புதன், 23 பிப்ரவரி, 2022

தேவச் செய்தியா? கிளி ஜோசியமா? – தீர்மானம் நமதே !!

*தேவச் செய்தியா? கிளி ஜோசியமா? – தீர்மானம் நமதே !!*

by : Eddy Joel Silsbee

 

நம் மீது கன்னோக்கமாயிருக்கிற நம் இரட்சகர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வேதாகமத்தை வாசிக்கும் போது, வாசிக்கும் பகுதிகளை உணர்வுடன்  புரிந்து தியானிக்க பழகுவோம்.

 

அவசர அவசரமாக படிப்பதோ,

இன்றைய வசன பகுதியை படிக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ,

வசனம் படிக்காவிட்டால் தெய்வக்குற்றம் என்ற எண்ணத்திலோ,

செய்திதாளில் அல்லது நாட்காட்டியில் அன்றைய ராசிபலன் பார்ப்பது போல வேத வசனப்பகுதியில் இன்றைய வாக்குறுதி என்ன என்று பார்ப்பதோ,

காலையில் வசனம் படிக்கவில்லையென்றால் அன்று முழுக்க மனசே சரியில்லை என்ற கடமைக்காகவோ

வேதத்தை வாசித்து ஓடும் பழக்கமில்லாதபடிக்கு;

 

தேவன் நமக்கு என்ன உணர்த்துகிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வேதத்தை படித்து உணர்வுடன் புரிந்துக் கொண்டாலேயன்றி சுய வாழ்வில் மாற்றம் வராது !!

 

ஐந்து வருடங்கள் சபைக்குச் சென்றாலும், பத்தாயிரம் தேவச்செய்தி கேட்டாலும்; வாழ்வில் எந்த மாற்றமும் வராததற்கு காரணம் – சபையோ அந்த ஊழியரோ அல்ல… மாறாக தங்களுக்கு பிடித்தவாறு அவர்கள் பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் சென்று தேவச் செய்தியைக் கேட்பதற்கு பதிலாக - *நமக்கு பிடித்த நல்ல கிளி ஜோசியரிடத்தில் போவது மேல்*.

 

ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 2தீமோ. 4:3-4

 

நாம் செய்யும் தவறுகளை தேவச் செய்தியிலும் வாசிக்கும் வசனங்கிளிலும் உணர்த்தப்பட்டால் உடனே வேறு அதிகாரத்தை மாற்றி வாசிப்பதும், ஊழியரையும் சபையையும் மாற்றுவதும் சுய வாழ்க்கைக்கு கேடு வரவழைக்கும்.

 

யூதாவின் இராஜாவாகிய ஆசாவின் வாழ்வும் அப்படியே இருந்தது.

 

2நாளா. 16:9-10 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; *இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்*; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

 

குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியவில்லையே என்று யோசிப்பவர்கள் தனது வாழ்வில் வசனத்தின்படி என்ன மாற்றம்  வரவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டும். ஆசாவின் காலங்களில் எப்போதும் அந்த பிரச்சனை இருந்தது. 1இரா. 15:32

 

நமது தவறுகளை களைந்து தேவனுக்கு உகந்தாற்போல் சுய வாழ்வில் மாற்றம் வர – உணர்வுடன் வசனத்தைக் கேட்போம். உணர்வுடன் வசனத்தைப் படிப்போம்.

 

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். (சங். 119:34)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/btxsXsv44zw

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக