#67 *பெண்கள் மீது பவுலுக்கு வெறுப்பு ஆகவே அவர் எழுதியவற்றை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று சிலர் சொல்கிறார்களே*? கீழுள்ள கேள்விளை விளக்கவும்
கேள்விகள் :
1- 1கொரி. 15:4-8ம் வசனங்களில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் யாருக்கெல்லாம் தரிசனமானார் என்பதை பவுல் பட்டியலிடும்போது முதலாவது தரிசனமான மகதலேனா மரியாளை குறிப்பிடவில்லை.
2- பெண்கள்மீது அவருக்கு இருந்த பொறாமையினாலே அவர்கள் பெயர்களை அங்கு குறிப்பிடவில்லை என்றும்,
3- அப்படி பொறாமை இருந்ததால்தான் பெண்கள் சபையிலே ஆண்களுக்கு உபதேசம் பண்ணக்கூடாது என்று சொன்னார் என்றும்,
4- எனவே எல்லா வேத வசனங்களும் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதியது அல்ல.
5- பெண்களும் சபையில் ஆண்களுக்கு போதிக்கலாம் என்ற ஒரு உபதேசம் பரவி வருகிறதே?
6- பவுல் எழுதிய நிரூபங்கள் அந்தந்த சபைகளில் இருந்த குறைபாடுகளை களைவதற்கு அந்த சூழ்நிலையிலே எழுதப்பட்டது எனவே அவைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் சொல்லப்படுகிறதே?
*பதில்* :
மிக நேர்த்தியாக இந்த விஷயத்தை வேதத்திற்கு புறம்பாக, தாங்கள் செய்யும் செயலுக்கு ஆதாரமாக்கவேண்டுமென்று முனைந்திருக்கிறார்கள்.
இந்த கேள்வியை கேட்டதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிக்க ஏதுவாக உங்கள் கேள்விகளை 4 பாகமாக பிரித்திருக்கிறேன்.
*கேள்வி 1- 1கொரி. 15:4-8ம் வசனங்களில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் யாருக்கெல்லாம் தரிசனமானார் என்பதை பவுல் பட்டியலிடும்போது முதலாவது தரிசனமான மகதலேனா மரியாளை குறிப்பிடவில்லை*.
*பதில்* : 1 கொரிந்தியர் 15ம் அதிகாரம் – கிறிஸ்துவின் உயிர்தெழுதலை குறித்ததானது. சுவிசேஷத்தின் சாராம்சம் என்ன (வ 2-3) என்று கொரிந்தியருக்கு விவரிக்கும் ஒரு பகுதி.
இரகசியமாக அல்ல தனிமையாக மாத்திரம் அல்லாமல் பொதுவாகவும் கிறிஸ்துவானவர் தான் உயிர்தெழுந்ததை அநேகருக்கு வெளிப்படுத்தினார் என்று விவரித்துக்கொண்டிருக்கிறார்
வ5 – ஒருவர் (பேதுரு), பின்னர் பன்னிருவர் (மத்தியாஸ் மற்றும் தோமா உட்பட)
வ6 – ஐந்நூறு பேர்
வ7 – ஒருவர் (யாக்கோபு), பின்னர் அப்போஸ்தலர் அனைவரும்
வ8 – ஒருவர் (பவுல்)
ஒருவர் பின் ஒருவராக அவர் பட்டியலிட முற்பட்டிருந்தால் தோமாவையும், இயேசுவின் தாய் மரியாள், மார்த்தாள் அனைவரையும் குறிப்பிட்டிருந்திருப்பாரே !!
*கேள்வி 2- பெண்கள்மீது அவருக்கு இருந்த பொறாமையினாலே அவர்கள் பெயர்களை அங்கு குறிப்பிடவில்லை*,
*பதில்* பெண்கள் மீது அவருக்கு பொறாமை என்று எங்கிருந்து இந்த கூற்றை பிடித்தார்கள் என்று தெரியவில்லை!! (?)
புதிய ஏற்பாட்டின் 27 புஸ்தகத்தில் 13 நிருபத்தை எழுதியவர் பவுல்.
பெண்களுக்கென்றும் திருமணத்திற்கென்றும் மனைவிக்கென்றும் விதவைகளுக்கென்றும் தாயாருக்கும் முதியவருக்கும் வேண்டிய ஆலோசனையை எழுதியவர்.
ஐனிக்கேயாளையும் லோவிசாளையும் (2தீமோ 1:5) மரியாளையும் (ரோ16:6) லீதியாளையும் (அப் 16:14) பிரிஸ்கில்லா, யூலியா, நேரேயும், இன்னும் அநேகரை வாழ்த்தியவர் / அன்பு பாராட்டியவர் – சத்தியத்தில் நடத்தியவர் - ஏறத்தாழ 30 இருக்கும். பட்டியல் தேவைபட்டால் கொடுக்க முடியும் !!
*கேள்வி 3- அப்படி பொறாமை இருந்ததால்தான் பெண்கள் சபையிலே ஆண்களுக்கு உபதேசம் பண்ணக்கூடாது என்று சொன்னார் என்றும், கேள்வி 5- பெண்களும் சபையில் ஆண்களுக்கு போதிக்கலாம் என்ற ஒரு உபதேசம் பரவி வருகிறதே*?
*பதில்* : ஆண்கள் மத்தியில் பெண்கள் சபையிலே (ஆண்களுக்கு) போதிப்பதற்கு தேவன் இடம் கொடுக்கவில்லை. அதற்கான காரணத்தையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் பவுல்.
மனைவிக்கு தலை கணவன்
கணவனுக்கு தலை கிறிஸ்து
கிறிஸ்துவிற்கு தலை பிதாவாகிய தேவன் (1 கொரி 11:3)
தலை தான் மற்ற பாகங்களுக்கு ஆலோசனை கூறும்.
தலை சொல்லும் ஆலோசனைக்கு மற்ற பாகங்கள் கீழ்படியவேண்டும்.
1Co 14:37 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
*கேள்வி 4- எனவே எல்லா வேத வசனங்களும் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதியது அல்ல*
*பதில்* வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டது என்று வேதத்தில் பார்க்கிறோம் (2 தீமோ 3:16)
2பேதுரு 1:20-21 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
மாற்கு 12:24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
மேலே உள்ள வசனங்களே அவர்களுக்கு பதில் ..
அவர்கள் செய்துகொண்டிருக்கும் / செய்யவிரும்பும் தவறுகளுக்காக வேதாகமத்தை வளைத்து நெளித்து தவறிழைத்துக்கொள்கிறார்கள்.
*கேள்வி 6: பவுல் எழுதிய நிரூபங்கள் அந்தந்த சபைகளில் இருந்த குறைபாடுகளை களைவதற்கு அந்த சூழ்நிலையிலே எழுதப்பட்டது எனவே அவைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் சொல்லப்படுகிறதே*?
*பதில்* : நிருபங்கள் அந்தந்த சபைகளுக்கு எழுதப்பட்டிருந்தாலும் – அவை எல்லா சபைகளிலும் வாசிக்கும் படியாக அனுப்பப்ட்டவைகள்.
1கொரி. 1:2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்* எழுதுகிறதாவது.
1தெச. 5:27 இந்த நிருபம் பரிசுத்தமான *சகோதரர் யாவருக்கும்* வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கொலோ. 4:16 இந்த நிருபம் *உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்*.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக