திங்கள், 25 மே, 2020

#965 - சில ஊழியர்கள் பழைய ஏற்பாடு காலம் சிலுவைக்கு பின் முடிந்துவிட்டது ஆதலால் பழைய ஏற்பாடின் வசனங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரசிங்கிக்கிறார்களே இது சரியா?

#965 - *சில ஊழியர்கள் பழைய ஏற்பாடு காலம் சிலுவைக்கு பின் முடிந்துவிட்டது ஆதலால் பழைய ஏற்பாடின் வசனங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரசிங்கிக்கிறார்களே இது சரியா?*

*பதில்*
அனைத்து ஜனங்களும் மேற்கோள் காட்டப்பட்டாலும் பழைய ஏற்பாடு என்பது முக்கியமாக அல்லது ஒரு கூட்டத்தினரையே (இஸ்ரவேலரையே) மையப்படுத்தி எழுதப்பட்டது.

நினிவே பட்டனத்தார், மீதியானியனான எத்திரோ, ராகாப், யாகேல், நாகமான் போன்ற வெகு சில தகவல்களே பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் அல்லாத புறஜாதியாரில் தேவனைப் பற்றினவர்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

மேலும் சீனாய் மலையில் மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கட்டளை அந்த குறிப்பிட்ட தேசத்திற்கு (ஜனத்திற்கு) சொந்தமானது.

அந்த தேசத்திற்கு தேவன் 10 பிரதான மற்றும் 603 உபகட்டளைகளை வகுத்துக்கொடுத்தார்.

ஆக நியாயபிரமாணம் என்பது மொத்தம் 613 கட்டளைகளை உள்ளடக்கியது.

இதில் :
365 செய்யக்கூடாது என்கிற கட்டளைகளும்.
248 செய்யவேண்டும் என்பவைகளும் உண்டு.

பழைய ஏற்பாட்டில் நிறைந்து காணப்படும் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட இந்த நியாயபிரமாணம் என்பது இஸ்ரவேலருக்கு மாத்திரம் பிரத்தியட்சமாகக் கொடுக்கப்பட்டது. ரோ. 9:4

உபா. 4:13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் *உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய* தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

உபா. 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து *உங்களுக்கு விளம்பின பத்துக்கற்பனைகளையும்* அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

உபா. 9:9 கர்த்தர் *உங்களோடே பண்ணின உடன்படிக்கைப்* பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

யாத். 20:2 *உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து* புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

உபா. 5:3 அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே *உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும்* பண்ணினார்.  (இஸ்ரவேலரோடு)

ஏற்பாடு என்பது உடன்படிக்கை
அதாவது
புதிய கட்டளை
புதிய நியமனம்
புதிய சட்டம் என்பது.

வேதாகமத்தில் இரண்டு பிரிவை நாம் காண்கிறோம்.
ஆதியாகமம் துவங்கி மல்கியா வரைக்கும் ஒரு பகுதியாகவும்
மத்தேயு துவங்கி வெளிப்படுத்தல் வரைக்கும் ஒரு பகுதியாகவும் இருப்பதை அறிகிறோம்.

முதல் பகுதி பழைய சட்டம் (ஏற்பாடு) என்றும்
இரண்டாம் பகுதி புதிய சட்டம் (ஏற்பாடு) என்றும் அழைப்பதை அறிகிறோம்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிகழும் வரைக்கும் இஸ்ரவேலருக்கு பழைய சட்டம் நடைமுறையில் இருந்தது.

கிறிஸ்து சிலுவையில் மரித்த போது – மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட சட்டம் பழமையாகிப் போனது, காலாவதியாகியது, முடிவுற்றது. கொலோ. 2:14-15, எபே. 2:13-16

கிறிஸ்துவானவரின் சிலுவை மரணமானது இந்த மோசேயின் பிரமானத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ரோ. 10:4

புதிய உடன்படிக்கையானது – கிறிஸ்து மரித்த வேளையில் துவங்கியது (எபி. 9:16-17)

அந்த நாளுக்கு பின் –

இஸ்ரவேலர் உட்பட நாம் யாருமே மோசேயின் கட்டளைக்கு உட்பட்டவர்கள் அல்ல. (எரே. 31:31, 1கொரி. 11:25, எபி. 8:13, 9:15, 12:24)

நியாயபிரமானம் (மோசேயின் சட்டம்) இன்றும் வேண்டும் என்பவர்கள் சாபத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று வேதம் சொல்கிறது (கலா. 3:10)

அப்படியென்றால் இன்னமும் ஏன் பழைய ஏற்பாட்டை வைத்துக்கொண்டிருக்கவேண்டும்?

பழைய ஏற்பாட்டு புத்தகம் இல்லையென்றால் படைப்பைக் குறித்தும், தேவ எச்சரிப்பு எப்படி வெளியாகியது, ஜனங்கள் எவ்வாறு கீழ்படிந்தார்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் போன்ற வரலாறு தெரியாமல் போகும். கீழ்படிவதற்காக அல்ல அறிந்து கொள்வதற்காக. கலா. 3:24, 1கொரி. 10:11

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. மக்களாட்சி வந்து விட்டது. இனியும் எதற்கு பள்ளிக் கூடங்களில் அலக்சாண்டர் பற்றியும் அக்பர் பற்றியும் படிக்கிறோம்?

அது போல பழைய ஏற்பாடு என்பது நாம் அறிந்து கொள்வதற்காக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நாம் நியாபிரமானத்தையல்ல – கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் – அவர் கட்டளையை பின்பற்ற வேண்டும். எபே. 1:22-23, 4:15, 5:23; பிலி. 2:10-11; கொலோ. 1:18, 2:10, 2:19

பழைய உடன்படிக்கை என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது போல (யாத். 34:27-28) புதிய உடன்படிக்கையானது – இஸ்ரவேலர் உட்பட  எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. எரே. 31:31-32

பழைய பிரமாணம் – முடிவுற்றதால் – புதிய பிரமாணம் நடைமுறையில் உள்ளது. கொலோ. 2:14

புதிய உடன்படிக்கையின் நிமித்தம் : யுதர்கள் புறஜாதியினர் என்று எந்த வேறுபாடும் பார்க்க யாருக்கும் இடமில்லை – அனைவரும் ஒன்றாயினர். எபே. 2:14-16

புதிய உடன்படிக்கை ஏற்பட்ட நாழிகையிலிருந்து – நியாயபிரமாணம் முடிவுற்றது / நிறைவுபெற்றது / காலாவதியானது/ நீக்கிப்போடப்பட்டது. எபி. 10:9

நாம் அனைவரும் கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் (ரோ. 7:6)

கலா. 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ரோ. 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

எபி. 7:18-19 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

கலா. 3:10-11 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும்  சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

பழைய உடன்படிக்கையில் நாம் ஒருபோதும் கீழ்பட்டவர்கள் அல்ல – புதிய கட்டளை / புதிய உடன்படிக்கை / புதிய ஏற்பாட்டு / கிறிஸ்துவின் உபதேசத்தில் நாம் வாழ வேண்டும்.

இந்தியாவில் உள்ள சட்டம் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மாத்திரம் செல்லும். ஆனால் அதே இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு போனால் – அந்த நாட்டு சட்டத்தை தான் நாம் கடைபிடிக்க வேண்டும்.

நான் இந்தியன் ஆகவே இந்திய சட்டத்தின் படி வெளி நாட்டிலும் வாகனம் ஓட்டுவேன் என்றால் விபத்தும் ஏற்படும் – காவல் துறையும் தண்டித்துவிடும் !!

அது போல கிறிஸ்தவர்களாகிய நாம் பழைய சட்டங்களை கைகொள்ளாமல் கிறிஸ்துவின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டும்.

சட்டதிட்டங்கள் என்று வரும்போது அப்போஸ்தலரின் உபதேசத்தில் (புதிய ஏற்பாட்டு) சட்டத்தில் நாம் நடக்க வேண்டும்.

கிறிஸ்துவே நமக்கு தலையாக இருக்கிறார். அவர் போதித்த சட்டங்களின் படி நாம் வாழ வேண்டும். அதை அப்போஸ்தலர்கள் நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள். அப். 1:3, 2தீமோ. 3:16-17
 
 *எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக