சனி, 28 மார்ச், 2020

#823 - பரீட்சை பாராதிருப்பாயாக, ஆராதனை கூடுகைக்கு விரோதமான இந்த அரசாங்க ஊரடங்கு உத்தரவுக்கு செவி சாய்க்காமல் கூடி ஜெபித்தால் கொரோனா வியாதி நீங்குமே ஆகையால் தைரியமாக சபையை நடத்துங்கள் – ஆண்டவர் சுகம் தருவார் என்கிறார்கள் – விளக்கவும்

#823 - *பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்க, ஜெபித்தால் கொரோனா வராது ஆகவே அனைவரும் கூடி ஜெபியுங்கள் என்கின்றனரே - விளக்கவும்* 
 
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்று இயேசு கிறிஸ்து சர்ப்பங்களை எடுத்தல் தேள்களை மிதித்தல் பிசாசுகளை துரத்துதல் நவமான பாஷைகளை பேசுதல் சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் சேதப்படுத்தாது என்று சொல்லியிருப்பதால் - ஆராதனை கூடுகைக்கு விரோதமான இந்த அரசாங்க ஊரடங்கு உத்தரவுக்கு செவி சாய்க்காமல் கூடி ஜெபித்தால் கொரோனா வியாதி நீங்குமே ஆகையால் தைரியமாக சபையை நடத்துங்கள் – ஆண்டவர் சுகம் தருவார் என்கிறார்கள் – விளக்கவும்
 
*பதில்*
 
1) பரீட்சை பாராதிருப்பாயாக என்றால் – சோதித்து பார்க்க கூடாது என்கிறார்.
 
அதாவது தேவன் சொன்னதை செய்வாரோ இல்லையோ என்று அவரை சந்தேகப்பட கூடாது என்கிறார்.  தான் சொன்னதை மாற்றிக்கொள்ளவோ – பொய் சொல்லவோ அவர் மனிதன் அல்ல. வாக்குமாறாத தேவனாயிற்றே.
 
எண். 14:22-23 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
 
சங். 78:41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
 
1கொரி. 10:9 அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
 
2) கொரோனா என்கிற வியாதி தொற்றப்பட்டு தன்னில் தனக்கு அறியாமலேயே தன்னில் தாங்கியிருக்கும் நபர் ஒருவர் எந்த பொருளை தொட்டாலும் இருமினாலும் தும்மினாலும் அவர் மூலமாக மற்றவர்களுக்கு நேரடியாக பரவுகிறது மாத்திரம் அல்ல அவர் தொட்டு சென்ற இடங்களில் அந்த கிருமிகள் குறைந்தது சுமார் 8 மணி நேரம் உயிரோடு இருப்பதாகவும் காற்றிலும் சுமார் குறைந்தது 3 மணிநேரம் தங்கியிருப்பதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஒருவர் மாறி ஒருவர் தொற்றி இந்த தொற்று நோயினால் இன்று வரை உலகம் முழுவதும் இன்று வரை பல லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பல ஆயிரம் ஜனம் இந்நேரம் வரை மரித்திருக்கிறார்கள்.

இன்று வரைக்கும் ஆக்கபூர்வமான மருந்துகள் இதற்காக கண்டுபிடிக்கமுடியாமல் உலகமே திணறி வரும் இந்த நோயை - மேற்கொண்டு பரவாமல் இருக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த ஊரடங்கு உத்தரவு எந்த மதத்திற்கும் மார்க்கத்திற்கும் பிரிவினருக்கும் எதிரானது அல்ல. ஜனங்களின் பாதுகாப்பிற்காக இந்த தனிமை அவசியப்படுகிறது.
 
இன்னும் சிறிது நாட்களில் இதற்கு சரியான தீர்வும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்படலாம் என்று நம்புவோம்.
 
வாரத்தின் முதலாம் நாள் தொழுகையை குறித்து நாம் நினைவில் கொள்ள வேண்டியவை:
 
புதிய ஏற்பாட்டில் சபை என்பது கட்டிடத்தை குறிக்கவில்லை – அது பிரித்தெடுத்தவர்களின் கூட்டம். அப். 2:47, அப். 5:14, அப். 11:24
 
ஒருவருக்கு மேற்பட்டு கிறிஸ்துவின் நாமத்தில் எந்த இடத்தில் கூடினாலும் அங்கு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்கிறது -மத். 18:20.
 
ஆதி கிறிஸ்தவ காலங்களில் – நாம் காண்பது போல தனி சபைக்கட்டிடங்கள் இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே அவரவர் அடுத்து உள்ள வீடுகளில் ஒன்று சேர்ந்து தேவனைத் தொழுது கொண்டார்கள்  - அப். 8:3, பிலே. 1:2, ரோ. 16:5
 
5 பேருக்கு மேல் ஒர் இடத்தில் கூடவேண்டாம் என்று இந்திய அரசாங்கம் சொல்லியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
 
ஆகவே அதை கருத்தில் கொண்டு – வீட்டு தலைவர்கள் (ஆண்கள்) முன்னின்று - பெண்கள், பிள்ளைகள் என்று ஆங்காங்கே உள்ளவர்கள் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வீடுகளில் கூடி ஓரிரு பாடல்களை பாடி, ஜெபித்து, வேத வசனங்களை படித்து, வாசித்த வசனங்களை புரியும் வண்ணம் அசைபோட்டு,கர்த்தருடைய மரணத்தை நினைவு கூறும் வண்ணம் பந்தியில் கலந்து கொண்டு, கூடிவந்தவர்கள் சபை வளர்ச்சிக்கென்று பயன்படும் வண்ணம் தங்கள் பங்கிற்கு அன்று வரை சேர்த்து கொண்டு வந்த காணிக்கைகளை சேர்த்து இப்படியாக தேவனை தொழுது கொள்வது வேதத்தின்படி மிகச் சரியானதாகும். இது தான் ஆதி கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொழுகை முறையாகும்.
 
ஆதார வசனங்கள்:
பாடல் – எபே. 5:19, கொலோ. 3:16, ரோமர் 15:9, 1கொரி 14:15
ஜெபம் – ரோ 12:12, எபே 6:18, பிலி 4:6, 1தீமோ 2:1, கொலோ. 4:2
வேதபாடம் – 2தீமோ. 2:15, கொலோ. 4:16, அப். 8:4, தீத்து 1:3-4, 1கொரி. 1:21
கர்த்தருடைய பந்தி – 1கொரி. 11:23-29, 1கொரி. 10:16
கொடுத்தல் – 1கொரி. 16:12, 2கொரி. 9:7, அப். 20:35
 
ஞானஸ்நானம் பெற்ற எந்த ஆண்களும் கர்த்தருடைய பந்தியை நடத்த தகுதியுள்ளவர்கள். எபே. 1:22-23, எபே. 2:19-22, 1பேதுரு 2:5, வெளி. 5:10.
 
சகலமும் நல்லெழுக்கத்துடனும் கிரமமாயும் செய்யப்படக்கடவது – 1கொரி. 14:40
 
ஆகவே நடத்துபவர்கள் எவை எப்படி எப்போது என்பதை முன்னரே யோசித்து அதை அந்த நேரத்தில் கிரமமாக செயல்படுத்தும் போது – தேவன் மகிமைப்படுகிறார்.
 
அரசாங்கத்திற்கு கீழ்படியவேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை. ரோ. 13:1-2
 
இந்த ஊரடங்கு உத்தரவு – தேவனை தொழுது கொள்ளக் கூடாது என்ற உத்தரவு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் !!!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக