*தகிக்கும் நெருப்பே மனித ஞானத்தின் விளைவு!*
by : Eddy Joel Silsbee
புதிய வாழ்வளிக்கும் நாதர் இயேசுவின் நாமத்திற்கு துதியும் ஸ்தோத்திரங்களும் உண்டாவதாக.
அப்பாவும் அம்மாவும், பாட்டியும் தாத்தாவும், கோத்திரமனைத்தும் கிறிஸ்தவராயிருந்தாலும் தங்கள் சொந்த ஆத்தும இரட்சிப்பிற்காக அவரவர் திருமுழுக்கு எடுக்க வேண்டிய அவசியமுள்ளது.
பாரம்பரியத்தைக் காட்டியோ, பரம்பரையைக் காட்டியோ பரலோகக் கதவு திறப்பதில்லை.. !!
அதெப்படி நீ சொல்லலாம் என்று என்னிடம் சண்டைக்கு வந்தவர்களுண்டு! நான் அல்ல வேதம் அப்படியாய் சொல்கிறது...
*வசனங்களை கீழே கவனிக்கவும்:*
யோ. 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்திரமாக: ஒருவன் *மறுபடியும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோ. 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை *ஏற்றுக்கொண்டவர்கள்* எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோ. 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது *மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல்*, தேவனாலே பிறந்தவர்கள்.
1யோ. 5:18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; *தேவனால் பிறந்தவன்* தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; *புது சிருஷ்டியே காரியம்*. கலா. 6:15
மோட்சக் கதவு திறக்காத பட்சத்தில், பூமிக்குத் திரும்பி வரவும் முடியாது அங்கு யாரிடத்திலும் விவாதம் பண்ணவும் முடியாது.
அன்று விவாத நாள் அல்ல – அது *தீர்ப்பு வாசிக்கப்படும் நாள்!*
ஐந்து விநாடிகள் சொந்த விரலை நெருப்பில் காண்பிக்க நமக்கு முடியாது. மேலும், பற்றியெறிந்துக்கொண்டிருக்கும் நெருப்பிற்கு அருகாமையில் போன அடுத்த விநாடியிலேயே அனல் பறக்கிறதென்று விலகி ஓடுகிற நாம், அழிவேயில்லாத சரீரத்துடன் தீப்பிழம்பிற்குள் நம்மை தள்ளினால் என்னவாகும்? வேதனையிலும் வேதனை.. சொல்லமுடியாத வேதனையல்லவா! 1கொரி. 15:42; 52
ஆகவே,
நீங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லது இயேசுவே என் இரட்சகர் அல்லது சொந்த இரட்சகராக ஆண்டவரை ஏற்றுக்கொண்டேன் என்று வாயாலே சொன்னதுமே இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்றோ; ஞானஸ்நானம் அவசியமில்லை;
சல்யூட் அடித்தால் போதும்;
கும்பிட்டால் போதும்;
அபிஷேகம் பெற்றுவிட்டீர்கள்;
வாரந்தோறும் அப்பத்தில் பங்கெடுத்தால் போதும்;
வாராவாரம் சபைக்கு வந்தால் போதும்;
தசமபாகம் தவறாமல் கொடுத்தால் போதும்;
ஞானப்பெற்றோரின் மூலம் குழந்தையிலேயே ஞானஸ்நானம் பெற்றதே போதும்;
என்று எப்படிப்பட்ட அதீத ஞானியின் போதனையையும் நம்பி சொந்த ஆத்துமாவை *சதா எரிந்துக்கொண்டிருக்கும் வேதனையான நரகத்திற்குள் நீங்களே உங்களை போட்டுக்கொள்ள காரணமாகிவிடாதீர்கள்*.
இரட்சிக்கப்படும்படிக்கும் பாவமன்னிப்பை பெறும்படிக்கும் வசனத்தைக் கேட்டு, மனந்திரும்பி, விசுவாசத்தை அறிக்கையிட்டு முழுகி ஞானஸ்நானம் பெறவேண்டியது வேதத்தின்படி கட்டாயம். வீம்பும் வைராக்கியமும் இந்த மூச்சு முடிந்ததும் ஒன்றுக்கும் உதவாது! மாற்கு 16:15-17; அப். 2:37-38; 20:7
வேதத்திற்கு கீழ்ப்படிவதே உகந்தது. இன்றே தீர்மானியுங்கள். முறையான ஞானஸ்நானத்தை பாவமன்னிப்பிற்கென்று முறையான இடத்தில் சத்தியத்தைக் கேட்டு அறிந்து கீழ்படிந்து அதன்படியே வாழ்ந்து பரம ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக