#824 - *திறப்பில் நிற்பது என்றால் என்ன தெளிவுப்படுத்துங்கள்?*
*பதில்*
மிகச்சரியான நேரத்தில் சரியான கேள்வியை எழுப்பிய உங்களுக்கு தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
திறப்பில் நிற்க வேண்டும் என்ற இந்த வார்த்தை இந்த காலங்களில் மிகப்பிரபலமாகிப்போனது.
எசே. 22:30ல் “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” என்ற வசனம் வருகிறது.
மேற்கண்ட வசனத்தைச் சுற்றியுள்ள சூழலில், யூத தேசத்தின் தார்மீக நிலையை தேவன் விவரிக்கிறார்.
சொந்த பொருள் ஆதாயத்திற்காக “பிரபலமான மற்றும் நேர்மறையானவற்றை மட்டுமே” - தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தி உண்மையான தேவனுடைய வாரத்தையை *சத்தியத்தைப் பிரசங்கிக்காத* சதியில் ஈடுபட்டிருந்தார்கள் (எசே. 22:23-29).
ஆசாரியர்கள் அநியாயஞ்செய்து *பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும்*, அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான *வேற்றுமையைக் காண்பியாமலும்* இருந்தார்கள் (எசே. 22:26)
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தார்மீக *தெளிவின்மைக்கு* ஆசாரியர்கள் வித்திட்டனர்.
எது சரி எது தவறு என்பதை ஜனங்களுக்கு தெரிவிக்காமல் மேல்பூச்சாக,
பொய் பேசாதேயுங்கள், ஜெபியுங்கள், நன்மை செய்யுங்கள், ஆராதனைக்கு தொடர்ந்து வாருங்கள், (எதற்கு என்று தெரியாமலேயே) அல்லேலூயா ஸ்தோத்திரம் சொல்லுங்கள் என்று அர்த்தமற்ற இக்கால மேடைகளை போல அப்பொழுதும் இருந்தது !!
தேவனுடைய விதிமுறைகளை மக்களுக்கு கற்பிக்க அவர்கள் தவறிவிட்டார்கள் (22:26).
தேவனுடைய மக்கள் மீதான ஆட்சியாளர்கள், சிவில் மற்றும் அரசியல் அதிகார பதவிகளில் இருப்பவர்கள், பொருள் மற்றும் சமூக ஆதாயங்களுக்காக மற்றவர்களின் வாழ்க்கையை அழிக்கும் பழக்கத்தில் இருந்தனர் (22:27).
நிலத்தையுடைய மக்கள், அதாவது, செல்வந்த நில உரிமையாளர்கள் பேராசையினால் சகலவற்றையும் சுரண்டிக் கொண்டிருந்தனர் - இடுக்கண் செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்தினார்கள் (22:29).
*ஒப்பனையான தேவனுடைய உதாரணம்*:
தேவ கோபத்திலிருந்து (நியாயதீர்ப்பிலிருந்து) யூதா ஜனங்களை காப்பாற்றும் வண்ணம் “தேவ நீதியினாலான ஒரு சுவரை ஜனங்களை சுற்றிலும் எழுப்புகிறார். ஜனங்கள் நீதியை விட்டு ஏதாவதொரு தவறு இழைக்கும் வேளையில் அந்த சுவரில் துவாரம் / இடைவெளி ஏற்படுகிறது. அப்பொழுது அந்த இடைவெளியை (திறப்பை) அடைக்கும்படி (நீதியை எடுத்துச்சொல்ல / தவறை சரிசெய்ய) தேவன் தேடியும் ஒரு நீதிமான் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்றார் ! எசே 22:30.
ஒழுக்கம் என்பது தெய்வீக கோபத்திலிருந்து மக்களைக் காக்கும் சுவர் போன்றது.
அந்த ஒழுக்கம் என்ற அந்தச் சுவர் எங்கு உடைந்தாலும் – அந்த இடைவெளியில் “*தீர்ப்பு நுழைகிறது*”.
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன் என்றார் எரேமியா தீர்க்கன் மூலமாக தேவன். எரே 5:1
இன்றைய காலகட்டத்தில் இந்த மறுபரிசீலனை மிக மிக அவசரம் / அவசியம்.
எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் !! ஆகாரத்தையல்ல பிரசங்க மேடைகளையே வேதனையோடு சொல்லுகிறேன்.
ஞானஸ்நானம் துவங்கி அனைத்தையும் மாற்றி உபதேசிக்கும்படியான துணிச்சல் வந்து விட்டது.
வேதம் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் தங்கள் தங்கள் பெயர் பலகைக்காக ஊதியம் வாங்கிக்கொண்டு வயிற்று பிழைப்பிற்காக சொந்த குடும்ப நலனுக்காக தலைமை நிறுவனங்களிடம் சம்பளத்திற்காக வேலை செய்யும் வேலைக்காரர்கள் தங்களை தேவ ஊழியன் என்று கூசாமல் சொல்ல துணிந்திருக்கிறார்கள்.
எது உண்மை என்று அறியமுடியாத வகையில் அனைவரது பாவனைகளிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.
மந்திரவாதியை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் வேஷம் இருக்கிறது.
தாங்கள் இணைந்திருக்கும் வாட்ஸப் குழுவில் உள்ள பெண்களை தேடி தெரிந்து கொண்டு அவர்களுக்கு நேரடியாக ஜெப விண்ணப்பங்கள் என்ற பெயரில் செய்திகளை அனுப்பி ஆன்லைன் ஊழியம் என்ற புதிய யுக்தியும் அரங்கேற்றி சொந்த மனைவியும் பிள்ளையையும் கவனிக்காமல் மற்ற அநேக குடும்பங்களை சீரழித்த கணக்கும் இப்போது பெருகியுள்ளது.
கிறிஸ்தவர்கள் என்றால் உண்மையானவர்கள் அமைதியானவர்கள் என்ற பெயர் சமுதாயத்தில் மாறிபோனதை இனியும் உணராமல் இருந்தால் நமக்கு பின்வரும் சந்ததிக்கு எதை விட்டு செல்கிறோம்?
அன்று எசேக்கியல் தீர்க்கன் மூலம் தேவன் தன் ஜனங்களை பார்த்து கேட்ட அதே கேள்வியை இன்றும் நம்மிடத்தில் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது.
வேதத்தை ஒப்பிட்டு,
தன் வாழ்க்கையில் உள்ள,
தன் சபையில் நடக்கும் வேத முரணான காரியங்களை,
புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு ஏற்றார் போல திருத்திக்கொள்ளாமல்;
திறப்பின் வாசல் என்று முழங்கால் படியிட்டு பல மணிநேரம் ஜெபம் செய்தாலும் நீதியும் சத்தியத்தையும் கடைபிடிக்காமல் இருந்தால் அனைத்துமே வீணான ஜெபம் என்பது திண்ணம் – லூக்கா 16:15, எசே 43:8, எரே 6:15
மனந்திரும்ப இன்றும் காலம் இருக்கிறது - எரே 4:1
ஆண்கள் மத்தியிலும், சபையிலும், பெண் பிரசங்கியாளர்கள் (1கொரி. 14:35);
கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க மதத்தினரின் ஆதிக்கம்;
புரியாத மொழிகளில் தேவ ஆராதனை என்ற ஒழுங்கீனம் (1கொரி 14:27-28);
தங்களுக்கு ஏற்றார்போல தொழுகையின் நாட்கள்;
ஒழுங்குகள்;
புதிய ஏற்பாட்டு சத்தியத்தை விட்டு;
சதா நியாயபிரமாணத்தை பற்றிய விவாதமே கிறிஸ்தவம் என்ற பெயரில் இந்த மாறுபாடானவர்கள் மத்தியில் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறது.
திறப்பில் நின்று ஜெபிக்கிறோம் என்று சத்தியம் அறியாத கூட்டத்தாரோடு நேரத்தை வீணடிக்காமல் சத்தியத்திற்கு நேராக தங்களை மாற்றிக்கொள்ளும்படியாக நாம் உண்மையான திறப்பில் நிற்கவேண்டிய காலம் இது !!
காட்டமான இந்த பதிவு அநேகரை முகம் சுளிக்க செய்தாலும், இந்த நாளாகிலும் தேவன் திரும்பவும் தன்னிடமாய் மனந்திருந்திய ஒரு ஆத்துமாவையாகிலும் பெற்றுக்கொள்வார் என்று கண்ணீரோடு விசுவாசிக்கிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 28 மார்ச், 2020
#824 - திறப்பில் நிற்பது என்றால் என்ன தெளிவுப்படுத்துங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக