புதன், 13 மே, 2020

#939 - ஆண்டவர் சிலை வழிபாட்டை வெறுக்கிறவர். பின் ஏன் மோசேயிடம் சர்ப்பத்தை நோக்கி பார் பிழைப்பாய் என்றார்

#939 - *ஆண்டவர் சிலை வழிபாட்டை வெறுக்கிறவர். பின் ஏன் மோசேயிடம் சர்ப்பத்தை நோக்கி பார் பிழைப்பாய் என்றார்*

*பதில்*
ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக பேசினார்கள். எண். 21:5

ஒரு வேளை ஆகாரத்திற்காக கடினமாக உழைத்தும் போதிய உணவு கிடைக்காமல் எகிப்தில் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் வானத்திலிருந்து தேவன் ஆகாரத்தை இலவசமாக அருளினார். யாத். 5:6-18, எண். 11:9

இலவசமாக கிடைத்த எதுவும் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருக்கும். பின்னர் சளிப்பு தட்டும்.

அது போல மன்னாவும் ஆதியில் தேனிட்ட பனியாரம் போல இருந்தது. யாத். 16:31

பின்னர் கொஞ்ச காலத்தில் அந்த மன்னா அவர்கள் வாய்க்கு புது ஒலிவ எண்ணெய் போலிருந்ததாம் – எண். 11:8 - எண்ணெய் ருசி எப்படியிருக்கும்?

அதற்கும் மேலே இப்போது இந்த இலவசமான அற்புதமான தேவனுடைய கரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற மன்னா அவர்களுக்கு அர்ப்பமான உணவாக ஆனது – எண். 21:5

அவர்களுக்கு இந்த மன்னாவே கசந்து வெறுத்துப் போயிற்று..
சரீரத்தில் கஷ்டப்பட்டது மறந்து போய், இப்போது இறைச்சியின் ருசியும் மீனின் ருசியும், வெள்ளரிக்காய்களையும், தர்பூசணி, கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகள் மீது ஆவல் வந்தது. (எண். 11:4-5)

அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். எண். 21:6

அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச்சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். எண். 21:7-9

பாம்பு கடித்ததும் வேறு எதுவும் யாருக்கும் தோன்றாது. விஷம் தலைக்கு ஏறியதும் கண்கள் சொருகிப்போகும். அப்பொழுது ஆகாயம் தானாக கண்ணுக்குத் தெரியும் !! சாகும் தருவாயில் வேறு ஒன்றும் செய்ய முடியாத பட்சத்தில் உயிர் பிழைக்கும்படியாக உயர்த்தப்பட்ட அந்த சர்ப்பத்தை கண்டால் பிழைக்கலாம் என்று இலகுவான இலவசமான ஒரு வழியை தேவன் ஏற்படுத்தினார்.

பாவத்தில் மரிக்கும் ஒருவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை பார்த்தால் (செவிகொடுத்து மனந்திரும்பி ஏற்றுக்கொண்டு அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து பாவ மன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால்) பாவம் நீங்கி (நித்திய) வாழ்வு அடைவர். யோ. 6:40, யோ. 12:32, யோ. 3:14-15.

சர்ப்பத்தை வழிபடவோ கும்பிடவோ சொல்லப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வீணான நடக்கையில் பிற்காலங்களில் இந்த சர்ப்பத்தை வழிபட ஆரம்பித்தபோதோ அந்த வெண்கல சர்ப்பம் உடைத்துப்போடப்பட்டது. 2இரா. 18:4

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக