செவ்வாய், 21 மார்ச், 2023

#1184 - சாத்தான் எப்படி ஏதேன் தோட்டத்தில் நுழைந்தான்? அவனால் எப்படி நுழைய முடிந்தது??

#1184 - *சாத்தான் எப்படி ஏதேன் தோட்டத்தில் நுழைந்தான்? அவனால் எப்படி நுழைய முடிந்தது??*

*பதில்* : ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில், ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சர்ப்பம் எப்படி பேசியது என்பதைக் குறித்து நமக்கு வேதம் எந்த பதிவையும் தரவில்லை. ஆனால், சர்ப்பம் பேசியதன் நிமித்தம் ஏவாள் அதிர்ச்சியடைந்ததாக  எந்த அறிகுறியும் இல்லை.

வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் சர்ப்பத்தை பிசாசுடன் வெளிப்படையாக அடையாளம் காட்டப்படவில்லை என்றாலும், கடைசி புத்தகத்தில் சாத்தானுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. (வெளி. 12:9; 20:2)

தோட்டத்தில் சர்ப்பம் இருந்தது என்பது வேதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. தேவன் உருவாக்கிய விலங்குகளில் ஒன்றாகவே அது இருந்தது. (ஆதி. 1:25; 2:19). சர்ப்பம் எனப்பட்ட பாம்பு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. அதுவும் தேவனால் உண்டாக்கப்பட்டவை தான். ஏவாளை வஞ்சிக்க சாத்தானால் சர்ப்பம் பயன்படுத்தப்பட்டது. மற்ற எல்லா உயிரினங்களை விட சர்ப்பம் தந்திரமானது. 2கொரி. 11:3, ஆதி. 3:1

ஏதேன் தோட்டத்திற்குள் நுழைவதற்கு தேவன் ஏன் பிசாசுக்கு அனுமதி அளித்தார்? ஆதாம் ஏவாளை சாத்தான் எப்படி அணுகினான்? யோபுவை சோதிக்க சாத்தான் தேவனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது என்றறிகிறோமே. யோபு 1

ஆதாம் மற்றும் ஏவாளின் சோதனையின் நோக்கத்திற்காக சாத்தான் தோட்டத்திற்குள் நுழைவதை தேவன் அனுமதித்திருக்கவேண்டும். அதற்கான நேரடி வசன ஆதாரம் காணமுடிவதில்லை. இருப்பினும், தேவ வார்த்தைக்கு முற்றிலும் முழுவதும் கீழ்படிதல் என்பது அவசியமாகிறது. அதை மீறும் பொழுது நாம் எவரும் பாவத்திற்குள்ளாகிறோம். 1யோ. 3:4

சர்ப்பம் தந்திரத்தினால் ஏவாளை ஜெயித்து விட்டது என்று சொல்வதற்கில்லை.
கேட்பவர் கவனமாய் இருப்பது அவசியம்.

*கூடுதல் தகவல்:*
தேவன் சொன்னவைகளையும் சர்ப்பம் சொன்ன வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டு பார்த்தால் இக்கால ஆபத்தையும் அதில் தெளிவாக உணரலாம் !!

*தேவன் சொன்னது* :
ஆதி. 2:16-17 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; *அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்* என்று கட்டளையிட்டார்.

*சர்ப்பம் சொன்னது*:
ஆதி. 3:1-5 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே *உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து* தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

பாதியை சொல்வது – முழு பொய்க்கு சமம் என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. Half Truth is Full Lie என்பதாகும்.

யாரை நம்புவது? சகலத்தையும் படைத்த தேவனையா அல்லது இடையில் வந்து நமக்கு பாடம் எடுப்பவர்களையா?

“தேவன் சொன்னது”:  அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று.
“சர்ப்பம் சொன்னதோ“: நீங்கள் சாவதில்லை, உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று.

புத்திசாலியான எவராலும் எவர்கள் சோதிக்கப்பட்டாலும், அவர்கள் பாவம் செய்ய வேண்டியதில்லை! ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே அச்சுஅசலாக கீழ்படிதல் என்பது முழுமையாய் இருத்தல் அவசியம்.

அதில் எந்த பாகுபாடும், விகிதாச்சாரத்தையும் நாம் கைக்கொண்டால் வஞ்சிக்கப்படுவது உறுதி.

தேவன் முன்கூட்டியே அதன் விளைவுகளைச் சொல்லியிருந்தார். அவர்களோ அவருக்குக் கீழ்ப்படியாததையேத் தேர்ந்தெடுத்தனர்.

சர்ப்பம் சொன்னதற்கும் தேவன் சொன்னதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

தேவனது கூற்று – பரலோகத்தைக் குறித்தது.
சாத்தானின் கூற்று – பூலோகத்திற்குறியது!!

1யோவான் 2:16ல் சொல்லியபடி ஏவாள் அந்த மூன்று எல்லைகளிலுமே வீழ்ந்தார். அவை அனைத்துமே பூமிக்குரியவைகளே!!

பரலோக வாழ்வை மறைத்து பூலோக வாழ்வை மாத்திரமே வெளிக்காட்டும் இக்காலத்திலும் ஏவாளைப் போன்றே கிறிஸ்தவ மதப் போதகர்கள் உட்பட ஜனங்கள் அனைவரும் இப்பூமியின் ஆசீர்வாதங்களுக்காகவே தேவனை தேடி அலைகின்றனர். சபைக்கு வந்தால் கடன் தீரும், வயிற்றுக் கட்டி கரையும், கான்சர் குணமாகும், இருதய ஓட்டை மறையும், கார் வாங்கலாம், பங்களாவில் வாழலாம், சகல ஆசீர்வாதமும் பெருகும் என்று இப்படியான பூமிக்குரியவைகளையே சிந்திக்கும் திறன் தேவனுக்கு விரோதமானது!!

இவ்வுலக வாழ்க்கைக்காக அல்ல – நித்திய ஜீவனுக்காக தேவனைத் தேடவேண்டும். அப்போது அவர் இவ்வுலகத்தை ஜெயிக்கும் பெலத்தையும் சேர்த்து தருவார். மத். 6:33

பாதி உண்மையை அல்ல… முழு வார்த்தையையும் கடைபிடித்தாலன்றி தேவனை நாம் அடையமுடியாது!!

*எடுத்துக்காட்டு:*

அனைவரும் விரும்பி சொல்லும் வேதவசனம் “*தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்*” என்னும் வாக்கியம்!

ஆனால், இந்த வசனத்தின் முழு வாக்கியமோ முற்றிலும் மாறுபட்டது!

முழுவசனத்தை இங்கே காணவும்:
“ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”

ஆம், அவருடைய தீர்மானத்தின்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோமா?
அவரது தீர்மானத்தின்படி நீங்கள் இரட்சிப்பிற்குள் வந்தீர்களா?

இல்லையெனில் – இன்றும் உங்களுக்கு காலம் உள்ளது!! முறையாய், சத்தியத்தை அறிந்து, உணர்ந்து, மனந்திரும்பி, விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்று இரட்சிப்பின் பாதையில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். மாற்கு 16:16, அப். 2:38

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்கள் இந்த பதிவை கவனித்து தங்கள் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ளவும்.

*கேள்விக்கான சாராம்சம்*: சாத்தான் ஏவாளை ஏமாற்றும் நோக்கத்திற்காக ஒரு மெய்யான உயிரினமான சர்ப்பத்திற்குள் நுழைந்தான். சோதனைக்காரன் தனது தந்திரத்தைப் பயன்படுத்தி அவர்களைப் பாவம் செய்ய தூண்டி வெற்றியும் கண்டான்.

தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்திருந்தால் அவர்கள் சோதனையை எதிர்த்திருக்கலாம் ஜெயித்தும் இருக்கலாம். அது அவர்களது தெரிவு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக