ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

#1210 - நான் எந்த ஒரு தவறான செயலும் யாருக்கும் செய்யவில்லை. நான் மரணித்தால் பரலோகம் போவேன் பின்னர் எதற்கு இந்த கிறித்தவ சமயம் என்று கேட்கிறார்?

#1210 - *இஸ்லாமிய நண்பர் ஒருவர் கூறுகிறார் நான் அல்லாஹ்வை வணங்குகிறேன். நான் எந்த ஒரு தவறான செயலும்  யாருக்கும் செய்யவில்லை.  ஒருவேளை நான் மரணித்தால் பரலோகம் போவேன் பின்னர் எனக்கு எதற்கு இந்த கிறித்தவ சமயம் என்று கேட்கிறார்*. அவருக்கு நான் எப்படி விளக்கம் சொல்வது?

*பதில்* : நாம் எவருடைய மதத்தையும் குறைகூற அதிகாரமில்லை. அவரவரது நம்பிக்கையை அவரவரே சோதித்துக்கொள்வது அவசியம். 

பாதை எது என்று சொல்வது நம் கடமை. அந்த பாதையை தேர்ந்தெடுப்பதும் மாற்று பாதையை பின்பற்றுவதும் அவர்கள் உரிமை. இயேசுகிறிஸ்துவும் தனது போதனையை தெளிவாய் பிரசங்கித்தார். காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று தெரிவித்தார். மத். 11:15

இவ்வுலகத்தில் பிறந்து நன்மை தீமை அறிய துவங்கிய நாள் துவங்கி இன்று வரை (அல்லது தனது சாவு வரை) ஜீவித்த எவரும் தான் தவறே செய்யவில்லை என்று சொல்வதற்கில்லை. அப்படி சொல்பவர் எவரும் குற்றவாளி அல்லது பொய்யரே என்று வேதம் தெளிவாய் சொல்கிறது. ரோ. 3:23; பிர. 7:20; 1யோ. 1:8-10

மேலும், வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் கொடுத்தாலும், ஒரே ஒரு சதுரடி நிலத்தைக்கூட பரலோகத்தில் நமக்கென்று ஒதுக்கீடோ முன்பதிவோ செய்துக் கொள்ள முடியாது !!

அதாவது, பூமியில் நீங்கள் எவ்வளவு நல்லவராய் இருந்தாலும், அது பரலோகத்தில் விலைபோகாது !!

உங்களை நான் முன்னமே அறிந்திருந்தால் மாத்திரமே, எப்படி உங்கள் வீட்டினுள் நான் பிரவேசிக்கமுடியுமோ, பரலோகத்திற்கு சொந்தமானவரை நான் அறிந்திராத பட்சத்தில் உள்ளே நமக்கு செல்ல அனுமதியில்லை!

மேலே என்ன இருக்கிறது என்று கீழே உள்ளவருக்கு எப்படித்தெரியும்? மேலேயிருந்து யாரேனும் ஒருவர் கீழே வந்தவர் மாத்திரமே அதை நமக்கு வெளிப்படுத்தமுடியுமேயன்றி, பூமிக்குள் கடந்து சென்றவர் எவரும் அதை நிரூபிக்க முடியாது. 

இயேசு கிறிஸ்து, மேலிருந்து வந்தவர். மரியாள் வயிற்றில், ஆணின் துனையின்றி பிறந்தவர். மரணம் அவரை பூமிக்குள் அடைத்துப்போடமுடியவில்லை. 3ம் நாள் உயிர்த்தெழுந்தார். அதன் பின்னர் பூமியில் 40 நாட்கள் வாழ்ந்தார், பின்பு அநேகர் கண்கள் கண்டுக்கொண்டிருக்க – அவர் பரலோகம் ஏறினார். இது சரித்திரம். இப்படி எவருமே இன்று வரை நிரூபிக்கவும் இல்லை, இனி அப்படி நடக்கவும் நடக்காது! 

ஆதார வசனங்கள்: எபே. 4:9; நீதி. 30:4; யோ. 3:13; 6:33; 6:62; 20:17; அப். 2:34-36

பரலோகத்தின் சொந்தக்காரர் இயேசு கிறிஸ்து. யோ. 14:2; எபி. 11:10; வெளி. 3:21

அவரை நாம் அண்டிக்கொண்டு, அவருடைய சரீரத்தில் பங்காளனாகும்பொழுது, நமக்கு அந்த உரிமை தரப்படுகிறது. அப். 2:47, கொலோ. 1:18; ரோ. 12:5
 
அவரை நாம் அண்டிக்கொள்ள நமது சுயக் கிரியைகள் உதவாது. அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து அவரது சொல்லின்படி நாம் செயல்பட்டால் மாத்திரமே, நாம் அவருடையவர்களாகிறோம். 1தீமோ. 4:8

ஆகவே, சுய முயற்சியினால் அல்ல, மேலான அந்த பரலோகம் செல்லும் பாக்கியத்தை நாம் கிருபையால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம். சொந்த கிரியையினால் அல்லது இரட்சிப்பற்ற வெறும் நற்கிரியைகளினால் அல்ல. யோ. 14:3, 1பேதுரு 1:13-16, தீத்து 3:5-6, எபே. 2:5
 
ஆகவே, பரிசுத்தம் என்று நினைத்துக்கொண்டு சொந்தக் கிரியையை செயல்படுத்தாமல், சுயச்சிந்தனையிலிருந்து வெளியேறி கர்த்தருக்கு கீழ்படிந்து, பயந்து, சத்தியத்தின்படி நடந்தால் மாத்திரமே சொர்க்கம் கிட்ட வாய்ப்புள்ளது. சொந்த புத்தியால் நிர்வாணமே மிஞ்சும் !!

2 தீமோ. 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

ரோ. 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே.

இயேசு கிறிஸ்து வரும்போது இந்த பூமியே அழிந்து விடும் என்று வேதம் சொல்லியிருக்க இவ்வுலகில் எங்கு எதை செய்தாலும் அது நமது வாழ்வின் சுகத்திற்கேயன்றி வேறெதற்கும் உதவாது. 2பேதுரு 3:10

நமது பாவம் மன்னிக்கப்படுவதற்காக செய்ய வேண்டிய காரியத்தை வேதம் நமக்கு தெளிவான பதிலை கொடுத்திருக்கிறது.

*செய்யவேண்டியதாவது:*
1-கிறிஸ்துவின் போதனையை கேட்டு
2-விசுவாசித்து
3-பாவத்தை விட்டு மனந்திரும்பி
4-கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு
5-பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஆதார வசனங்கள்: மாற்கு 16:16, அப். 2:37-38, அப். 22:16, ரோ. 6:1-6

முடிவு பரியந்தம் இந்த விசுவாசத்தில் நிலைத்திருந்தால் அப்போது கிறிஸ்துவின் வருகையில் நாம் ஒன்றாக பரலோகத்தில் ஒருவரை ஒருவர் காணமுடியும்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*

*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக