வெள்ளி, 1 டிசம்பர், 2023

#1007 - கர்த்தருடைய பந்தி பரிமாறப்படும் வேளையில் அல்லது காணிக்கை எடுக்கும் வேளையில் சபையார் பாட்டு பாடிக்கொண்டே செய்யலாமா? அதில் தவறு ஏதும் உள்ளதா?

#1007 - *கர்த்தருடைய பந்தி பரிமாறப்படும் வேளையில் அல்லது காணிக்கை எடுக்கும் வேளையில் சபையார் பாட்டு பாடிக்கொண்டே செய்யலாமா? அதில் தவறு ஏதும் உள்ளதா?*

*பதில்* : சில வசனங்களை கோடிட்டு காண்பிக்கிறேன்:

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள் (பிலி. 3:17)

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்(பிலி. 4:9).

தேவனுடைய வீடாகிய சபையை எப்படி நடத்தவேண்டும் என்று பவுல் நமக்கு எழுதி வைத்துள்ளார். (1தீமோ. 3:15)

”பாடுவது” தொழுகையில் ஒரு பகுதியாகும்.

"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;" (கொலோ. 3:16) என்று பவுல் சொல்வதை கவனியுங்கள்.

அது போன்று, அவர் எபேசியர்களிடம், “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,” என்கிறார். (எபே. 5:18-19).

கர்த்தருடைய பந்தியை பொருத்தவரை, இயேசுவும் அவருடைய சீஷர்களும் பந்தி *முடிந்த பின்னர்* ஒரு பாடலைப் பாடுவதைப் பரிசுத்த ஆவியானவர் பதிவுசெய்துள்ளார். மத். 26:30; மாற்கு 14:26

எந்த சூழ்நிலையிலும் காணிக்கையின் போதோ அல்லது கர்த்தருடைய பந்தியின் போதோ பாடியதாக எந்த பதிவும் இல்லை.

சிலர் இந்த விளக்கத்தைப் பார்த்து, "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை" எனலாம்.

தேவனை தொழுதுக்கொள்வதென்பது மனிதனின் மனதை உள்ளடக்கியது. தொழுகையில் ஒருவரது மனம் முழுமையாக ஈடுபட வேண்டும்.

"உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்… தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். " (யோவான் 4:23) என்று இயேசு கற்பித்தார்.

பாடுவது, காணிக்கை செலுத்துவது, பிரசங்கம், ஜெபம், கர்த்தருடைய பந்தி என்ற இந்த ஐந்து நிகழ்வுகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு செயலிலும் நமது முழுமையான மனதை முழுமையாய் தேவனிடம் ஒப்புக்கொடுக்கிறோம்.

செய்தியின் போது ஒருவர் பாடிக்கொண்டிருந்தால் கவனம் எங்கிருக்கும்?

ஜெபிக்கும் போது ஒரு பக்கம் மற்றவர் பாடிக்கொண்டிருந்தால் கவனம் எங்கிருக்கும்?

இரண்டு காரியத்தை ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

சகலமும் "நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” (I கொரி. 14:40).

"ஏனென்றால், பரிசுத்தவான்களுடைய எல்லா சபைகளிலும் தேவன் குழப்பத்தை உண்டாக்குகிறவர் அல்ல, மாறாக சமாதானத்தை உண்டாக்குகிறவர்" (I கொரி. 14:34).

ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நடத்தப்படும்போது, ஒவ்வொருவரது மனநிலையும் அலைபாய்ந்து கவனம் நிச்சயம் சிதறும்.

தொழுகையில் ஒவ்வொரு செயலும் தனித்து நிற்கிறது. நாம் பாடும்போது, நாம் அனைவரும் பாட வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, அனைவரும் ஜெபத்தின் வார்த்தைகளில் ஈடுபட வேண்டும். கர்த்தருடைய பந்தி விநியோகிக்கப்படும்போது, அந்தச் செயலில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும். "நாம் பலராயிருப்பதால், ஒரே அப்பமும் ஒரே உடலுமாயிருக்கிறோம்; ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் பங்குள்ளவர்கள்" (I கொரி. 10:17).

ஒரே நேரத்தில் இரண்டு வழிபாட்டு முறைகள் ஒன்றாக நடத்தப்படுவதன் முதன்மை நோக்கம் பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் கவர்வதாகும்.

பாடினால் என்ன தவறு? அதில் நமது உணர்வுகள் கூடுதலாக தூண்டப்படுமே என்று வாதிடுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் அடுத்து என்ன யோசிப்பார்கள்? ஜெபிக்கும் போது ஒரு பக்கம் பாடிக்கொண்டே இருக்கலாம் அல்லது ஊழியர் பிரசங்கத்துக்கொண்டிருக்கும் போது பாடலாம் என்றா?

கர்த்தர் அப்பத்தையும் பாத்திரத்தையும் கொடுத்தபோது, "இது என் சரீரம்... இது என்னுடைய இரத்தம்" (மத்தேயு 26:26-28) என்று கூறினார். மேலும் "இதை என்னை நினைவு கூறும்படிச் செய்யுங்கள்" என்றார் (1 கொரிந்தியர் 11:24,25).

"வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்கும்படிக்கு" (அப். 20:7) சபை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்த தியாகத்தின் மீது நம் கவனத்தை செலுத்துவதாகும். "கர்த்தருடைய சரீரத்தைப் பகுத்தறிகிறோம்." (1கொரி. 11:29).

அப்பமும் திராட்சை ரசமும் கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுபடுத்த போதுமானவை.

காணிக்கையின் போதோ பந்தியின் போதோ பாடலை பாடியதாக வேதாகமத்தில் காண்பதில்லை. ஆனால், *பந்திக்கு பின்னர்* ஸ்தோத்திரப் பாட்டை பாடியதை நாம் கண்டோம்.

தொழுகையில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் தனித்து நிற்கிறதாகையாலும் சேர்ந்து செய்ததான உதாரணம் வேதாகமத்தில் இல்லையென்பதாலும்; என்னைப் பொறுத்தவரை ஒன்றோடொன்று சேர்க்காமல் இருப்பது உகந்தது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக