#1153 - *தனது எலும்புகளை எகிப்திலிருந்து எடுத்துச்செல்லும்படி யோசேப்பு ஏன் கட்டளையிட்டார்? எங்கு கொண்டு சென்றார்கள்? விளக்கவும்*
*பதில்* : ஆதியாகமம் 50:24-25ம் வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோம் – “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்” என்று.
மேலும் இந்த குறிப்பை புதிய ஏற்பாட்டில் எபிரேயர் 11:22லும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்” என்று.
தேவன் நிச்சயம் தனது ஜனங்களை சந்திப்பார் என்றும் இஸ்ரவேல் புத்திரர்கள் வாக்குறுதியின் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்றும் தனது அசைக்க முடியாத நம்பிக்கையை யோசேப்பு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
இந்த கட்டளையை மோசே நிறைவேற்றினதை யாத். 13:19ல் காணலாம். ”மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்”
அவருடைய எலும்புகளை ஷேகேமில் புதைத்தார்கள் என்று யோசுவா 24:32ல் கூறப்பட்டுள்ளது. “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று”.
முதல் பார்வையில், இது மிகவும் விசித்திரமான ஆசை என்று தோன்றும். மேலும், இந்த கோரிக்கை நிறைவேறும் நேரத்தில், யோசேப்பின் எலும்புகள் தூசியாகும் நிலையிலும் காலம் சென்றிருக்கலாம். சீனாய் தீபகற்பத்தின் வெப்பமான பாலைவனப்பகுதி வழியாக ஒரு நீண்ட பயணத்தில் ஒரு சவப்பெட்டியை எடுத்துச் செல்வது சுமையாகவும் இருக்கும். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையின் முடிவில் அப்படிப்பட்ட நம்பிக்கையும் வலியுறுத்தலும் இருந்தது. அவர் ஏன் இப்படி ஒரு வேண்டுகோள் வைத்தார்?
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கானான் தேசத்தைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்திருந்தார். ஆதி. 12:7
விடாமுயற்சியுடன் வாழ்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள முற்பிதாக்களின் சம்பவங்கள் உள்ளது. ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை விசுவாசத்தில் வாழ்ந்தது மட்டுமல்லாமல், மரணம் வரைக்கும் அவ்விசுவாசத்தில் மரித்தார்கள்.
விசுவாசத்தினால், யோசேப்பு இஸ்ரவேலருக்குத் தன் எலும்புகளைப் பற்றிய வழிகாட்டுதலைக் கொடுத்தார் என்று எபி. 11:22ல் வாசிக்கிறோம். தேவன், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற ஊர்ஜிதமான நம்பிக்கையை இது நமக்கு வெளிப்படுத்துகிறது.
எகிப்துதான் அவர்களுடைய புதிய நிரந்தர வீடு என்று இஸ்ரவேலர்களிடம் சொல்வது யோசேப்பிற்கு எளிதாக இருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எகிப்திய சாம்ராஜ்யத்தில் பெரும் முக்கியத்துவத்திற்கும் செல்வத்திற்கும் உயர்ந்தார். தனது நிலையில் பாதுகாப்பாக, அவர் தனது சகோதரர்களை தங்கும்படி அறிவுறுத்தியிருக்கலாம்.
இருப்பினும், இஸ்ரவேலர்களை எகிப்தில் தங்குவதற்கு ஊக்குவிப்பது தேவனது வாக்குறுதிகளில் அவநம்பிக்கையைக் காட்டியிருக்கும். எகிப்து யோசேப்பை அப்போது ஆசீர்வதித்திருந்தாலும், அவற்றை தேவனுடைய ஆசீர்வாதத்துடன் ஒப்பிட முடியாது.
செல்வமும் சுகமும் அந்தஸ்தும் இருந்தபோதிலும், இவையெல்லாம் தேவனுடைய வாக்குத்தத்தின்படியானதல்ல என்பதை அவர் அறிந்திருந்தார். தேவனுடைய வாக்குத்தத்தமானது இன்னும் சிறந்தது என்பதை அவர் நம்பினார்.
வேதத்தின்படி தவறு என்றறிந்தும், இக்கால சுகவாழ்க்கை, திருப்தியான சூழல், பாதுகாப்பான இடம், சந்தோஷமான சூழ்நிலை என்று அங்கேயே அப்படியே இருந்துவிடாமல்; நான் மீண்டும் வருவேன், வந்து உங்களை பரலோகம் அழைத்து செல்வேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த கட்டளையை நாம் நினைவில் வைக்கவேண்டும். (யோ. 14:3, அப். 1:11)
அவரது வருகையின்போது; மரித்தோரும் அந்த க்ஷனம் வரைக்கும் உயிரோடிருந்தவர்களுக்கும் புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு நமது வாழ்நாளின் செய்கைக்காக நாம் வசனத்தின்படி நியாயந்தீர்க்கப்பட்டு அவரவர் செய்கையின்படியே பரலோகமும் நரகமும் தரப்படும் என்ற வாக்குறுதியை நாம் மறந்து போகாமல் சத்தியத்திற்குள் நடக்கவேணடியது அவசியம். அந்த வாக்குறுதியை கொடுத்தது மனிதனல்ல… தேவன் அதை சொல்லியிருக்கிறார் !!
அது நிச்சயம் நடக்கும். தேவ பயத்துடன் வாழ்ந்து நாம் அவருக்குள் செழிக்கவேண்டியது இந்த சம்பவத்தால் உணர்த்தப்படுகிறோம்.
யோசேப்பின் இந்த கட்டளையால் நாம் புரிந்து கொள்வதாவது - வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அடக்கம் செய்வதற்கான இந்த நம்பிக்கை, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை முன்னறிவித்தது. இதை வேதம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. தேவன் உயிருள்ளவர்களுக்கு ஆண்டவர் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார் (மாற்கு 12:27).
தேவனுடன் வாழ்வதற்கான ஒரே வழி அவருடைய வாக்கின்படி வசிப்பதே என்பதை அவர் அறிந்திருந்தார்.
யோசேப்பின் எலும்புகள் நம் வாழ்வுக்கான தேவனுடைய வாக்குறுதிகளின் அடையாளமாகும். இடைவிடாத சிரமங்களினால் நமது ஆத்துமா உடைந்து போகும் போதும், வெளியேற வழியில்லாமல் ஒரு சாத்தியமற்ற சூழ்நிலையில் சிக்கிக்கொண்டது போல் உணரும்போதும், வறண்ட மற்றும் தரிசு வனாந்தரத்தில் இலக்கின்றி அலைந்து திரியும் போதும் இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தேவனுக்கு உகந்தவர்களாக நாம் வாழ்ந்தால் நிச்சயம் அவருடைய வருகையில் நாமும் அவருடன் பரலோகம் செல்வோம்..
எச்சூழ்நிலையிலும் நமது வாழ்க்கையில் தேவனுடைய வாக்குறுதிகளைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம். அவருடைய சரியான நேரத்தில் அவை ஒவ்வொன்றும் சிறந்த முறையில் நிறைவேற்றப்படும் என்பதை அறிவோம். ஏனென்றால் தேவன் உண்மையுள்ளவர். 2தீமோ. 2:13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக