#1132 - பாவாடை என்று மாற்று மதத்தினர் கிண்டல் செய்யும் அளவிற்கு போட்டுக்கொள்ளும் போதகர்களின் அங்கியைக் குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதா? வேதத்தின்படி விளக்கவும் ஐயா.
*பதில்* : சத்தியம் என்றும் மாறாது. சொல்பவரையும் கேட்பவரையும் நிதானிக்கும். எப்பக்கம் திருப்பினாலும் சத்தியமே. யாத். 32:15; எபி. 4:12
எனது பதில் சிலருக்கு முகச்சுளிவை ஏற்படுத்தினாலும் அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். இந்த பதிலின் நிமித்தம் நமது குழுவிலிருந்து வெளியேறினாலும் பரலோகத்தினுள் போவதற்கான முயற்சியை எடுப்பதே அவசியம் என்ற பாரத்தோடு இதை எழுதுகிறேன்.
நியாயபிரமாணக் காலத்தில் இவ்வுலகத்தினுள் வந்த தேவனாகிய இயேசு கிறிஸ்து; பரிசேயர்களின் மனதை அறிந்து கடிந்துக்கொண்டார்.
என்னவெனில், ஜனங்கள் மத்தியில் இவர்கள் வலம் வரும்பொழுது இவர்களுக்கு பிரத்யேக மரியாதையை ஜனங்கள் செலுத்தவேண்டும் என்று விரும்பினார்கள்.
ஆகவே, கூட்டத்தினுள் தங்களைத் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயபிரமாணத்தின்படி தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உடையின் அடையாளத்தைக் காட்டிலும் விசேஷமாக அணிந்துக்கொண்டு வலம் வந்தார்கள்.
இவ்வித செயலின் நோக்கம் தவறானது. *மனிதர்களுள் எவ்வித வேறுபாட்டையும் மேன்மையையும் வித்தியாசத்தையும் காண்பிக்கக்கூடாதென்று கடிந்துக்கொண்டார்*. அதற்குறிய வசனங்களைக் கீழே பதிவிடுகிறேன்:
மத். 23:5-7 “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்” என்றார்.
இந்த வார்த்தைகளை கூறிய பின்பு கிறிஸ்து, தொடர்ந்து கூறும் போதனையை நாம் கவனிக்கவேண்டும்.
மத். 23:8-10 “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து கவனிக்கவேண்டியவை என்னவென்றால்: கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பின்னர் 50வது நாளில் கிறிஸ்துவின் ராஜ்யமான சபை துவங்கப்பட்டது. அவருடைய சபையில் அனைவருமே பரிசுத்தவான்கள் அல்லது ஆசாரியர்கள் அல்லது சகோதரர்கள் / சகோதரிகளாயிருக்கிறோம். வெளி. 5:10; 1:6; 1பேதுரு 2:9
கிறிஸ்துவின் ராஜ்யமாகிய *சபையில் உள்ளவர்கள் அனைவரும் எவ்வித வித்தியாசமுமின்றி சகோதரர்கள் என்றே அழைக்கப்படவேண்டும்*. மத். 23:8
கிறிஸ்தவத்தில் உள்ளவர்கள், கிறிஸ்துவின் சரீரமாகிய அவரை மாத்திரமே தலையாகக் கொண்டுள்ள கிறிஸ்து ஆரம்பித்த கிறிஸ்துவே நிறுவிய சபையில் அங்கமாக உள்ளவர்கள் வேதத்தை பின்பற்றி புதிய ஏற்பாட்டு சத்தியத்தினுள் வளர்ந்து தங்களுக்குள் ஆடையிலோ மரியாதையிலோ எவ்வித வித்தியாசமுமின்றி அனைவரையும் சரிசமமாக இருக்கவேண்டியது கட்டாயம்.
தங்களைவிட மற்றவர்களை மேன்மையாக நினைத்து, முந்தி மரியாதை செய்யவேண்டும். பிலி. 2:3
ஆனால், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சபையிலுள்ளவர்கள் தங்களுக்கு பிரியப்பட்டவாறு ஆயர் என்றோ, போதகர் என்றோ, பாஸ்டர் என்றோ, ஃபாதர் என்றோ, ரெவரென்டு என்றோ, குருமார் என்றோ அழைத்துக்கொண்டும் தங்களுடைய நிறுவனம் வகுக்கும் பிரத்யேக ஆடைகளை அணிந்துக்கொண்டும் சுய கோட்பாடுகளையும் விருப்பங்களையும் வேதாகம வசனங்களுடன் இணைத்துக்கொண்டு போதகமாக போதித்து வாழ்பவர்களை வேதாகமத்துடன் ஒப்பிட்டு பார்க்கமுடியாது.
ஏனெனில் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உபயோகப்படுத்தினாலும் வேதாகம வசனங்களில் பழையதையும் புதியதையும் இணைத்து வளைத்து சூழ்நிலைக்கேற்ப தங்களது முதலாளி மற்றும் நிறுவனத்தின் கட்டளைப்படியே செயல்பட்டாலன்றி ஊதியம் தரப்படமாட்டாது.
*குறிப்பு*: ரெவரென்டு என்பது மனிதர்களுக்கு பொருந்தாது. அது தேவனுடைய நாமம். சங். 111:9
கிறிஸ்துவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் எவரும் மற்ற சகோதரரிடையே மரியாதையை பெறும்படிக்கு மேன்மைபடுத்தி வேறுபடுத்திக்கொள்வதற்கு வேதம் அனுமதிக்கவில்லை. *அனைவரும் சகோதரர்கள் என்றே அழைக்கப்படவேண்டும்*.
மத். 23:8; 2கொரி. 1:24; 4:5; லூக். 22:32; எபே. 3:15; கொலோ. 1:1-2; வெளி. 1:9, 19:10, 22:9.
வேதத்தில் சொல்லப்படாதவைகளில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் நிச்சயம் மற்றவர்கள் கேள்விக் கேட்கும்போது பதில் சொல்ல ஏதுவில்லாமல் தலைக்குணிவு ஏற்படும். *இவை எல்லாவற்றைக்காட்டிலும் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்து இருக்காவிடில் பரலோகக் கதவு திறக்கப்படாது*.
நமது வாழ்க்கையின் எல்லை பரலோகம் என்பதால், ஜீவனுள்ள போதே; மனிதர்களின் கோட்பாடுகளுக்குள் சிக்கி ஊதியத்திற்காகவும் பதவி போதையிலும் பாரம்பரிய சௌகரியங்களிலும் உள்ளவர்கள் விடுபட்டு உண்மையான சத்தியத்திற்குள் வரவேண்டியது அவசியம்.
தவறான தளத்தில் இருந்துக்கொண்டே வேதத்திற்கு கீழ்படிவதாக நினைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கையில் மாற்றியமைத்துக் கொண்டாலும் முழுமையாக அவற்றினின்று விடுபட்டு முறையான சபையினுள் இணைந்து வேதத்தின்படி இரட்சிக்கபடுவது அவசியம். இல்லையெனில் நித்தியக் கால சுக வாழ்க்கையை இழந்து போக நேரிடும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
வியாழன், 7 ஏப்ரல், 2022
#1132 - பாவாடை என்று மாற்று மதத்தினர் கிண்டல் செய்யும் அளவிற்கு போட்டுக்கொள்ளும் போதகர்களின் அங்கியைக் குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதா? வேதத்தின்படி விளக்கவும் ஐயா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக