வெள்ளி, 2 செப்டம்பர், 2022

#1151 - தேவனுக்கு பயப்படும் பயம் என்பது என்ன?

#1151 - *தேவனுக்கு பயப்படும் பயம் என்பது என்ன?*

*பதில்* : வேதத்தின்படி இருவகையில் பயத்தை வகையறுக்கலாம்.  

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிர. 12:13) என்று ஒருபுறம் சொல்லப்பட்டிருக்க; மத்தேயு 10:28ல் “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.

ஆகவே, இரண்டு வகையான பயங்கள் உள்ளதை கவனிக்கவேண்டும்.

ஒன்று, சூழ்நிலைகளைப் பொறுத்து நல்லது அல்லது கெட்டது என்பதையறிந்து மரியாதையுடன் கூடிய நடுக்கத்துடனான பயம். மற்றொன்று கோழைத்தனத்தை குறிப்பதாகும். இந்த இரண்டாவதை வேதம் எப்போதும் கண்டிக்கிறது.

தேவனுக்கு பயப்படுவது கிறிஸ்தவர்களுக்கு அவசியமான பிரதான கடமை.

இந்தக் கட்டளையை தவறாகவோ அல்லது குறைத்தோ மதிப்பிட்டுவிடக்கூடாது.

*வேதத்தில் பயத்தைக் குறித்ததான எடுத்துக்காட்டுகள்*:
1- ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு தேவனுக்குப் பயந்தார்கள். ஆதி. 3:10

2- அனனியா மற்றும் சப்பீராளின் செயல்கள் சபைக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அப். 5:1-11

3- மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 1தீமோ. 5:19

4- வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பயத்தைக் குறித்து அதிகம் காணப்படுகிறது. வெளி. 11:15-18

5- சபை துவங்கிய நாளான பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு பின்னர் ஒவ்வொருவரின் இருதயத்திலும் பயம் இருந்தது. அப். 2:42-43

*பயம் இல்லாத இடம்*

1- தேவனுக்கு பயப்படாதவர்கள் நீதியை விட்டு தவறான வாழ்க்கை வாழ்கிறார்கள். ரோமர் 3:9-18

2- தெய்வபக்தியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் தீய தவறான செய்கைகளை விட்டு விலகாமல், தவறு என்று அறிந்தாலும் தொடர்ந்தேச்சையாய் செய்வார்கள். 2தீமோ. 3:1-5

*முறையான பயம் இருப்பதால் என்ன நன்மை?*
பயம் இருந்தால், தீமையை விட்டு விலக சொல்லும். பயம் இல்லையேல் துணிகரம் கூடுதலாகி அதிக தவறு இளைப்பார்கள். நீதி. 16:6

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. சங்கீதம் 19:9

தேவ பயம் பரிசுத்தத்திற்கு வழிவகுக்கும். 2கொரி. 7:1

நீதியின் பாதையிலிருந்து விழுந்து போனவர்களை திரும்பக் கொண்டுவருவதற்கு தெய்வ பயம் ஒரு தூண்டுதலாகும். 2கொரி. 5:10-11

தேவன் மீது அதிக பயம் இருந்தால், நாம் மென்மேலும் இரட்சிக்கப்பட்டிருப்போம். பிலி. 2:12

*செய்யவேண்டியது*
தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும். பிர. 12:13-14

பயத்தோடும் நடுக்கத்துடனும் கர்த்தருக்கு ஊழியம் செய்வோம். சங். 2:11

அன்பான தேவனிடம் ஏன் பயப்பட வேண்டும் என்று சிலர் கேட்பதுண்டு.
"அச்சம் (பயம்)" என்ற வார்த்தைக்கு பதிலாக "மரியாதை" மற்றும் "பயபக்தி" என்ற வார்த்தைகளை அறியவேண்டும்.

பயம் நமது ஒரு தூண்டுகோல் என்பதையறிய வேண்டும்.

பயம் இருந்தால் கவனமாக இருப்போம். பயம் இருந்தால் சட்டத்திற்கு கீழ்படிவோம். தவறுகளில் அகப்பட்டு அவமானப்பட்டு அல்லது காவல்காரர்களின் தண்டனைக்கும் அடி உதைக்கும் அகப்படாமல் தப்பிக்க முயல்வோம். வலி மற்றும் மரணம் பற்றிய நமது பயம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

வேதமும் பயத்தை அதே முறையில் பயன்படுத்துகிறது.

ஒரு நொடிபொழுது தீயில் நமது விரல் பட்டால் ஐயோ சுடுகிதே, எரிகிறதே என்று சட்டென ஒதுங்கிக் கொள்ளும் புத்தியானது; தேவனுடைய வார்த்தைக்கு மீறி, உண்மையான தேவனை விட்டு விக்கிரகத்தையும் படத்தையும் சிலைகளையும் இறந்தவர்களையும் தெய்வமாக வணங்கினால் அல்லது தேவனுடைய வார்த்தைக்கு செவிசாய்க்காமல் சுய கற்பனையில் கிறிஸ்தவம் என்று நினைத்து சொந்த கருத்துக்களில் பரிசுத்த வாழ்வு என்று நினைத்து காலத்தைப் போக்கினால் சதா எக்காலத்திலும் தகதகவென தீ பிளம்பாக எரியும் நரகத்திற்குள் தள்ளப்படுவோமே என்று நினைப்பதில்லை. அதற்கு காரணம் பயமின்மை!! சங். 9:17

மனிதர்களுடைய வார்த்தைக்கு அல்ல, தேவ வார்த்தைக்கு அப்படியே கீழ்படிவோம். கோழைத்தனம் அல்ல… தேவனுக்கு பயந்து நடப்போம். பரலோகத்தைச் சுதந்தரிப்போம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக