வெள்ளி, 24 மார்ச், 2023

#1187 - வருடத்தில் ஒருமுறையே மரண நாளை நினைவுகூறமுடியும். அப்போஸ்தலர் 20:7ஐ முன்னிட்டு உங்களது போதனைபடி வாரத்தின் முதல் நாள் தோறும் கர்த்தருடைய பந்தியை கடைபிடிப்பது தவறு என்கிறார்களே?

#1187 - *வருடத்தில் ஒருமுறையே மரண நாளை நினைவுகூறமுடியும். அப்போஸ்தலர் 20:7ஐ முன்னிட்டு உங்களது போதனைபடி வாரத்தின் முதல் நாள் தோறும் கர்த்தருடைய பந்தியை நீங்கள் கடைபிடிப்பது தவறு என்கிறார்களே?*.

நிசான் மாதம் 14ம் தேதி பஸ்காவின் நாளில் கிறிஸ்து மரித்தார். அன்று இரவு மாத்திரமே கர்த்தருடைய பந்தி என்னும் இராபோஜனத்தைக் கடைபிடிக்கவேண்டும். அப்போஸ்தலர் 20:7ஐ முன்னிட்டு உங்களது போதனைபடி வாரத்தின் முதல் நாள் தோறும் கர்த்தருடைய பந்தியை கடைபிடிப்பது தவறு. அவ்வசனம் அப்பம் பிட்குதலை மாத்திரமே குறிப்பிடுகிறது. திராட்சை ரசம் அங்கு குறிப்பிடப்படவில்லை. சாதாரன போஜனத்தையே அந்த நிகழ்வு குறிப்பிடுகிறது. உங்கள் போதனையை மாற்றிக்கொள்ளவும்.

*பதில்* : தனது மரணத்தை நினைவு கூறவேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து.

வருடத்திற்கு ஒரு முறை, அந்த குறிப்பிட்ட மரித்த நாளிலும் நேரத்திலும் மாத்திரம் நமக்கு பிரியமானவரது மரணத்தை நினைவில் கொண்டு வந்தபின்னர் மறந்து விடுவதல்ல!

மேலும், அவரது மரணத்தை:
தினமும் நினைவு கூறுவதா,
வாரந்தோறும் நினைவு கூறுவதா
மாதத்திற்கு ஒரு முறையா அல்லது
வருடத்திற்கு ஒரு முறையா அல்லது திருமணம், காதுகுத்து, புதுவருடம், ஈஸ்டர் பண்டிகை என்று மனிதர்களுக்கு தோன்றும் எந்த நேரத்திலும் அவரவர் தீர்மானித்துக்கொள்வதா?

எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிட்டு கூறவில்லை.

இதற்கான விதிமுறைகளை வேதத்தில் மூன்று வகையான உதாரணங்கள் மூலம் கண்டறியலாம்:

பொதுவாக ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ள போது, அந்த கட்டளை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் காண்கிறோம்.

*உதாரணம் 1*:
உலகம் முழுவதும் சென்று கிறிஸ்துவின் கட்டளைகளை பிரசங்கிக்க சொன்னார். (மத்தேயு 28:19).

- சுவிசேஷம் ஓடிச் சென்று சொல்லப்படுகிறது (அப். 8:30)
- ரதத்தில் சவாரி செய்து சொல்லப்படுகிறது (அப். 8:28-29, 31)
- கப்பலில் சென்று சொல்லப்படுகிறது (அப். 13:4)
- நடந்து சென்று சொல்லப்படுகிறது (அப். 20:13).
எப்படி சொல்லப்பட்வேண்டும் என்பதல்ல… எப்படியாகிலும் சொல்லப்படவேண்டும் என்பதே காரியம்.

*உதாரணம் 2*:
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்பது கட்டளை (2கொரி. 9:7)
- உதாரத்துவமாகவும் விருப்பத்துடனும் கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-5)
- தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பகிர்ந்து கொடுத்தார்கள் (அப். 2:44-45)
- தங்கள் உடைமைகளைத் தங்களுடையதாக எண்ணவில்லை (அப். 4:32-35).

இந்த உதாரணங்கள் சொல்லப்பட்ட கட்டளையை அதே அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.

*கர்த்தருடைய பந்தி:*
"வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்." (அப்போஸ்தலர் 20:7).

கிறிஸ்து, தனது பந்தியை நிறுவியபோது, அது செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டார். எப்பொழுதெல்லாம் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அப்போஸ்தலர்கள் எப்பொழுது கடைபிடித்தார்கள் என்னும் ஆதாரம் அப். 20:7ல் மாத்திரம் உள்ளது.

இந்த சம்பவம் தற்செயலானதா அல்லது முக்கியமானதா என்பதை கவனிக்கவேண்டும்.

இவ்வசனத்தில், வாரத்தின் முதல் நாளில் அப்பம்பிட்கும்படிக்கு கூடிவந்தார்கள் என்று கூறப்படுகிறது.

வாரத்தின் முதல் நாள் சீடர்கள் அப்பம் பிட்க (அதாவது, கர்த்தருடைய விருந்தில் பங்குகொள்ள) ஒன்று கூடினார்கள் என்பதை வாசகர்களாகிய நாம் அறியும் வகையில் இந்த சொற்றொடர் தகுதியானது.

தற்செயலாக வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய பந்தியில் பங்குகொண்டார்கள் என்று முடிவு செய்ய முடியாத அளவுக்கு வார்த்தை உள்ளது.

சீஷர்கள் திருவிருந்து எடுத்த நாள் இது. எனவே புறக்கணிக்க முடியாது.

வாரத்தின் முதல் நாளைத் தவிர வேறு எந்த நாளும் பயன்படுத்தப்பட்டதாக புதிய ஏற்பாட்டில் எந்த கட்டளைகளும் எடுத்துக்காட்டுகளும் இல்லை.

மாதத்தின் முதல் வாரத்திலேயோ,
வருடத்திற்கு ஒரு முறையோ,
குறிப்பிட்ட வேறு எந்த நாளிலோ ஆதி கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய பந்தியை கடைபிடித்த தாக வேதாகமத்தில் காணமுடியாது.

எனவே, இந்த அங்கீகரிக்கப்பட்ட உதாரணம் வாரத்தின் முதல் நாளில் மட்டுமே கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்ளும்படி நம்மை பிணைக்கிறது என்று முடிவு செய்கிறோம்.

சந்தைவெளியில் கடைவீதிக்கு போகும் போது – “வெள்ளி விடுமுறை” என்று எழுதி போட்டிருப்பார்கள். என்றாவது அவர்களிடம் எந்த வெள்ளி விடுமுறை? மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமையா அல்லது வாரந்தோறும் எல்லா வெள்ளிக்கிழமையுமா என்று கேட்டதுண்டா? புரிதல் என்ன? எப்பொழுதெல்லாம் வெள்ளி வருகிறதோ அப்பொழுதெல்லாம் விடுமுறை என்று நாம் புரிந்துக்கொள்கிறோமே!

வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்கும்படிக்கு கூடிவந்தார்கள் என்றால் – எப்பொழுதெல்லாம் வாரத்தின் முதல் நாள் வருகிறதோ அப்பொழுது நாம் கூடுகிறோம். அதாவது ஒவ்வொரு வாரமும்!!

*கர்த்தருடைய பந்தியா அல்லது பஸ்காவா*?
நாம் கடைபிடிப்பது பஸ்கா அல்ல.
அது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறும் கர்த்தருடைய பந்தி.

பஸ்கா மோசேயின் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. கர்த்தருடைய இராப்போஜனம் பஸ்காவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. எபி. 9: 16-17

பழைய ஏற்பாடும் முடிந்த அதே நேரம் இது. கொலோ. 2:13-15.

அந்தச் சட்டத்தின் கீழ் உள்ள யூதர்கள் கிறிஸ்துவின் சட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு பழைய ஏற்பாட்டை முடிக்க வேண்டியது அவசியம்.  ரோ.  7:4

*வெறும் அப்பம் பிட்குதல் மாத்திரமே சொல்லப்பட்டு திராட்சை ரசம் சொல்லப்படவில்லை என்பதால் அப். 20:7ம் வசனம் சாதாரண போஜனத்தை குறிக்கிறதா*?
“கூடிவந்ததன்” நோக்கம் அப்பத்தை பிட்கும்படி என்று அப்போஸ்தலர் 20:7ல் வாசிக்கிறோம்.

கூடிவருதலைக் குறித்து பவுல் 1கொரிந்தியர் 11:33ல் சொல்லும்போது, "ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்” என்கிறார்.

1கொரிந்தியர் 11:23-26ஐப் பார்க்கும்போது, அவர்கள் போஜனம் பண்ணியது கர்த்தருடைய இராப்போஜனம் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

கர்த்தருடைய இராப்போஜனத்தின் முதல் பகுதி அப்பம் பிட்குதல் என்பதை கவனியுங்கள்.

அப்பம் பிட்குதல் என்பது கர்த்தரின் இராப்போஜனத்தைக் குறிக்கிறது. "நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" 1கொரிந்தியர் 10:16.

அப்போஸ்தலர் 2:42ல், தொழுகையின் மற்ற செயல்களுடன் அப்பம் பிட்குதலும் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம். "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் ஐக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபங்களிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" என்று.

ஆகவே, அப்போஸ்தலர் 20:7ல் "தொழுகை அல்லது ஆராதனை" என்ற வார்த்தை நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், வாரத்தின் முதல் நாளில் சீஷர்கள் அப்பம் பிட்கக் கூடிவந்ததால் துரோவாவில் இப்படித்தான் நடந்தது என்பதை நாம் அறிவோம்.

அப்போஸ்தலர் 20:7ல் உள்ள சகோதரர்கள் இன்று நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறார்கள்.

அப்பம் பிட்கும்படி என்ற இந்த வசனத்தில் வரும் வார்த்தை பதத்திற்கு – கிரேக்க பாஷையின் விளக்கத்தை அகராதியிலிருந்து கீழே கொடுக்கிறேன்.

to break - κλάσαι (klasai) Verb - Aorist Infinitive Active - To break (in pieces), break bread.

Bread  - ἄρτον (arton) Noun - Accusative Masculine Singular - Bread, a loaf, food.

அதாவது – அப்பம் என்று வரும் இடத்தில் ஆகாரம் என்றும் வருவதையும் கவனிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு : சாப்பிட்டு போகலாம் என்று ஒருவரை நீங்கள் வீட்டிற்கு அழைத்தால், அவர் குடிக்க தண்ணீரும் நீங்கள் கொடுக்க வேண்டியது அடங்கும்.

அப்பம் பிட்கும்படி மாத்திரம் கூடி வந்தார்கள் என்ற *சொல்படியே* நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில் – அப்பம் *பிட்க தான்* கூடி வந்தார்கள் – அப்பத்தை *சாப்பிடுங்கள் என்று சொல்லவில்லையே* என்று நமக்கு அடுத்த கேள்வி வருமே?

அப்பம் பிட்குதல் என்று வரும் சொற்றொடரானது ஒரு உரையின் உருவமாயிருக்கிறது, முழு பதத்தை வெளிபடுத்தும் ஒரு வார்ததை அது. கர்த்தருடைய மேஜை(1கொரி. 10:21), கர்த்தருடைய பந்தி, ஐக்கிய பந்தி(1கொரி. 10:16), இராப்போஜனம்(1கொரி. 11:20), அப்பம் பிட்குதல் (அப். 20:7) என்கிற வார்த்தைக்கு – கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறும்படி அவர் நமக்கு கட்டளையாய் சொன்ன - அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் – இரண்டிலும் பங்கெடுப்பது கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.

மேலும், இந்த அப். 20:7ல் சொல்லப்படும் போஜனம் அனுதினமும் ஜனங்கள் எடுக்கும் போஜனம் அல்ல என்பதை இதனைத் தொடர்ந்து வரும் 11ம் வசனத்தில் அறியலாம். “பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்" என்று.

பிற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் சாப்பிட்டார் என்கிறது வசனம். இது பசியைப் போக்கப் பயன்படுத்தப்படும் வழக்கமான உணவு என்பதைக் அறிகிறோம்.

மேலும், இங்கு பவுல் மட்டுமே சாப்பிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.  அவர் துரோவா நகரில் ஏழு நாட்கள் காத்திருந்தார் என்பதை சூழல் குறிக்கிறது. (அப். 20:5-6) வாரத்தின் எந்த நாளிலும் சாப்பிடக்கூடிய பொதுவான உணவாக இது இருந்தால் ஏன் காத்திருக்க வேண்டும்?

கர்த்தருடைய இராப்போஜனம் என்பது ஒரு சபையால் ஒன்றாகச் செய்யப்படும் ஒன்று (1கொரி. 10:16-17).

எனவே, அப்போஸ்தலர் 20:7 (மற்றும் 2:42) – கர்த்தருடைய பந்தியையும்
அப். 20:11 (மற்றும் 2:46) ஒரு பொதுவான உணவைக் குறிக்கிறது என்றும் நாம் தீர்க்கமான முடிவிற்கு வரமுடிகிறது.

இந்த 'அப்பம் பிட்குதல்' நோக்கத்திற்காக சீஷர்கள் குறிப்பாக ஒன்று கூடினர்.

*நிசான் 14ம் தேதியைக் குறித்த ஒரு பார்வை*
நமது காலண்டரில் எந்த மாதத்தில் எந்த நாளில் ஒவ்வொரு வருடமும் வருகிறது என்று எவருக்கும் தெரியாது.

வருடாவருடம் மார்ச் மாதம் 21ம் தேதிக்கு பின்னர் வரும் முதல் பவுர்ணமிக்கு அடுத்துள்ள ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் என்று நிர்ணயித்து அதனையொட்டி பின்னோக்கியுள்ள வெள்ளிக்கிழமையை Good Friday என்றும் அதற்கு முன்னர் 40 நாளை தபசு நாட்கள் என்றும் இப்படியாக சகல நாட்களையும் குறிப்பார்கள்.

வேதாகமத்தில் தெள்ளத்தெளிவாய் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்க, பவுர்ணமியையும் அமாவாசையையும் அடிப்படையாக வைத்து தேவனை நினைவுக்கூறவேண்டுமோ??

வேதத்தை அறியாத இந்த ஜனம் சபிக்கப்படுமே! யோ. 7:49

நாம் இப்படிப்பட்ட சாபத்திற்கும், கொள்கைக்கும், பிடிவாதத்திற்கும், சுயகற்பனைகளுக்கும், வீம்பு காரியங்களுக்கும் விலகியிருந்து தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாய் கீழ்படிவோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக