வெள்ளி, 15 மே, 2020

#941 - உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்

#941  - *உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.. இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது பொருந்துமா? விளக்கவும்.*

*பதில்*
இந்த வசனம் லூக்கா 8:18ல் வாசிக்கிறோம்.

அந்த வசனத்தின் துவக்கத்தைக் கவனித்தால் பெரிய ஆச்சரியத்தை உண்டுபண்ணும்.

லூக்கா 8:18 *ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்*; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

*கேட்கிற விதத்தைக் கவனிக்கச் சொல்கிறார்* !!
மேடையை ஓங்கி அடித்து, கதறி, அழுது, ஏற்ற இறக்கத்தோடு, உருகி, இறங்கி, வயதான தழுதழுத்த குரலோடு யார் எதை சொன்னாலும் அதுவே தேவவாக்காக அப்படியே கேட்டு செவிசாய்க்கும் இந்த கால ஆடுகளுக்கு இந்த கேள்வி மிக அவசியம்.

பேசுபவர்கள் யாரானாலும் ஆவியானவர் பெயரில் உச்சரித்துவிட்டால், வேதத்தை கூட படிக்க அல்லது ஒப்பிட்டு பாராமல் அவர்கள் சொல்வதை அப்படியே தெய்வ வாக்காக நம்பி விடுவது மேலும் ஒரு பொிய கேள்விக்குறியை அவர்கள் விசுவாசத்திற்கு எதிராக எழுப்பிவிடுகிறது.

விதையை குறித்த உவமையை சொன்னபின்பு சீஷர்கள் அதன் விளக்கத்தை இயேசு கிறிஸ்துவினிடம் கேட்டார்கள். அவர் அதற்கு விளக்கம் கொடுத்தப் பின்பு இந்த வார்த்தைகளை சொன்னார்  *கேட்கும் விதத்தை கவனியுங்கள் என்று* !!

*அதாவது நீங்கள் எதற்கு செவி கொடுக்கிறீர்கள்*?
சொல்லப்படும் விதத்தையா அல்லது அதன் அர்த்தத்தையா?

அர்த்தம் உங்களுக்கு முக்கியம் என்றால் வேதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இல்லையென்றால் அர்த்தமில்லாத பாடல்களை இராகத்திற்காக கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் அர்த்தமற்று பாடிக்கொண்டிருப்பீர்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். லூக்கா 8:15

கிடைத்த வசனத்தை வீணாக்கிவிடாமல் *அதை இன்னும் அசைப்போட்டு பாதுகாத்து தன்னில் வளர விடுபவர்களைக்* குறித்து சொல்கிறார் “உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” லூக்கா 8:18.

*வசனத்திற்கு செவிசாய்க்காமல் இராகத்திற்கும், ஊழியர் சொல்லும் உருக்கமான கதைகளுக்கும், கனவுகளுக்கும், தாளத்திற்கும், உற்சாகத்திற்கும், பரவசத்திற்கும் செவிசாய்த்தால் கொடுக்கப்பட்ட கொஞ்ச வசனத்தையும் தன்னில் இரட்சிப்பு வர பிரயாசப்படாததினால் இழந்து போகிறார்கள்*.

வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். லூக்கா 8:12-14

இந்த வசனம் மிக அவசியமாக கிறிஸ்து வரும்வரை அனைவருக்கும் பொருந்தும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html0

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக