புதன், 12 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 12 May 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 12 May 2021

by : Eddy Joel Silsbee

 

ஓய்வுநாளுக்கும் மேலாகர்த்தருடைய நாளை நியமித்தவரும்,  வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் தன் பிதாவினிடமிருந்து பெற்ற நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தேவனுக்கென்று ஒரு ஆலயத்தை கட்டிமுடித்து, பிரதிஷ்டை செய்து சகல பலிகளும் ஏறெடுத்து, அனைத்து ஜனங்களும் சந்தோஷத்துடன் தங்கள் வீட்டிற்கு திரும்பிபோனதும், தேவன் மனங்குளிர்ந்து சாலமோன் கட்டிய அந்த ஆலயத்தை தன்னுடையதாக தெரிந்து கொண்டதாக பிரகடனம் செய்தார் (2நாளா. 7:12)

 

ஆலயத்தின் மேன்மையையோ, முறைமைகளையோ, வழிமுறைகளையோ ஆலோசனையாக சொல்லாமல், சாலமோனுக்கு தேவன் தெரிவித்த முதல் தகவலே அவர் நம் செயலின் மீது எவ்வளவு கவனத்தோடு இருக்கிறார் என்பதை காண்பிக்கிறது.

 

*ஜனங்களுக்கு மேட்டிமை வந்தால்* :

 

1-வானத்தின் மழை அடைக்கப்படுகிறது. 2நாளா. 7:13, உபா. 11:17, வெளி. 11:6

 

2-தேவனை சாராமல் தங்கள் கரங்களின் கிரியைகளினாலே இவைகளை எல்லாம் சாதித்து வளர்ந்தோம் என்று நினைக்க ஆரம்பித்தால் அந்த செழிப்பை எல்லாம் அழிக்கும்படி முதுகெலும்பில்லா வெட்டுக்கிளிகள் அனுப்பப்படுகிறது. 2நாளா. 7:13, சங். 107:34, உபா. 11:17

 

3-எங்கள் திறமையினால் எங்களை நாங்களே ஆண்டுகொள்ளமுடியும் என்று வைராக்கியங்கொள்ளும்போது கொள்ளைநோய் அனுப்பப்படுகிறது. 2நாளா 7:13, உபா. 11:17

 

என்பதை தெரிவித்தது மாத்திரமல்லாமல்;

 

*என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்* தங்கள் செய்கைகளை உணர்ந்து மனந்திரும்பினால் (?!) அனைத்தையும் நான் மன்னித்து, க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்றார். 2நாளா. 7:14, லேவி. 26:40-41, உபா. 4:29-30

 

ஆம்.... இந்த காலங்களில் :

எத்தனை ஆயிரம் விஞ்ஞானிகள் இருந்தும்;

கோடிக்கணக்கான அறிவாளிகள் இருந்தும்;

எண்ணுக்கடங்கா மருத்துவர்கள் இருந்தும்;

அனைத்துலக நாடுகளும் கைகோர்த்தாலும்;

 

விக்கிரக ஆராதனைகளும், தவறான புரட்டு பிரசங்கங்களும், யார் சரி யார் தவறு என்று அறிய முடியாத அளவிற்கு வளர்ச்சியும் சூழ்ச்சியும் பெருகிப் போன இக்காலத்தில்... நாம் தேவனுக்குரிய பயத்துடன், அவருக்கே சவால்விடும்படியாக ஜெபிக்காமல், தாழ்மையுடன் மன்றாடி, தேவநம்பிக்கையுடன், கிறிஸ்தவின் போதனைக்கு மாத்திரம் செவிசாய்த்து, தேவனின் கிருபைக்காய் வேண்டுவோம்.

 

உலகமெங்கும் இப்போது கட்டுக்கடங்கா பிணங்கள் தினமும் விழுந்துகொண்டிருக்கும் இந்த கொள்ளை நோயின் நாட்களில், தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்னும் கவனம் ஒருபக்கமிருக்க, ஜீவனையும் சுவாசத்தையும் தரும் கடவுளுக்கு முதலாவது கீழ்படிந்து அவரை நோக்கி பார்ப்போம் !!

 

மனித ஞானமும் அறிவும் தேவனுக்கு முன்பாக தூசியும் பைத்தியமுமாக இருக்கிறது. பிர. 2:12, ஏசா. 44:25, 1கொரி. 3:19

 

எரே. 8:22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? 

 

தேவனால் மாத்திரமே தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறியவேண்டும். ஏசா. 45:19

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

எமது வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக