#1228 – *தாவீதின் தாகத்தினிமித்தம் மூன்று பராக்கிரமசாலிகள் பெலிஸ்தரின் பாளையத்தினுள் சென்று பெத்லெகேமன் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை ஏன் கர்த்தருக்கென்று தரையிலே ஊற்றினார்?*
அது எப்படி அந்த மனிதரின் இரத்தத்தைக் குடிக்கும் செயலாகும்?
2 சாமுவேல் 23:15-17 “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்து போய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள். ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்”. இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள். - இந்த பகுதியை விளக்கவும்.
*பதில் *: தாவீதின் ஊர் என்று அன்பாய் அழைக்கப்பட்ட பெத்லெகேமின் ஒலிமுகவாசலிலுள்ள கிணற்றின் தண்ணீரை குடிக்க ஆசைக் கொண்ட (1நாளா. 11:17) தங்களது ராஜாவின் விருப்பத்தை நிறைவேற்ற, போர் நடந்துக்கொண்டிருக்கும் அந்த சூழலிலும் (1நாளா. 11:14-16) அவனுடன் இருந்த மூன்று பராக்கிரமசாலிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளின் பாளயத்தினுள் சென்று அந்த கிணற்றின் தண்ணீரை மொண்டு கொண்டு வந்தனர்.
ஒரு வேளை, அவர்கள் அங்கே எதிரிகளால் கொல்லப்பட்டிருந்தால், எதிரிகளின் பாளையத்தினுள் உள்ள கிணற்றுத் தண்ணீருக்காய் ஆசைப்பட்டதே அவர்களது உயிர் பறிபோனதன் காரணமாகிவிட்டிருக்கும்.
ஆகவே, அந்தத் தண்ணீர் 'இரத்தத்திற்கு' சமமாக தாவீது கருதினார். (1நாளா. 11:19, ரோ. 16:4, நியா. 5:18)
பெலிஸ்தியரின் பாளயத்தைத் தாண்டி, தன் உயிரைப் பணயம் வைத்து அந்த மூன்று வீரர்கள் பெத்லெகேம் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்த அந்த தண்ணீரை, வெறும் தண்ணீராகப் பார்க்கவில்லை; தன் வீரர்களின் தியாகத்தில் அதை அவர்களது உயிரான இரத்தமாய் பார்த்தார். ஏனெனில், மாம்சத்தின் இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்று லேவி. 17:11ல் காண்கிறோம்.
தாவீது அந்தத் தண்ணீரை வீணாகத் தரையில் ஊற்றவில்லை மாறாக கர்த்தருக்கென்று ஊற்றினான் என்பது, அதை ஒரு பலி போல தேவனுக்கு முன்பாக ஊற்றினார் என்பதாகும். (2 சாமுவேல் 23:16, 1நாளா. 11:18)
மிகத் தெளிவாய் வேதாகமம் இரத்தத்தை நாம் புசிக்கக்கூடாதென விளக்கியிருக்கிறது.
உபா. 12:16 - “இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்”.
அப். 15:29 - “அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்”.
வேதாகமக் காலத்தில், திராட்சரசத்தையோ அல்லது விலையுயர்ந்த பொருளையோ கர்த்தருக்குப் படைக்கும்போது அதைத் தரையில் பானபலியாக ஊற்றினார்கள். (ஆதியாகமம் 35:14, யாத்திராகமம் 29:40-41, எண்ணாகமம் 15:5, 7, 10, பிலிப்பியர் 2:17). ஊற்றப்பட்ட பொருளை மீண்டும் எடுக்க முடியாதபடி முழுமையாகக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது. தரையில் ஊற்றப்பட்டால் அதை மீண்டும் சேகரிக்க முடியாதே.
ஆகவே, தாவீது அந்தத் தண்ணீரை தரையில் ஊற்றியது, "இது இனி எனக்குச் சொந்தமல்ல, இது தனது பராக்கிரமசாலிகளின் இரத்தம், அது கர்த்தருக்கே உரியது" என முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக