படித்தில் பிடித்தது - --------- - - - - - - - - - - - - - தேர்தல் ( கவனமாக வாசிக்கவும்)
தேர்தலில், இந்த ஆட்சி செய்யும் ஒருவரை எங்களுக்கு தாரும் அல்லது அந்த ஆட்சியை தாரும் என்று ஜெபிக்கும் விசுவாசிகளே!
இந்த தேர்தல் மாத்திரமல்ல, எந்தத் தேர்தலும் கிறிஸ்தவர்களில் சில பிரிவினருக்கு நன்மையையோ, தீமையையோ கொண்டுவரலாம் ஆனால், இறையரசுக்கு எந்த சாதக பாதகத்தையும் ஏற்படுத்தாது.
சபையானது "கற்பாறை", அதன்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும். எந்த ஆட்சி வந்தாலும் அந்த அரசால் இறையரசில் வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியாது, அதை கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் இறையரசு இந்த உலகத்துக்குரியது அல்ல.
சபை என்னும் கப்பலுக்கான சுக்கான் எந்த மனிதனின் கையிலும் இல்லை அது இயேசுவின் கையில் இருக்கிறது, அந்தக் கப்பல் போகும் பாதையையும் அதன் வேகத்தையும் அவரே தீர்மானிப்பார். ஒருவனும் அதற்கு குறுக்கே நிற்கமுடியாது.
எனவே இந்த ஆட்சி வந்தால் சபைக்கு நல்லது, அந்த ஆட்சி வந்தால் சபைக்கு கெட்டது என்று சொல்லி தேவனை அசிங்கப்படுத்தாதிருங்கள்.
ராஜாக்களும் அதிபதிகளும் தங்கள் இரட்சிப்புக்காக சபையில் வந்து தஞ்சமடைய வேண்டுமே தவிர, சபை தனது பாதுகாப்புக்காக இராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் போய் தஞ்சமடையக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அவர்களை நேசித்து அவர்கள் நாட்டு நலனுக்காக கொண்டுவரும் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து அவர்களுக்காக ஜெபிப்போம்.
நாம் ஓட்டுப்போட்டு கிறிஸ்தவத்தை பாதுகாக்கப்போவதில்லை. கிறிஸ்துதான் நம்மையும், நம் அரசியல்வாதிகளையும் தேசத்தையும் பாதுகாப்பவர்.
"ஆண்டவரே இந்த அதிபதியை எங்களுக்கு ஏற்படுத்தும்!" என்ற ஜெபத்தை நாம் வேதத்தில் பார்க்கமுடியாது, ஆனால் யார் அரசாண்டாலும் நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது (I தீமோத்தேயு 2:2). சுவிசேஷத்தின் நிமித்தம் அரசாங்கத்தால் நமக்கு உபத்திரவங்கள் வரும்போது "ஆண்டவரே! இவர்களை அரியணையில் இருந்து இறக்கும் என்றோ இவர்களை தண்டியும்!" என்றோ ஜெபிக்காமல் ஆதித்திருச்சபையார் ஜெபித்ததுபோல இந்த கடுமையான உபத்திரவத்தின் மத்தியிலும் பயமின்றி, தயக்கமின்றி தைரியத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்க எங்களுக்கு உதவி செய்யும் என்றே ஜெபிக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் பலர் தாம் ஓட்டுப்போட்டு கிறிஸ்தவத்தை இந்தியாவில் காப்பாற்றப் போவதாக சொல்வதை தொடர்ந்து கேட்டதன் விளைவாக எழுதப்பட்டது. ஒரு கட்சி கிறிஸ்தவர்களுக்கு சார்பானது அல்லது எதிரானது என்று முடிவு செய்து ஓட்டுப் போடுவதும் போடாதிருப்பதும் உங்கள் தனிப்பட்ட உரிமை. ஆனால் உங்கள் ஓட்டு அல்ல, தேவனுடைய கரமே சபையை பாதுகாக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங்கீதம் 127:2). எந்த சூழலிலும் எங்கள் தேவனே எங்களை பாதுகாக்கிறவர் என்று புறமதத்தருக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள். "சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு" போன்ற பலவீனமான வார்த்தைகள் மூலம் பலத்த கரத்தையும் ஓங்கிய புயத்தையும் உடைய சர்வவல்லவரை கனவீனப்படுத்தாதிருங்கள்.
யார் சிறுபான்மை?
அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தரருடைய பிள்ளைகளா?
யார் சிறுபான்மை?
சீரியாவின் படைகளா? அல்லது அக்கினிமயமான இரதங்களாலும் குதிரைகளாலும் சூழப்பட்டு நின்ற எலிசாவா?
யார் சிறுபான்மை?
பாகாலின் 450 தீர்க்கதரிசிகளா? அல்லது தனியாளாக நின்று அக்கினியை வானத்திலிருந்து இறக்கிய எலியாவா?
யார் சிறுபான்மை?
மீதியானியரின் இராணுவமா? அல்லது 300 பேருடன் சென்ற கிதியோனா?
கிறிஸ்தவர்களே! கிறிஸ்தவர்களே!
நீங்கள் செய்தித்தாளை படிக்கும் நேரத்துக்கு வேதத்தைப் படித்தீர்களானால் நலமாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக