#1138 - *சபையில் சேர்க்கப்படும் காணிக்கை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக்கூடாதவை எவை?* ஊழியரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சபையாரை அழைத்து செல்ல பயணத்திற்காக செலவு செய்கிறார்கள். ஊழியருக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், கணவனையிழந்த வறுமையான ஒரு குடும்பத்தின் ஜெபக்கூட்டத்திற்கு சபையாரை அழைத்து ஜெபக்கூட்டம் வைத்து உணவு பரிமாறினபொழுது ஊழியர் வீட்டுக்கு வந்தால் ஏன் பணம் தரவில்லை என்று தொழுகையிலேயே பிரசங்கத்திலும் கேட்கிறார். ஊழியர் இப்படி பணம் கேட்பது சரியா? சற்று விளக்கம் தாருங்கள்.
*பதில்* : தங்கள் நிலத்தையும் சொத்துக்களையும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் அதாவது அவர்களது பொறுப்பில் கொடுத்தார்கள் (அப். 4:35-37; 5:2; 2:45)
ஜெப ஆலய வாசலில் தன்னிடம் பிச்சைக் கேட்டவரிடம் தருமம் செய்யும்படிக்கு தன் வசத்தில் எந்த பணமும் இல்லை என்றார் பேதுரு. ஆம், அப்போஸ்தலர்கள் சபை பணத்தை தனக்கென்று அல்லது தன் பணப்பையில் அதை சுமக்கவில்லை (அப். 3:6). தங்களது செலவிற்கென்று உழைத்து சாப்பிட்டார்கள். அப். 18:3; 10:6.
உங்களது கேள்விக்கு பதிலளிக்கும் முன்னர் சிலவற்றை பொதுவாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
*ஊழியம் செய்பவர் வேலை செய்ய வேண்டுமா? சபை உதவி செய்ய வேண்டுமா? ஊழியர் குடும்பத்தையே தாங்க வேண்டுமா?*
கண்டிப்பாக வேலை செய்து தன் குடும்பத்தை நடத்த வேண்டும். ஊழியரின் நேரம், சபை மக்களை விசாரிப்பதற்கே வாரம் முழுதும் நாள் முழுதும் அவசியப்படும் பட்சத்தில் அந்த சபை அவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பொருள். அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த சபையே தங்கள் ஊழியரின் தேவைக்கான பணத்தொகையை நிர்ணயம் செய்து தாங்க வேண்டும். அவருக்கு சபை கொடுக்கும் உதவி தொகையானது அவரது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருப்பது அவசியமே. 2தெச. 3:10, எபி. 13:17,
திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன். கலா. 6:6
அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். 1தெச. 5:12-13
அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1கொரி. 9:14
*ஊழியரது பிள்ளைகளின் வழியே அவருக்கு உதவி கிடைக்கும் போதும் சபை அந்த ஊழியரை தாங்க வேண்டுமா?*
ஊழியரை தாங்குவது சபையின் கடமை. அவருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பது சபையாருடைய கவலையாயிருந்தால் சபையாரின் உதாரத்துவம் கேள்வி குறியாகிவிடும். மேலும், ஊழியரும் தன் பங்கின் உதாரத்துவத்தைக் காண்பிக்காமல் இருப்பது அவரது விசுவாச வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.
*ஊழியரின் உதவி (சம்பளம்) யார் முடிவு செய்ய வேண்டும்?*
இந்த கேள்வியை கேட்குமளவிற்கு அந்த சபை வளர்ந்திருக்கிறதாகையால் நிச்சயம் மூப்பர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். சபையின் நிர்வாகம் மூப்பர்கள் கையில் உள்ளது. அவர்களே அதை தீர்மானிக்க வேண்டும். 1தீமோ. 3:1-3
*ஊழியருக்கு தரப்படும் சபையின் உதவி(பணம்) தனக்கு போதுமானதாக இல்லை என்று ஊழியர் செல்லலாமா?*
அவருக்கு அந்த உரிமை இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் மனப்பூர்வமாக சபையில் ஊழியம் செய்வது ஆத்துமாக்களுக்கு ஆதாயமாயிற்றே. வருத்தத்தோடே அவர் ஊழியம் செய்வது சரியல்ல. எபி. 13:17
*ஒரு ஊழியர் ஆதாயத்துக்கு சபையை நடத்துகிறார் அல்லது உண்மையாக சபையை நடத்துகிறார் என்று எப்படி அறிய முடியும்?*
அவருடைய நடவடிக்கைகள் காட்டி கொடுத்து விடும். கனிகளினால் அறிவீர்கள். சபை வளர்ந்த பின்பும் அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பவர் தவறானவர். மூப்பர்களை நியமித்து சபை நிர்வாகத்தை மூப்பர்கள் கையில் ஒப்படைக்க வேண்டியது அவசியம். அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நிர்வாகத்தை தன் கையிலேயே வைத்திருக்கிறவர் சத்தியத்திற்கு கீழ்படியாத சுயநலவாதி.
மூப்பர்களை நியமித்த பின்பும் காணிக்கையை கையில் சுருட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிற ஊழியர் என்றால் தனது வயிற்று பிழைப்பிற்காக சத்தியத்தை வியாபாரம் செய்கிறவரே.
உங்களது கேள்வியின் சாராம்சத்திற்கு வருகிறேன்.
மூப்பர்கள் இன்னும் நியமிக்க முடியாத அளவிலேயே சபை வளர்ச்சிபெற்றுள்ளது என்ற சூழ்நிலையில் இவ்வகையான நிர்வாகக் கோளாறுகள் உருவாகும்.
ஊழியரின் மாத உதவியை சபை அவருக்கு கொடுக்கிறதென்றால் காணிக்கை பணம் சபை கணக்கில் (பொறுப்பில்) அல்லவா இருக்கவேண்டும்? அவர் எப்படி அதை எடுத்து செலவு செய்ய முடிகிறது? நிர்வாகம் சீர்செய்யப்படவேண்டும்.
மேலும், *காணிக்கை பணமானது தேவனுடைய பணம் என்பதை முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.*
அப். 5:4 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
தனது வருமானத்தில் அவர் தனது குடும்ப நிகழ்வுகளின் செலவுகளை செய்யவேண்டும். ஊர் சுற்றுவதற்கு காணிக்கை பணத்தை செலவு செய்ய எவருக்கும் அதிகாரம் இல்லை.
வேலை செய்ய சரீரத்தில் பெலனிருந்தும் வீடு வீடாக பைபிளை தூக்கிக்கொண்டு வாரம் ஒரு ஏரியாவை தெரிவு செய்து ஜெபம் சொல்லி வசூல் செய்பவர்களை யோவான் அப்போஸ்தலன் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். 2யோ. 1:9-10
சபையாரது வீட்டில் நடக்கும் ஜெபக்கூட்டத்திற்கு வரும்போது கட்டாயம் பணம் தரவேண்டும் என்று சொல்வது தவறானது. மாறாக, சபையானது அவருக்கு கொடுக்கும் மாத உதவியில் இப்படிப்பட்ட தனிப்பட்ட கூட்டங்களுக்கான போக்கு வரவு செலவுகளைக் குறித்த புரிதலில் ஏதேனும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்வியே?
சபையார் கொடுக்கும் காணிக்கை பணம் தேவனுக்குரியது (அப். 5:4). அந்த பணத்தை சபை வளர்ச்சிக்கென்றே பயன்படுத்த வேண்டும். (2கொரி. 8:2, 9:5-13)
சொந்த அவசியத்திற்கும் செலவிற்கும் காணிக்கை பணத்தை எடுத்து செலவு செய்யமுடியாது. பணத்தில் குறியாய் இருப்பவர்கள் ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள் (1தீமோ. 3:3).
வேதாகமத்தின்படி ஊழியர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை. அது மூப்பர்களுடைய வேலை !! (1தீமோ. 3:5, அப். 6:2)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக