#1092 - *யூதாஸ் இயேசுவை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்? இயேசுவை அவர்கள் முன்பே கண்டதில்லையா? அவர்கள் அவரை கண்டிருந்தால் ,ஏன் யூதாஸ் காட்டிக்கொடுக்க வேண்டும்? அப்படி இல்லையென்றால், காட்டிக் கொடுத்தார் என்பதன் அர்த்தம் என்ன*?
*பதில்* : வேதத்திற்கு மாறாக பாஸ்டர் சொன்னாலும் அப்படியே கீழ்படிய வேண்டும் என்ற மனப்பாங்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது.
பரிசேயர்கள், நியாயசாஸ்திரிகள், வேதபாரகர்கள் இவரிடம் சொன்ன காரியம் அனைத்திற்கும், இயேசு அவர்களது தவறை வேதத்தின்படி சுட்டிக்காட்டினார். மத். 12:9-14, லூக்கா 5:21-22, யோ. 5:18
அது அவர்களை எரிச்சலடையச் செய்தது. மேலும், அநேகர் அவரைப் பின்பற்றியதால், தங்கள் பதவியை ரோம அரசாங்கம் பறித்துவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டது. யோ. 11:47-48
எப்படியாவது இயேசுவை தீர்த்துக்கட்டிவிடவேண்டும் என்று பலமுறை அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். மத். 12:14, 26:4, 59, 27:1, மாற்கு 3:6, 11:18, 12:12.
இதற்கு ஆதாரமாக இன்னும் அதிக வசனங்கள் உள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைத் திட்டம் ஆலோசனைச் சங்கத்தார் மத்தியிலேயே தீவிரமடைகிறது.
மத். 26:3-5 அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
இந்த விஷயம், எப்படியோ யூதாஸ் ஸ்காரியோத்து காதில் விழ, தானாக முன்வந்து பிரதான ஆசாரியனிடம் போய், இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் தனக்கு என்ன லாபம் என்று பேரம் பேசுகிறான். மத். 26:14-16.
இயேசுவை சுற்றிலும் எப்போதும் ஜனங்கள் இருந்துக்கொண்டிருந்ததால், தேசத்தில் கலகம் வராமல், ஜனங்கள் தங்களுக்கு எதிராக திரண்டுவிட்டால், ரோம அரசாங்கம் இவர்களை கேள்விகேட்கும் என்பதால், உரிய நேரத்தில், உரிய இடத்தில் அவரை பிடிப்பதில் சிரமம் இருந்தது. மாற்கு 12:12, 11:18, மத். 21:45-46, லூக்கா 20:19, யோ. 7:25-26
இயேசுவின் சீஷர்களில் ஒருவனே அவரது இருப்பிடங்களையும், சரியான நேரத்தையும் காண்பித்துக்கொடுக்க முன்வந்ததால், முப்பது வெள்ளிக்காசு தரலாம் என்று (நியாயபிரமாணத்தின்படி ஒரு அடிமையின் விலையாக தொகை 30 வெள்ளிக்காசு இருந்தது. யாத். 21:21) பேரம் பேசப்பட்டு, யூதாஸூம் உடன்பட்டு, ஜனக்கூட்டம் இல்லாத, தங்களுக்கு ஆபத்து இல்லாத பாதுகாப்பான இடத்தில் இருக்கும்போது இயேசுவை குறித்த தகவல் சொல்ல, தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான் யூதாஸ். மத். 26:16
பஸ்காவின் முதல் நாள் இரவில் (மத். 26:18-20), கர்த்தருடைய பந்தி என்ற இராப்போஜனம் முடிந்ததும் கெத்சமனே தோட்டத்தில் அவர் வழக்கமாக இருக்கவேண்டும் என்பதை அறிந்த யூதாஸ் அங்கு பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளோடும் கூட்டி வந்து, முத்தம் செய்து அடையாளப்படுத்தினான். (மத். 26:47-49) அவர்கள் இயேசுவை பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
இருள் சூழ்ந்த நேரத்தில், தவறாக யாரையும் பிடித்துவிடக்கூடாது என்பதால் துல்லியமாக அடையாளப்படுத்தும்படி முத்தம் கொடுக்கிறான்.
முத்தம் கொடுப்பதென்பது, வழக்கமான வாழ்த்துமுறை.
இன்றளவும், இந்த பழக்கம் யூதர்கள் மற்றும் அரபியர்கள் மத்தியில் உண்டு. கனம்பொருந்திய ஒருவரை வரவேற்பதற்கு, அவரைக் கண்டதும், அருகாமையில் போய், அவரது கன்னத்தில் அல்ல, மூக்கில் முத்தம் செய்வார்கள். ஆதி. 27:26; 1சாமு. 10:1; 2சாமு. 20:9.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக