புதன், 11 நவம்பர், 2020

#1032 - நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல் கிருபையின்படி இரட்சித்தார் என்று 2தீமோ 1:9ல் சொல்லியிருக்க, ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்பது கிரியை தானே? அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுக்கவேண்டுவதில்லையே? விளக்கவும்.

*#1032 - ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்பது கிரியை தானே?* நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல் கிருபையின்படி இரட்சித்தார் என்று 2தீமோ. 1:9ல் சொல்லியிருக்க, ஞானஸ்நானம் எடுக்கவேண்டுவதில்லையே? விளக்கவும்.

*பதில்* : ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை (மத். 28:18-19). விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவர் இரட்சிக்கப்படுவர் (மாற்கு 16:16).

ஆயினும் மோசேயின் சட்டத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் (செயல்கள்) (அதாவது, நியாயபிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளை கடைபிடிக்கும் முறைகள், ஓய்வுநாள், உபவாசம், பலிகள், தசமபாகம் போன்றவை);

அல்லது நாம் செய்யும் நற்செயல்கள் (நன்மைகள் அல்லது நற்கிரியை);

அல்லது நம்முடைய செயல்களின் (கிரியைகளின்) மூலம் இரட்சிப்பைப் அடைய  முயற்சிப்பதை குறித்து தேவன் எச்சரிக்கிறார்.

சுயமுயற்சியால் பெற்றுக்கொண்டேன் என்று யாரும் பெருமை கொள்ளாதபடிக்கு, கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; என்கிறார் பவுல்.(எபே. 2: 8-9)

*இந்த இரண்டு சத்தியங்களும் முரண்படுகின்றனவா*?
ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரு கிரியையா?

ஆதலால் தேவனால் தடைசெய்யப்பட்டதா? இரட்சிப்பைப் பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியை என்னும் ஞானஸ்நானம் எடுப்பதை இந்த வகைக்கு பொருந்துமா என்பதைப் பற்றி வேதம் என்ன கற்பிக்கிறது என்பதை ஆராய்வோம்.

“*இரட்சிப்பைப் பெறுவதற்கான கிரியை*”
நம்முடைய சொந்த கிரியைகளால் இரட்சிப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை பல வேத பகுதிகள் கண்டிக்கின்றன. இரட்சிப்பைப் பெறுவதற்கான தவறான முயற்சிகளில் செய்யப்படும் கிரியைகளின் பண்புகள் என்ன?

நாம் இரட்சிப்பைப் பெறும்போது,

இரட்சிப்பைப் பெறுவதற்காக, நான் ”இதைச் செய்தேன்” என்று சுய கிரியைகள் பெருமை பேச்சைத் தூண்டும். சொந்த கிரியையால் நான் இரட்சிக்கப்பட்டேன் எனறும் நான் அதற்கு தகுதியானவர் என்ற நினைப்பு வரும்!

ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. (ரோமர் 4: 2).

அவருடைய கிரியைகள் அவருக்கு இரட்சிப்பைப் தந்திருந்தால், ஆபிரகாம் தேவனைத் தவிர மற்ற அனைவருக்கும் அவருடைய சாதனையைப் பற்றி தற்பெருமை காட்டியிருக்க முடியும்.

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபே. 2: 8-9).

தேவனுடைய கிருபை செயல்படும்போது, சுய ​​பெருமை விலக்கப்படுகிறது (ரோமர் 3:27). நம்முடைய சொந்த இரட்சிப்பை நாம் சம்பாதிக்க முடிந்தால், அதைப் பற்றி நாம் ஏன் தற்பெருமை கொள்ள முடியாது?

இரட்சிப்பைப் பெறுவதற்காகச் செய்யப்படும் செயல்கள் என்று ஒன்றிருந்தால், கடவுளின் அவசியத்தையே நீக்கிவிடுமே!  

ஒரு காரியத்தைச் செய்வதால், கடவுளின் பரிசைக் காட்டிலும் என்னுடைய இரட்சிப்பை நானே சம்பாதித்துவிட்டேன் என்று (எபே. 2: 8), நம்முடைய தன்னிறைவில் பெருமை கொள்ளலாமே.

மேலும், நியாயப்பிரமாணத்தின் மூலம் நீதியானது வருகிறதென்றால், கிறிஸ்து மரித்ததே வீணாகியிருக்குமே என்று பவுல் கூறுகிறார் (கலா. 2:21). கிறிஸ்து இல்லாமல் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியுமென்றால், இயேசு ஏன் மரிக்க வேண்டும்? நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இயலாது என்பதால் புதிய ஏற்பாட்டு வசனங்கள் நம்மை தேவனுடைய கிருபைக்குள் கடந்து செல்ல வேண்டும் என்று நம்மை ஆழ்த்துகிறது.

நம்முடைய கிரியைகளின்படி அவர் நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். (2தீமோ. 1:9).

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் என்று  பவுல் தீத்துவிடம் சொல்கின்றார்.(தீத்து 3: 5).

இந்த கிரியைகள் நம்மைப் பற்றியவை;
இரட்சிப்பு என்பது கடவுளால் மட்டுமே தொடங்கப்பட்டு வழங்கக்கூடிய ஒன்று.

இது நம்முடைய தேவையையோ அல்லது வேலை செய்யும் திறனையோ அகற்றாது, ஆனால் கிரியைகள் மூலம் இரட்சிப்பைப் பெறுவது நம்பிக்கையற்ற முடிவு.

இரட்சிப்பைப் பெறுவதற்காகவே செய்யப்படும் கிரியைகள் என்பது இலவசமாக தரப்படும் பரிசிற்கு நாம் விலை நிர்ணயம் செய்வதாகிவிடுமே.

இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக, கிரியைகள் என்னும் விலைக்கூடையில் நம் சொந்த கிரியைகளை சேர்க்கமுடிந்தால், அதைச் சம்பாதிப்பதே நம் நோக்கமாகிவிடும்.

வேலை செய்பவருக்கு, ஊதியங்கள் கிருபையாக அல்ல, கடனாகக் கருதப்படுகின்றன (ரோமர் 4:4). கூலியைச் சம்பாதிப்பதிலும், பரிசைப் பெறுவதிலும் வித்தியாசம் உள்ளது.

அன்பான கடவுளின் (கிருபையின்) தயவில் நம்மை நிலைநிறுத்துவதற்கும், நம்முடைய சொந்தத் தகுதிகளில் (செயல்களில்) நிற்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

நமக்கு இரட்சிப்பைக் கொடுக்க போதுமான வேலையை நாம் செய்ய முடியும் என்று நாம் நினைத்தால், கடவுளின் கிருபையை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு (கலா. 2:21), செய்யவேண்டியதை செய்து, கடவுளிடம், நிபந்தனையாக, நீங்கள் செலுத்த வேண்டியதை எனக்குத் தரவேண்டும் என்று அழுது புரண்டு நமக்கு அவர் கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்று முரண்டுபிடிக்கத் தயாரா?

*ஞானஸ்நானம் என்பது இந்த விளக்கங்களுக்கு பொருந்துமா*?
பலர் ஞானஸ்நானம் பெற்றதை புதிய ஏற்பாட்டு பதிவில் காண்கிறோம். ஆனால் அவர்களில் ஒருவரும் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக பெருமை பேசவில்லை.

அநுதினமும் மக்கள் தண்ணீரில் குளிக்கிறார்கள். அப்படி செய்யப்படும் குளியல்  நம்மை இரட்சிப்பதற்கு தகுதியுடையதாக மாற்றுவதில்லை.

*அப்படியென்றால் ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் கடவுளே அவசியமில்லை என்றாகிவிடுமா*? நம்முடைய சொந்த கிரியையை விட ஞானஸ்நானம் எடுப்பது என்பது தேவனுடைய கிரியை என்றழைக்கிறார் பவுல்.

ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின *தேவனுடைய செயலின்* மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று சொல்வதைக் கவனிக்கவும் (கொலோ. 2:12).

ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது என்று பேதுரு சொல்கிறார் (1 பேதுரு 3:21).

ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பின் செயல்பாட்டில் கடவுள் ஆழமாக ஈடுபட்டுள்ளார் என்பதைக் கவனியுங்கள். அவர் தான் இரட்சிப்பின் வேலையைச் செய்கிறார், நாம் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம், ஞானஸ்நானத்தின் மூலம் ஒரு நல்ல மனசாட்சிக்காக கடவுளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

*ஞானஸ்நானம் எடுப்பது என்பது இரட்சிப்பு என்ற ஒரு இலவச பரிசை பெறுவதைக் காட்டிலும்  இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் உரிய கட்டணமாக மாற்றுமா*?
இந்த வசனத்தை கவனமாகப் படியுங்கள்: நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். (தீத்து 3:5).

மேலும், இரட்சிப்பு என்பது நீதியுள்ள செயல்களின் அடிப்படையில் இல்லை என்பதையும் பாவம் கழுவப்படுவதற்கு ஒரு கிரியையை அல்லது செயலை செய்ய வேண்டியுள்ளது என்றும் பவுல் அந்த வசனத்தில் நமக்கு நினைவூட்டுகிறார்!

இது, நாம் தகுதியான அல்லது சம்பாதித்த ஒன்று அல்ல, மறுஜென்ம முழுக்கு மற்றும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதல் என்னும் கிரியை அதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது!

நோவா துவங்கி எரிகோ வரை, நாகமான் வரை வேதம் முழுவதும் தேவனுடைய  கிருபையானது எப்போதும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, கடவுளின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது ஒருபோதும் அவரை நம் கடனில் தள்ளாது என்பதை வேதாகமம் நமக்குக் காட்டுகிறது. ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பின் ஒரு பகுதியாகும், இது நாம் *சம்பாதிக்கும்* இரட்சிப்பு அல்ல.

பெந்தெகொஸ்தே நாளில், சிலர், நாங்கள் *என்ன செய்ய வேண்டும்* என்று வினவினர் (அப். 2:37).

இரட்சிக்கப்படும்படி நாம் *செய்ய வேண்டிய சில கிரியைகள் அல்லது செயல்கள்* உள்ளன. விசுவாசிப்பதே தேவக்கிரியை என்கிறார் இயேசுகிறிஸ்து. வசனத்தைக் கவனியுங்கள் ”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்”. (யோவான் 6:29).

உண்மையான மனந்திரும்புதலில் அதற்கேற்ற தொடர்புடைய கிரியைகள்  அடங்கும். வசனத்தை கவனிக்கவும்: “…நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்”. (அப்போஸ்தலர் 26:20).

விசுவாசத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் (ரோமர் 10:10).

நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற வேண்டும் (கலா. 3: 26-27, அப். 22:16).

விசுவாசம் என்பது கிரியைகளின் மூலம் தொடர்ந்து காட்டப்பட வேண்டும்.  “ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே”. (யாக்கோபு 2:18).

உங்கள் சொந்த இரட்சிப்பைச் கிரியையில் காண்பிக்கும்படி அல்லது செய்யும்படி பவுல் நம்மை வற்புறுத்துகிறார்.  “… அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்”. (பிலி. 2:12).

இரட்சிப்புக்கான கிரியைகளின் சம்பந்தத்தை மறுப்பது வேதத்தின் கட்டளைகளை நிராகரிக்க வழிவகுத்துவிடும்.

ஆயினும், இந்த கிரியைகள் அனைத்தும் முடிந்ததும், இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்: “அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்”. (லூக்கா 17:10).

நம்முடைய கிரியைகள் எவ்வளவு பெரியதாக மாறினாலும், எங்கள் கடமையை மாத்திரமே நாங்கள் செய்தோம் என்றும் எங்களுக்கு வழங்கப்படும் விலைக்கு அல்லது வெகுமதிக்கு நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய இரட்சிப்பை நாம் ஒருபோதும் சம்பாதித்துவிட முடியாது.

நற்கிரியை செய்து அல்லது நாம் செய்யும் நன்மையான காரியங்களினால் பரலோகம் போகும் சிலாக்கியத்தை பெற்றுவிடலாம் என்றால், கடவுளைத்தேடவேண்டிய அவசியமேயில்லையே? மரணித்தப்பின் எவரும் தம் சுய இஷ்டமான இடத்தை தேடி போகமுடியாது என்பதை அறிவதாலும், ஆயுட்காலம் முழுவதும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தாலும், நமக்கென்று ஒரு அடிநீளம் நிலத்தைக்கூட பரலோகத்தில் விலைக்கு வாங்க முடியாது.

ஞானஸ்நானம் என்பது, நாம் செய்ய வேண்டும் என்று தேவனால் சொல்லப்பட்ட கிரியை. அந்த கட்டளைக்கு நாம் கீழ்படியும்போது, நம் கிரியை அல்லது கீழ்ப்படிதலைக்கண்டு தம் கிருபையின் மூலம் நம்மை இரட்சிக்கிறார். இரட்சிப்பு சம்பாத்யம் அல்ல - அது விலையில்லா பரிசாக அளிக்கப்படுகிறது.

இந்த தலைப்பு அடிக்கடி பேசப்படும் ஒன்றாக இக்காலத்தில் மாறிவிட்டதை நினைத்து வியப்படைகிறேன்.

தேவக்கட்டளையான ஞானஸ்நானத்திற்கு கீழ்படியவேண்டும்  என்பதைக்காட்டிலும் அது ஒரு "கிரியை" என்றும் அதனால் என்ன நடக்கவேண்டியுள்ளது என்றும் இருமாப்புக்கொண்டு தேவக்கட்டளைக்கு எதிர்த்து நிற்பவர்களைக் கண்டு விசனம் கொள்கிறேன்.  

தேவக்கட்டளைக்கு கீழ்படிதல் என்பது ஏதோ பாவத்திற்கு சமமான ஒன்று என்று நினைக்கிறார்களோ?

“… அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் கிரியையில் ஈடுபடுங்கள்”. (பிலி. 2:12).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக