந்நிய பாஷைக்கும்,
    பற்பல பாஷைக்கும் இடையே வித்தியாசம் உண்டு,,,

    பற்பல பாஷை என்பது அப்போஸ்தலர் காலத்தில் 120 பேர் ஆவியானவர் ஊற்றப்பட்ட போது பேசப்பட்டது,,, இதை ஆங்கிலத்தில் other languages என்றே மொழிபெயர்த்துள்ளனர் ,,,அது பூமியில் பேசப்பட்ட பாஷை,,,

    ஆனால் அந்நிய பாஷை என்பது unknown tongue அதாவது தெரியாத பாஷை என்று அர்த்தம்,,,

    இவைகள் அருளப்பட்டத்தின் நோக்கம்,
    வாக்குக்கு அடங்கா பெருமூச்சோடு தேவனிடம் இரகசியங்களை பேசி நம் ஆவியில் ஜெபிக்க,,,

    ஆனால் இதை தனிஜெபத்தில் பயன்படுத்த வேண்டும்,,,

    பொது வெளியில் மணிக்கணக்கில் அந்நிய பாஷை பேசினால் பார்க்கிறவர்களுக்கு புரியாது என்பதால் பவுல் அதை கட்டுப்படுத்தி, தனக்கும் தேவனுக்கும் தெரியும்படி பேச சொல்லுகிறார்,,, நினைவிற்கு பேச வேண்டாம் என சொல்லவில்லை,,, பொது வெளியில் அதிகமாக பேச வேண்டாம் என்கிறார்,,,

    மேலும் தான் எல்லாரைவிட அதிகமாக அந்நிய பாஷை பேசுவதையும் பதிவிடுகிறார்,,,,

    அந்நிய பாஷை பேச தடைபண்ண வேண்டாம் என்றும் சொல்லுகிறார்,,,

    மனுஷர் பாஷையும் உண்டு,,,
    தூதர் பாஷையும் உண்டு,,,,


    எப்பத்தா,,
    தலித் தாகூமி,,
    ஏலோயி ஏலோயி லமா சபக்தானி,,,,
    போன்றவை பூமியிலுள்ள பாஷைகள் அல்ல,,,
    இயேசு கிறிஸ்த்து பேசின தூதர் பாஷைகள்,,,,

    வேதத்தை அறிவின் கண்ணோட்டத்தோடு அல்ல ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு வாசிக்கும் போதே ஆவியானவர் இடைபடுவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் :

      1)
      அந்நிய பாஷைக்கும்,
      பற்பல பாஷைக்கும் இடையே வித்தியாசம் உண்டு,,,

      --->
      அந்நிய பாஷை என்பது தாய் மொழி அல்லாத வேற்று மொழி.
      பற்பல பாஷை என்பது - ஒன்றுக்கு மேற்பட்ட வேற்று மொழிகள்.


      2)
      பற்பல பாஷை என்பது அப்போஸ்தலர் காலத்தில் 120 பேர் ஆவியானவர் ஊற்றப்பட்ட போது பேசப்பட்டது,,, இதை ஆங்கிலத்தில் other languages என்றே மொழிபெயர்த்துள்ளனர் ,,,அது பூமியில் பேசப்பட்ட பாஷை,,,
      ---->
      120 பேர் மீது ஆவியானவர் ஊற்றப்பட்டார் என்று வேதத்தில் அல்ல.
      அப்போஸ்தலராகிய 12 பேர் தான் அதை பெற்றுக்கெண்டார்கள்.
      #493ம் கேள்விக்கான பதிலை பொறுமையாக வேதத்துடன் ஒப்பிட்டு கவனமாக படிக்கவும்.

      3)
      ஆனால் அந்நிய பாஷை என்பது unknown tongue அதாவது தெரியாத பாஷை என்று அர்த்தம்,,,
      ---->
      Unknown tongue to the speakers..
      பேசுபவருக்கு அறியாத பாஷையை தான் பேசினார்கள் - ஆனால் கேட்டவர்கள் அந்த பாஷையை புரிந்து கொண்டனர்.
      எந்த இடத்தில் Unknown Tongue என்று தெரியாத பாஷை பேசப்பட்டதோ அங்கு கூடியிருந்தவர்கள் இவர்கள் பேசியதை புரிந்த கொண்டார்கள். அதற்கான மொழிபெயர்ப்பை ஆவியானவர் செய்திருந்தார்.


      5)
      இவைகள் அருளப்பட்டத்தின் நோக்கம்,
      வாக்குக்கு அடங்கா பெருமூச்சோடு தேவனிடம் இரகசியங்களை பேசி நம் ஆவியில் ஜெபிக்க,,,
      ---->
      அது அவரவர் சொந்த மன திருப்தியை பொருத்தது / விருப்பம்...
      சபையில் அனுமதியில்லை
      இப்படிப்பட்ட உதாரணம் வேதத்தில் காண்பிக்கவும் ?

      6)
      ஆனால் இதை தனிஜெபத்தில் பயன்படுத்த வேண்டும்,,,

      பொது வெளியில் மணிக்கணக்கில் அந்நிய பாஷை பேசினால் பார்க்கிறவர்களுக்கு புரியாது என்பதால் பவுல் அதை கட்டுப்படுத்தி, தனக்கும் தேவனுக்கும் தெரியும்படி பேச சொல்லுகிறார்,,, நினைவிற்கு பேச வேண்டாம் என சொல்லவில்லை,,, பொது வெளியில் அதிகமாக பேச வேண்டாம் என்கிறார்,,,

      7)
      மேலும் தான் எல்லாரைவிட அதிகமாக அந்நிய பாஷை பேசுவதையும் பதிவிடுகிறார்,,,,
      ---->
      பவுல் ஒரு யூதன், ரோம குடியுறிமை பெற்றவர். பல ஊர் பிரயாணம் செய்தவர். ஆகவே பல மொழிகளை அறிந்தவர்.
      நாம் தற்போது காண்பது போல யாருக்கும் அறியாத வார்த்தைகளை குறித்து அவர் சொல்லவில்லை.
      அந்நிய பாஷை என்ற தமிழ் பதிப்பு - அந்நிய மொழியை குறிக்கிறது.

      8)
      அந்நிய பாஷை பேச தடைபண்ண வேண்டாம் என்றும் சொல்லுகிறார்,,,
      ---->
      தாராளமாக பேச வேண்டும் - ஆனால் மொழி பெயர்க்கப்படவேண்டும் !!
      நான் தமிழனாக இருந்தாலும் கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில சபைகளில் பேச அழைக்கப்படுகிறேன்.
      அந்நிய மொழியில் நான் பேசுவதால் - தேவ வார்த்தையை அந்த ஜனங்களுக்கு இன்னும் அதிகமாக சொல்ல முடிகிறது.


      மனுஷர் பாஷையும் உண்டு,,,
      தூதர் பாஷையும் உண்டு,,,, -
      ---->
      தூதர் பாஷைக்கு வேத ஆதாரம் தரவும்??


      எப்பத்தா,,
      தலித் தாகூமி,,
      ஏலோயி ஏலோயி லமா சபக்தானி,,,,
      போன்றவை பூமியிலுள்ள பாஷைகள் அல்ல,,,
      இயேசு கிறிஸ்த்து பேசின தூதர் பாஷைகள்,,,,
      ---->
      இது தூதர் பாஷை அல்ல..அவர்கள் பேசின அரமாய்க் மொழி..அதன் அர்த்தத்தை உடனடியாக வேதத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் !!!


      வேதத்தை அறிவின் கண்ணோட்டத்தோடு அல்ல ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு வாசிக்கும் போதே ஆவியானவர் இடைபடுவார்
      ---->
      சரியாய் சொன்னீர்கள்.
      1கொரி 2:13
      வேதத்தை கவனமாய் படியுங்கள் - தேவன் நிச்சயம் இடைபடுவார்
      நன்றி

      நீக்கு