#1193 - *நீங்கள் கிறிஸ்தவர் என்றால், தேவனுடைய பிள்ளைகள் என்றால் உங்களுக்கு வியாதிகள் வராது, விபத்துகள் நடக்காது, சரீரம் பலவீனம் அடையாது என்று போதிப்பது உண்மையானதா?* அது வேத அடிப்படையிலானதா?
*பதில்* : நம்முடைய மாம்ச சரீரம் மண்ணினால் உண்டானது. ஆதி. 2:7
நிச்சயம் அந்த சரீரம் மண்ணுக்கு திரும்பும். ஆதி. 3:19
எவ்வளவு தான் சரீரத்தை பேணிக் காத்துக்கொண்டாலும், கட்டாயம் வயது சென்று மரணத்தை இந்த சரீரம் சந்திக்கும். மனிதனுக்கு 120 ஆண்டுகள் தானே என்று தேவனே சொல்லியிருக்கிறார். ஆதி. 6:3
மோசேயோ, அதையும் குறைத்து நடைமுறை வாழ்க்கையில் 80 வருடங்கள் என்கிறார். சங். 90:10
தேவனுடைய பிள்ளைகளானாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் இவ்வுலகில் விளையும் ஆகாரத்தையே உண்கிறோம். பெலவீனங்களும், வியாதிகளும் நிறைந்த இந்த உலகத்தில் அனைவரும் வியாதியால் பாதிக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
கிறிஸ்துவின் போதனை எப்போதும் பரம வாழ்க்கையைக் குறித்தது.
இந்த உலகில் வியாதி வராது என்றோ விபத்துகள் நடக்காது என்றோ எந்த உத்திரவாதமும் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தில் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், மற்றவர்களைவிட கிறிஸ்தவர்கள் அதிகம் பாடுகள் பட்டதை வேதாகமத்தில் காணமுடியும். கீழேயுள்ள வசனங்களை கவனிக்கவும்:
1- 1தீமோ. 5:10 … *உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து*, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, …
2- யாக். 5:14 உங்களில் ஒருவன் *வியாதிப்பட்டால்*, அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
3- யாக். 5:15 அப்பொழுது *விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை* இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
4- அப். பவுல் வியாதியுள்ள துரோப்பீமுவை அப்படியே விட்டு வந்ததாக 2தீமோ. 4:20ல் குறிப்பிடுகிறார். ”துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்”
5- எப்பிராதீத்து வியாதியாயிருந்தது மாத்திரமல்லாமல் மரணத்தருவாயில் இருந்தார் என்று பவுல் குறிப்பிடுகிறார். பிலி. 2:26
6- நாம் துன்பப்படுவேண்டியது அவசியம் என்று பேதுரு சொல்கிறார். 1பேதுரு 1:6
ஆகவே, மண்ணான சரீரத்தில் ஒருவர் இருக்கும் வரைக்கும் வியாதியும், மரணமும், பலவீனமும், விபத்துகளும் தவிர்க்கமுடியாது. இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் முடிச்சு போடுவது சரியானது அல்ல.
தம்முடைய பிள்ளைகளை தேவன் பாதுகாக்கிறார். அதே வேளையில், சட்டத்திற்கு கீழ்படியாமல் துணிகரமான செயல்களில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டதும் அது தேவனுடைய சித்தம் என்று சொல்வது அபத்தம்.
*எ.கா.:* இரு சக்கர வாகன ஓட்டுனர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் போவது போன்றவை.
வேதாகத்தை வாசிப்பதால் கீழ்படிதலும், அறிவும், ஞானமும் அதிகம் வரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சரியாக படித்து உணர்ந்து கீழ்படிந்தால் சொல்லிக்கொடுத்த வாத்தியாரை விட அறிவு கூட கிடைக்கிறது என்கிறார் சங்கீதக்காரன். சங். 119:99
வாசித்தாலும், புரிந்தாலும், அறிந்தாலும் – சுய லாபத்திற்காகவும், பண ஆதாயத்திற்காகவும் சத்தியத்தை விட்டு ஊரோடு ஒத்துபோக விரும்பும் இக்கால ஜனங்கள் மத்தியில் – வேதாகமத்திற்கு *அப்படியே* கீழ்படிந்து அதன்படியே செயல்படவேண்டியது அவசியம்.
இக்காலங்களில், கிளி ஜோசியக்காரனும் குடுகுடுப்பைக் காரனையும் மிஞ்சும் அளவிற்கு வேதாகமத்தை தூக்கிக்கொண்டு நல்ல காலம் பொறக்குது, ஆசீர்வாதம் வருகிறது, வியாதி பறக்கிறது, ஓட்டை அடைகிறது, கட்டி கரைகிறது என்று மேடைகள் முழங்க – தனக்குள் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் பொய்யாய் ஆமோதித்து ஆண்டவரின் சித்தம் என்று சப்பைக்கட்டு கட்டாமல் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவோம்.
ஆகவே, வியாதிகள் வராது, விபத்துகள் நடக்காது, சரீரம் பலவீனம் அடையாது என்று போதிப்பது வேதத்திற்கு முரணானது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக