செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

#1177 - கிறிஸ்தவர்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் சொல்வது தவறானதா?

#1177 - *கிறிஸ்தவர்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் சொல்வது தவறானதா?*

கிறிஸ்து இயேசுவுக்குள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றவனும் தான் பரிசுத்தமாக்கப்பட்டதை விசுவாசம் இல்லாமல் தேவனுடைய கிருபையை அவிசுவாசத்தினாலே மறுதலிக்கும் வகையில் நான் பரிசுத்தவான் இல்லை பாவி என்று சொல்லிக் கொள்பவர் எதற்காக ஞானஸ்நானம் பெற்றிருப்பார்? தேவன் நம்மை நீதிமானாக்குகிறார். பரிசுத்தவான்களாக பரிசுத்த ஜாதியாக ஆசாரியர்களாக மாற்றியிருப்பதை மறுதலிக்கும் மன நிலையிலிருப்பது ஏன்?

*பதில்* : பரிசுத்தவான் என்ற வார்த்தை தமிழ் வேதாகமத்தில் முதன்முதலில் வருவது லேவியராகமம் 20:26ல் “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்” என்பது.

மூல வார்த்தையான எபிரேயத்தில் “பாவ்தல்” என்றுள்ளது. அதற்கு பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று தமிழ் அர்த்தம்.

அதுபோல, பரித்தவான் என்ற வார்த்தையை உள்ளடக்கி புதிய ஏற்பாட்டில் முதன்முதலில் வரும் இடம் மத்தேயு 27:57ல் ”கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது”.

புதிய ஏற்பாட்டின் மூலவார்த்தையான கிரேக்கத்தில் “ஹேக்கியோஸ்” என்றுள்ளது. அதற்கு, சரீர பிரகாரமாக அல்லது தார்மீகமாக அல்லது ஆன்மீகத்தில் வேறுபிரிக்கப்பட்டு பரிசுத்தமானவர்கள் என்பது தமிழ் அர்த்தம்.

ஆன்மீகத்தில் அழுக்கு நிறைந்த நம்மை சுத்திகரிப்பதற்கு உகந்தவர் நம்மை உருவாக்கின சிருஷ்டிகர் மாத்திரமே. யாத். 31:13; லேவி. 20:8; 21:8; 21:9

நாம் பரிசுத்தமாவதற்கு அவரது வார்த்தைக்கு கீழ்படிந்து அவ்வாறே அந்த வார்த்தைக்கு நம்மை உட்படுத்தும் போது அதாவது நாம் அவருடைய வசனத்தைக் கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது நமது பாவங்களை கழுவி நம்மை சுத்திகரித்து பரிசுத்தமான பாதையில் நிறுத்துகிறார். “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” யோ. 17:17.

தேவனுடைய வார்த்தைக்கு சரியாக தன்னை ஒப்புக்கொடுத்து கீழ்படிந்தும், தேவ வார்த்தையின்படி நடந்தாலும், இரட்சிப்பின் பாதையில் சரியாக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாலும், நாம் இன்னும் இரட்சிப்பில் முழுமையடையவில்லை. இவ்வுலகில் நமது மூச்சு உள்ள வரை தேவனுடைய வார்த்தைக்கு மீறாமல் வாழவேண்டுமே என்ற பயம் நம்மை எப்போதும் பற்றிக்கொள்கிறது. தன்னைக் குறித்து தீமோத்தேயுவிற்கு எழுதும் போது முற்காலத்தில் நான் பாவியாயிருந்தேன் என்று குறிப்பிடாமல் பிரதான பாவி நான் என்று பவுல் சொல்வதை நாம் கவனிக்கலாம். 1தீமோ. 1:15

அப்போஸ்தலன் என்று தன்னை விலையேறப்பெற்றவனாக சொல்லும் அளவிற்கு இயலவில்லையென்கிறார் பவுல். 1கொரி. 15:9

வயதில் முதிர்ந்த அப்போஸ்தலன் தனது அனுபவத்தில் கிறிஸ்தவர்களாகிய நமக்குச் சொல்லும் ஆலோசனை 1யோவான் 2:1-2ல் ”என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” என்கிறார்.

அதாவது, பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், தங்கள் இறுதி மூச்சுவரைக்கும் வழி மாறுவதற்கான சகல சாத்தியக்கூறுகளையும் பிசாசு கொண்டுவருவான் என்பது திண்ணம்.

வயதிலும் விசுவாசத்திலும் அன்பிலும் அனுபவமிக்க யோவான் அப்போஸ்தலன் இரண்டு முறை தூதனுடைய காலில் விழுந்து வணங்க முற்பட்டது இதற்கான பெரிய உதாரணம் !!! வெளி. 19:10; 22:8-9

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 1யோவான் 3:9

சேற்றில் விழுந்த ஆடு உடனடியாக வெளியேறும் ஆனால் பன்றியோ சேற்றிலேயே பிரண்டு உருளுவதற்கு பிரியப்படுவது போல, ஒரு முறை தேவ அன்பை ருசிபார்த்தும், பரமஈவை பெற்றும், அறிந்தே பின்வாங்கி போகிறவர்கள் பாவத்தில் அகப்பட்டவர்களே.  பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; 1யோவான் 3:8

நம்மை பரிசுத்தவான்களாயிருக்கும்படிக்கு தேவன் நம்மை பரிசுத்தப்படுத்திறவர்.

முடிவுபரியந்தம் பரிசுத்தத்தில் நிலைத்திருப்பதும் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பை பாதுகாத்து நமது வாழ்வின் பயண ஓட்டத்தை செவ்வனே முடிப்பதும் அவசியமாயிருக்கிறது. எபி. 6:12; 3:14; 3:6; 2கொரி. 1:13; மாற்கு 13:13

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நாம் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் நம்மை ஸ்திரப்படுத்துகிறார். 1கொரி. 1:8

அவரவர் தன்னில்தானே வேதத்தின்படியான பரிசுத்தத்தில் இல்லையென்பதை நாம் வெளிப்படையாக அறியாதபட்சத்தில் அவர்களை பரிசுத்தான்கள் என்று அழைப்பதில் தவறில்லை. எபி. 13:24; பிலே. 1:7; 1:4; கொலோ. 1:27

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக