வியாழன், 15 அக்டோபர், 2020

#1024 - யோவான் ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவின் சபைக்குள் வருவதற்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றது போல (அப்:19:1-7), இயேசுவினாலும், (யோவான்:3:22,26, 4:1) அப்போஸ்தலராலும் (யோவான்:4:3), ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவின் சபைக்குள் வருவதற்கு மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்களா?

#1024 - *யோவான் ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவின் சபைக்குள் வருவதற்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றது போல (அப். 19:1-7), இயேசுவினாலும், (யோவான் 3:22,26, 4:1) அப்போஸ்தலராலும் (யோவான் 4:3), ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவின் சபைக்குள் வருவதற்கு மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்களா?*

*பதில்* :
நான்கு பாகங்களாக உங்கள் கேள்விக்கு பதிலளித்தால் மாத்திரமே இந்த கேள்விக்கான பதிலை சரியாக அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

*முதலாவது*:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது *அப்போஸ்தலருக்கு* கொடுக்கப்பட்டது.

அப்போஸ்தலர் என்பது தெரிந்தெடுக்கப்பட்ட 12 பேருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது என்பதை முதலாவது புரிந்துக் கொள்ளவேண்டும்.

இந்த வாக்கியத்தை படித்ததுமே 120 அல்லவா என்று நினைக்கத் தூண்டும். பொறுமையாய் கீழே படிக்கவும். 12ஆ 120ஆ என்று கேட்பவர்கள் 493ஐ வாசிக்கவும்.

அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது *பிதாவின் வாக்குத்தத்தம்*. அப். 1:5

அதைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர்கள் *எருசலேமைவிட்டு வெளியே போகக்கூடாதென்று* கட்டளைப் பெற்றார்கள். அப். 1:5

”*நீங்கள்*” சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்றார் இயேசு கிறிஸ்து. அப். 1:4

”*நீங்கள்*” என்பது – இந்த வசனத்தை இன்றும் வாசித்துக்கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் குறிப்பதல்ல, ”அங்கு” கூடியிருந்த *பதினொரு அப்போஸ்தலரைக்* குறிக்கிறது. அப். 1:3, 4

*சில நாளுக்குள்ளே* என்பதைக் கவனியுங்கள்.
இந்த வாக்குத்தத்தம் சொல்லப்பட்டு 10வது நாளில் இயேசு சொன்னது நிறைவேறியது. அப். 2:3

பெண்களில், இயேசுவின் தாய் மரியாள் அந்த இடத்தில் இருந்தபோதும், அப்போஸ்தலராகும்படியான சகலவித தகுதிகளையும் பெற்ற (அப். 1:21-22) மத்தியாஸ் புதியதாக சேர்த்துக்கொள்ளப்பட்டு, பன்னிரென்டு அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற அந்த வாக்குத்தத்தம் பெந்தெகோஸ்தேயன்று (ஐம்பதாவது நாள்) நிறைவேறியது.

வேதாகமத்தில் சொல்லப்பட்ட *அப்போஸ்தலருக்கான தகுதியானது, (அப். 1:22-23) முதல் நூற்றாண்டிற்கு பின்னர் எவருக்குமே பொருந்தாது*.

அப்போஸ்தலர்கள் என்பது 12 பேர் மாத்திரமே.

யூதாஸ்காரியோத்தின் மரணத்தில், 12 என்ற எண்ணிக்கை 11ஆன போது, மத்தியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது போல, யாக்கோபுவின் மரணத்தை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவுல் அந்த இடத்தை நிரப்புகிறார். இதைக்குறித்த விரிவான தகவலுக்கு பதில் எண் 557ஐ வாசிக்கவும்.

*இரண்டாவதாக*:
பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அல்லது குணமளிக்கும் வரங்களை அல்லது விசேஷ வரங்களை, மற்றவர்களுக்கு கொடுக்க முடிந்தது.

கீழே வசனங்களை கவனமாய் வாசிக்கவும்:

பவுல் தீமோத்தேயுவுக்கு வரங்களை கொடுத்தார் - 2தீமோத்தேயு 1:6

எபேசுவில் உள்ளவர்களுக்கு அவர் வரங்களை கொடுத்தார் - அப்போஸ்தலர் 19: 6

பவுல், ரோமாபுரியில் வரங்களை கொடுக்க ஆசையாக இருந்தார் - ரோமர் 1:11

அப்போஸ்தலர் 8: 12-17 - அப்போஸ்தலர் கைகளை வைத்ததன் மூலம் பரிசுத்த ஆவியை சமாரியாவில் உள்ளவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

*அப்போஸ்தலர்களால் தன் தலையில் கை வைக்கப்பட்டு* விசேஷ வரங்களை பெற்றுக்கொண்ட பிலிப்பு, சமாரியாவில் அற்புதங்களை செய்து வந்தார். அப். 6:6

அந்த பட்டணத்தில் மந்திரவாதியாக இருந்த சீமோன் என்பவன், பிலிப்புவின் மூலம் அற்புதங்கள் நடைபெறுவதை அறிந்து, உணர்ந்து தான் செய்து வந்த மந்திர தந்திரங்களை களைந்தெறிந்து கிறிஸ்துவை பின்பற்றி பிலிப்புவை பற்றிக்கொண்டிருந்தான். அப். 8:9-13

சமாரியாவில் கிறிஸ்துவை ஜனங்கள் ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலருக்கு செய்தி போனதால், அவர்கள் சமாரியா தேசத்து ஜனங்கள், விசுவாசத்தில் இன்னும் வளரவேண்டும் என்பதற்காக அப்போஸ்தலராகிய பேதுருவையும் யோவானையும் அங்கு அனுப்பினர். அப். 8:14.

அப்போஸ்தலர்கள் வந்து சமாரியாவின் ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்ததால் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம் பண்ணி அவர்கள் தலையில் *அப்போஸ்தலர்கள் தங்கள் கைகளை வைத்த போது* அவர்களும் பெற்றுக்கொண்டனர். அப். 8:15-17

அந்த சம்பவத்தை கவனித்த (மந்திரவாதி) சீமோன், பிலிப்புவினால் அற்புதம் செய்யமுடிகிறதேயன்றி பரிசுத்த ஆவியை மற்றவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை என்றும், ஆனால் அப்போஸ்தலர் தங்கள் கைகளை வைப்பதினால் பரிசுத்த ஆவியைக் மற்றவர்களுக்கு கொடுக்கமுடிகிறது என்பதை  அறிந்ததினால், அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து அந்த தகுதியை தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டதையும் அவன் பேதுருவினால் கண்டிக்கப்பட்டதையும் அப்போஸ்தலர் 8:18-24ல் வாசிக்கிறோம்.

இதனிமித்தம், அப்போஸ்தலரால் மாத்திரமே இதை செய்ய முடிந்ததென்றும், அவர்களிடம் பெற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களுக்கு அதை கொடுக்கமுடியவில்லை என்பதையும் நாம் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

*மூன்றாவதாக*:
கொர்நேலியுவின் வீட்டில் பரிசுத்த ஆவியினால் நேரடியாக நிரப்பப்படுவதை கவனிக்கவும்.

இந்த சூழ்நிலையை நன்கு அறிந்து கொள்வது அவசியம்.

கிறிஸ்தவம் முதன் முதலில், யூதர் அல்லாத புறஜாதியார் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதை விவரிக்கும் சம்பவம் அப். 10:44-47ல் சொல்லப்படுகிறது.

புறஜாதியாருடன் யூதர்கள் கலப்பது, நியாயபிரமானத்தின் படி தடுக்கப்பட்ட ஒன்று. அது அவர்களுக்கு (யூதர்களுக்கு) அசுத்தமான காரியம்.

அதனாலேயே, பேதுரு அங்கு போவதில்லை என்று மறுக்கும் போது, தேவன் இடைப்பட்டு பேதுருவை போகுமாறு கட்டளை கொடுக்கிறார்.

யூதர்கள் உயர்ந்தவர்கள் என்றும், நம்மை போல உள்ள யூதரல்லாத புறஜாதியினர் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், பேதுருவும் அவரோடு கூட சென்றவர்களும் தங்கள் மனதில் கொண்டிருந்த எண்ணம் எடுத்துப்போடும்படியாக கொர்நேலியு மற்றும் குடும்பத்தினர் மீது ஆவியானவர், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்பாகவே “வரமாக” கொடுத்தருளப்பட்டார் (அப். 10:46). ஞானஸ்நானம் தங்களுக்கு மாத்திரம் தான் என்று யூதர்கள் நினைத்து கொண்டு இருந்த காலம் (அப். 10:47).

பரிசுத்த ஆவியானவர் “வரமாக” அவர்களுக்கும், அதாவது தாழ்ந்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று அழைக்கப்பட்ட யூதரல்லாத நம்மைப்போல புறஜாதியினருக்கும் கொடுக்கப்பட்டதை கண்ட யூதர்கள் (பேதுருவும் கூட சென்றவர்களும்) உடனடியாக இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு *ஞானஸ்நானங்கொடுக்கும்படி பேதுரு கட்டளையிட்டார்*.  அப். 10:47-48

இந்த சம்பவத்திற்கு பின்னர் - புறஜாதிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ஞானஸ்நானமானது எந்த தடையும் இல்லாமல் கொடுக்கப்பட்டதை வேதத்தில் பார்க்க முடிகிறது.

*நான்காவதாக*:
யோவான் ஸ்நானன் கொடுத்தது மனந்திரும்புதலுக்கென்ற ஞானஸ்நானம். அப். 19:4

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் சேர்வதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டது பாவமன்னிப்பிற்கென்ற ஞானஸ்நானம்.அப். 2:38, 22:16

நீங்கள் குறிப்பிடும் அப். 19:1-7ம் வசனத்தின் சம்பவத்தில், அவர்கள் பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெறாமல் இருந்ததால் அவர்களுக்கு தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதுமல்லாமல், அப்போஸ்தலனாகிய பவுல் அங்கு இருந்ததால், அவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவர்கள் தலையில் கை வைத்ததினால் வரங்களை பெற்றார்கள். அப். 19:3-6

நமக்கு கட்டளையிடப்பட்ட ஞானஸ்நானம் என்பது ஒன்று தான். எபே. 4:5

சிறு குழந்தையில் கொடுக்கப்பட்டதோ, சத்தியம் தெரியாமல் எதற்கு ஞானஸ்நானம் எடுக்கிறோம் என்று அறியாமல் தண்ணீரில் முழுகி விட்டதோ ஞானஸ்நானம் என்று வேதத்தின்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

ஞானஸ்நானம் எடுக்கும் போது பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்தீர்களா?

இல்லையென்றால், இயேசுவே தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து, பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்படியாக பாவமன்னிப்பிற்கென்று (ஒரே) ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது, கர்த்தர் தன் சரீரமாகிய சபையில் சேர்க்கிறார். அப். 2:47
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக