வெள்ளி, 22 ஜனவரி, 2021

#1068- நியாயபிரமாணத்தின்படி கொலை செய்யாதிருப்பாயாக என்று சொல்லப்பட்டிருக்க, ஆதி சீஷர்களை கொலை செய்வதில் (அப்.9:1-2) சம்மதியாயிருந்த பவுல், பிலிப்பியர் 3:6ல் நியாயபிரமாணத்திற்குறிய நீதியின்படி தான் குற்றம்சாட்டப்படாதவன் என்று எந்த நோக்கத்தில் சொல்கிறார்?

#1068- *நியாயபிரமாணத்தின்படி கொலை செய்யாதிருப்பாயாக என்று சொல்லப்பட்டிருக்க, ஆதி சீஷர்களை கொலை செய்வதில் (அப்.9:1-2) சம்மதியாயிருந்த பவுல், பிலிப்பியர் 3:6ல் நியாயபிரமாணத்திற்குறிய நீதியின்படி தான் குற்றம்சாட்டப்படாதவன் என்று எந்த நோக்கத்தில் சொல்கிறார்?*

*பதில்* : நியாயபிரமாண சட்டத்தை கடைபிடிப்பதன் மூலம் எப்படியாகிலும் நீதியாக இரட்சிப்பைப் பெறும் அனைத்து முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

யூதர்களால், குறிப்பாக பரிசேயர்களால், அந்த வழியில் இரட்சிக்கப்படுவது சாத்தியம் என்று கருதப்பட்டது; பவுல் அதற்கு தேவையான அனைத்தையும் செய்ததாக கூறுகிறார்.

அவர் கிறிஸ்துவிற்குள் வருவதற்கு முன்னர், பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பரலோகம் போகும்படியான இரட்சிப்பிற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்ததாக அவர் கருதினார்.

"கொலை செய்யாதிருப்பாயாக!" என்ற பத்து கட்டளைகளின் ஒரு பகுதியை (யாத். 20:13) ரோமர் 13: 9-ல், அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.

அங்கு அவர் எழுதுவதை கவனியுங்கள், "எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது."

"கொலை செய்யாதிருப்பாயாக" என்ற கட்டளையானது எவ்வகை கொலைகள் என்பதைக்குறித்து வேதம் வரையறைப்படுத்துகிறது என்று அறியவேண்டும்.

உணவுக்காக விலங்குகளை கொல்வதானால், அது தவறு என்று அர்த்தமல்ல.

"நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்" (ஆதியாகமம் 9: 3).

இந்த வார்த்தைகள் நோவாவிடம் பேசப்பட்டன. இருந்தபோதும், அவை எல்லா மனிதர்களுக்கும் எல்லா நேரத்திலும் இருந்தன.

1 தீமோத்தேயு 4: 4-5-ல் அப்போஸ்தலன் பவுல் எழுதினார், "தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்."

மேலும், "கொலை செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளை ஒரு சிப்பாய்க்கு அல்லது ஒரு காவல்காரருக்குரிய கடமையை கேள்விக்குள்ளாக்குகிறதே.

ரோமர் 13: 4-ல் பவுல் எழுதினார், "உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே."

பழைய ஏற்பாட்டில், "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொன்ன அதே தேவன் இஸ்ரவேலை தனது எதிரிகளை அழிக்க சொன்னார்.

"இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு. 15:3

கடவுளை அறிய வாய்ப்புள்ள மக்கள் மீது கடவுளின் தெய்வீக தீர்ப்பு இருந்தது; ஆனாலும் அவர்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். தேவன் அவர்களை அழித்தார்.

ஆகவே, ஒரு சிப்பாய் அல்லது ஒரு காவலரின் கடமைகளை ஒரு நியாயமான காரணத்திற்காக நிறைவேற்றுவது " கொலை செய்யாதிருப்பாயாக" என்ற கட்டளைக்குள் அடங்குவதல்ல.

மேலும், " கொலை செய்யாதிருப்பாயாக" என்ற இந்த கட்டளை மரணதண்டனையை எதிர்ப்பது என்றர்த்தமும் அல்ல.

உதாரணமாக, சிலுவைக்குப்பின் காலாவதியான மோசேயின் நியாயபிரமாணத்தின்படியுள்ள உபாகமம் 13: 6-9ம் வசனங்களை கீழே வாசிக்கவும் :

உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும், அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

ஓரினச்சேர்க்கையை கடைபிடித்த ஒருவர் கொல்லப்பட வேண்டும் (லேவி. 20:13).

விபச்சாரம் செய்பவர்களும் விபச்சாரம் செய்பவர்களும் கல்லெறியப்பட வேண்டும் (லேவி. 20:10).

கொலைகாரர்கள் கொல்லப்பட வேண்டும் (எண். 35: 30,31). கொலை செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. இது மரண தண்டனை.

ஆதியாகமம் 9: 6 ல் ஒரு நித்திய கொள்கை நிறுவப்பட்டுள்ளது. "மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது."

குற்றவாளிகளைக் கொலை செய்ய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்பதை அப்போஸ்தலன் பவுல் புரிந்துகொண்டார். அப்போஸ்தலர் 25: 11 ல் அவர் இவ்வாறு கூறுகிறார்: "நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது…"

ஆகையால், இயேசுவில் ஒரு குற்றத்தையும் காணாததால் அவரை விடுதலை செய்கிறேன் என்று பிலாத்து சொன்னபோது, பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் சொன்ன ஒரு வார்த்தையை கவனியுங்கள் ”யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்” யோ. 19:7

பவுலின் கூற்று, நியாயபிரமாணத்தின்படி நியாயபிரமாணத்திற்குட்பட்ட யூதர்கள், பரிசேயர்கள் எந்த காரணங்களை முன்வைத்து கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்களோ, தன் பார்வையில் தான் பிரமாணத்தின்படி நடந்ததால், ”தான் குற்றமற்றவன்” என்பது இந்த வசனங்களின் மூலம் அவர் தன்னைக்குறித்து சொல்கிறார்.

மேலும் சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன். வேதாகமத்தில் அதை வாசிக்கவும். யோ. 5:18, 8:58-59, 10:30-33, 10:36-38; மத். 26:63-66, 27:42-43; லேவி. 24:16; உபா. 18:20.

கிறிஸ்தவர்கள் இந்த இயேசுவை பின்பற்றியதால், தான் நியாயபிரமாணத்தை நிறைவேற்றினதாக கருதிய பவுலின் வார்த்தைகள், இரட்சிப்பு அடைந்தபின், ”தான் பிரதான பாவி” என்பதை நினைவுகூர்வதை நாம் அறிகிறோம். 1தீமோ. 1:15-16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக