கிறிஸ்துவின் சபை என்ற சபை?
- by Eddy Joel Silsbee
2024ம் வருடம் விசித்திரத்திற்கு பஞ்சமின்றி துவங்கியிருக்கிறது.
(1)
வருடத்தின் ஆரம்பத்தில் மற்றவர்களின் கால்களை கழுவி ஒருவர் தனது தாழ்மையை வெளிப்படுத்தினார். நல்ல வேளையாக வாரத்தின் முதல் நாளில் அதை அவர் செய்யவில்லை!! கிறிஸ்து மரிக்க போகிறார் என்று தெரிந்ததும், அடுத்து யார் பரலோகத்தில் பெரியவனாக இருக்கவேண்டும் என்ற விவாதமே அந்த சூழல். தன் அம்மாவையும் சிபாரிசுக்கு அழைத்தனர். மத். 20:18-28.
இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் கிறிஸ்தவத்தில்; தங்களது தாழ்மையை வெளிப்படுத்த அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் கால்களைக் கழுவவேயில்லை. நாமும் செய்ய வேண்டும் என்று கிறிஸ்து விரும்பியிருந்தால் அப்போஸ்தலர்கள் வலியுறுத்தியிருப்பார்கள். கிறிஸ்துவே கால்களை கழுவியப் பின்னரும் யூதாஸ் மனம் மாறவில்லை !! கிறிஸ்தவம் என்பது செயலில் அல்ல இருதயத்திலும் இருக்கவேண்டும். அவசியமின்றி காட்சிப்படுத்தப்பட்ட இந்த உதாரணம் வளர்ந்து வருபவரினிடையே தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
(2)
இன்னொரு சிறுபான்மைக் கூட்டம், சொற்ப லாபத்திற்காக அரசுவிடம் சென்று உலக சட்டத்தின் பார்வையில் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மையாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் சரீரத்தில் *ஒரு சிறு பங்கு /உறுப்பு மாத்திரமே*.
தங்களது ட்ரஸ்ட்டை சிறுபான்மை கூட்டமாக அங்கீகரியுங்கள் என்று முயற்சிக்காமல்;
உன்னதமான *கிறிஸ்துவின் சபையை* சிறுபான்மையாக அறிவியுங்கள் என்று அரசாங்கத்திடம் மனு கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தது?
கிறிஸ்துவே கிறிஸ்துவின் சபைக்கு தலை.
அதைக்குறித்து தீர்மானம் எடுக்க அவருக்கும் அப்போஸ்தலருக்கும் தான் அந்த அதிகாரம் உள்ளது.
ஊழியர்களாகிய நீங்களும் நானும் சபைக்கு தேவையான ஊழியத்தை செய்யும் வேலைக்காரர்கள் மாத்திரமே !!
அதை மறந்து இப்படிப்பட்ட தவறான செய்கையில் ஈடுபடுவது அபத்தம்.
இந்த கூட்டு முயற்சியை
- வளரும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலும்,
- சட்டத்தின் பார்வையில் எப்படி சபையை நடத்தவேண்டும் என்றும்,
- எப்படி நடத்தக்கூடாது என்றும்,
- வேதாகம ரீதியில் உட்கட்டமைப்பு எப்படி பலப்படுத்தவேண்டும் என்றும்,
- தீர்க்கமான சட்டக்குழுவை அமைத்து, மதக்கலவரங்களில் அகப்படும் பிராந்திய சபைகளுக்கு தேவையான சட்ட போராட்டங்களில் சட்டத்துடன் போராடுவதற்கும்,
- பிராந்திய சபைகளுக்கு சட்ட பாதுகாப்பு / ஆலோசனை கொடுப்பதிலும்;
- ஊழியர்களை தேசத்தின் சட்டத்திட்டங்களில் பயிற்றுவிப்பதற்கும்;
போன்ற அநேக காரியங்களில் கவனம் செலுத்தலாம்.
இந்த ஐக்கியம் பூரணமாய் பெலப்படும்பொழுது அரசாங்கமே வந்து தங்களது கோரிக்கையை வைக்கும் சூழல் உருவாகும்.
அதைவிட்டு, இப்படி அரசாங்கத்திடம் *கிறிஸ்துவின் சபை* என்ற மேலான தேவனுடைய இராஜ்யத்தையே அடகு வைக்க முற்படக்கூடாது. அப்படிப்பட்ட எந்த அதிகாரமும் எவருக்கும் கிடையாது.
சபைகளில் மூப்பர்கள் என்ற பதமே இக்காலத்தில் காண்பது அரிதாகிவிட்டது.
வயதாகிவிட்டதென்றும், மூப்பர்கள் என்ற பதவி அவசியம் என்றும் சிலரை மேலே உட்காரவைத்துவிட்டு ஊழியர்களே அவர்களுக்கு தலைவராக செயல்படுவதால் இந்த அவலம்.
அதிகாரிகளாகவும் எஜமானர்களாகவும் ஊழியர்கள் ஓங்கி நிற்பது வேதாகம முறைப்படி தவறு அல்லவா?
ஜெபிப்பதிலும் போதிப்பதிலும் தங்களது கவனத்தை விட்டு நிர்வாகத்தில் ஊழியர்கள் இறங்கக்கூடாது.
இவர்களது இந்த தவறான முயற்சியில் *ஒருவேளை அரசாங்கம் கிறிஸ்துவின் சபையை சிறுபான்மை என்ற பட்டியலில் கொண்டுவந்தால்*:
அரசாங்கத்தின் பார்வையில் ஒவ்வொரு பிராந்திய சபையின் சுயாட்சியும் கேள்விக்குறியாகும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
அரசாங்கம் உங்களது கதவை தட்டி சர்டிபிகேட் கேட்கும்.
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் கிறிஸ்துவின் சபை என்ற பெயரை பயன்படுத்துவதாயிருந்தால் அவர்கள் தங்களது வரையறையை உங்களுக்கென்று வகுப்பார்கள்.
பிற்காலத்தில் விக்கிரகத்தை பற்றும் வேறு அரசாங்கம் வராமல் போய்விடுமோ?
இந்த அரசாங்கம் ஏறெடுக்கும் எந்த முயற்சியும் வருங்காலத்தில் வரும் எந்த அரசாங்கத்திற்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.
நாம் எப்படி சபையை நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை அந்நியனும் புறமதத்தினரும் சட்டத்திட்டத்தை நமக்கு சொல்லிக்கொடுப்பார்கள்.
சொற்ப லாபத்திற்கும் கட்டிட செலவிற்கும் அவர்களிடம் கையேந்தி சிலர் லாபம் அடைந்தாலும் மற்ற அனைத்து கிறிஸ்துவின் சபை பெயர் பலகைகளும் அரசாங்க சட்டத்திற்கு உட்படவேண்டிவரும்.
நமக்கென்ன? என்று இந்த குழுவில் இடம்பெறாத மற்ற பிராந்திய சபையின் ஊழியரும் மூப்பரும் அமைதியாய் நில்லாமல் அனுபவத்தில் மூத்திருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இதை கவனத்தில் கொண்டு தங்கள் கையை உயர்த்துங்கள்.
இந்த கூட்டு முயற்சியை வைத்து அரசாங்கத்தில் ஆதாயம் பெறுவதை விட்டு;
விசுவாச வைராக்கியத்திற்கு பயன்படுத்துங்கள்.
எத்தனையோ வகையில் வருங்கால சந்ததியை கிறிஸ்துவிற்கென்று கட்டியெழுப்ப இதை முன்னெடுங்கள்.
ஒருவேளை இந்த காலம் கடந்து போனாலும் இன்னுமொரு எஸ்தரும் மொர்தெகாயும் இல்லாமற் போவார்களோ?
இணைந்து சீர் செய்யப்படவேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.
*குறிப்பு* : என்ன நடந்தாலும், கிறிஸ்துவின் சபை எப்போதும் தனித்துவமாய் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். அது ஒரு போதும் கறைப்படுவதில்லை. ஆகவே அதை எவரும் *மீட்டு எடுக்கவேண்டிய அவசியமில்லை*. அது எப்போதும் சீராய், கிரமமாய், தேவனுடைய வார்த்தையின்படி இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.
எந்த புரிதலில் நாம் இருக்கிறோம் என்பதே காரியம்.
கிறிஸ்துவின் சபையில் இருக்கிறோமா அல்லது கிறிஸ்துவின் சபை என்ற சபையில் இருக்கிறோமா?
செயலில் இறங்கவேண்டிய நேரம் இது. மௌனமாய் இராதேயுங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
யோவான் 6:67... கிறிஸ்துவினுள் இருந்த அந்த வைராக்கியத்திற்குள் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் !
இதன் 68ம் வசனம் இன்றைய நாட்களில் நமக்குறிய கேள்வி!
எடி ஜோயல் சில்ஸ்பி
ஊழியர், கிறிஸ்துவின் சபை
கணியாகுளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக