வியாழன், 14 ஜூலை, 2022

#1147 - மருத்துவ ரீதியாக பெண்களுக்கு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்தால் உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படுகிறதா?

#1147 - *லேவியராகமம்: 12: 1-8ன்படி மருத்துவ ரீதியாக பெண்களுக்கு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்தால் உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படுகிறதா?* ஆண் குழந்தை என்றால் 40 நாட்கள் மற்றும் பெண் குழந்தை என்றால் 80 நாட்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே? இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

*பதில்* : ஆண் அல்லது பெண் குழந்தையை பெறுவதால் எந்த வித்தியாசமும் தாய்க்கு சரீர ரீதியாக ஏற்படுவதில்லை.

அப்படியென்றால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தால் 40 (42) என்றும் பெண் பிள்ளையை பெற்றெடுத்தால் 80 நாட்கள் என்றும் ஏன் நியாயபிரமாணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறியவேண்டும்.

ஒவ்வொரு மாதமும், ஒரு பெண்ணின் உடல் மாதவிடாய் சுழற்சி எனப்படும் மாற்றங்களின் சுழற்சியை கடந்து செல்கிறது. சுழற்சியானது வாலிப வயது என்று சொல்லப்படும் டீனேஜ் ஆண்டுகளில் தொடங்கி ஒரு பெண் சுமார் ஐம்பது வயது வரை தொடர்கிறது.

மாதவிடாய் சுழற்சியின் நாட்களின் எண்ணிக்கை பருவத்தைப் பொருத்து மாறுபடுகிறது.

பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின்படி, மாதவிடாய் காலத்தில் இஸ்ரவேலர்கள் அசுத்தமாக கருதப்பட்டனர்.

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் துவங்கிய நாள் துவங்கி ஏழு நாட்களுக்கு மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள வேண்டியிருந்தது (லேவி. 15:19-25). அவள் உட்காரும் அல்லது படுத்திருக்கும் அனைத்தும் அசுத்தமானதாகக் கருதப்பட்டன. மேலும் அப்பொருட்களை தொடும் எவரும் மாலை வரை அசுத்தமாக இருப்பார்கள். மாதவிடாய் காலத்தில் அவளது கணவன் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால், அவனும் ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான் (லேவி. 15:24; 18:19; 20:18).

இவ்வகையான அசுத்தத்தைக் குறித்ததான சட்டங்கள் இஸ்ரவேலர்களுக்கு “உடல் உதாரணங்களின் மூலம்” *பாவத்தின் தன்மையைக் கற்பித்தன*.

சட்டங்களை மீறுவது பாவம் என்பது மாத்திரமல்ல, அசுத்தம் என்று அறிவிக்கப்பட்ட பெரும்பாலான எந்த நிகழ்வுகளும் தங்களுள் பாவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அறிவது அவசியம்.

உதாரணமாக, பன்றிகள் பாவம் அல்ல. ஆனால் மோசேயின் சட்டத்தின் கீழ் பன்றி இறைச்சியை உண்பது அசுத்தமாக கருதப்பட்டது.  பன்றி இறைச்சி பழைய ஏற்பாட்டின் கீழ் பாவமாக இருந்தது. பன்றியின் மாம்சத்தை தொடவுங் கூடாது என்ற கட்டளை நியாயபிரமானத்தில் உள்ளது. உபா. 14:8; லேவி. 11:7. அசுத்தமானதை (தவிர்க்கப்பட்டதை) உண்பது பாவமாகும்.

எவற்றையெல்லாம் (பெரும்பாலானவைகளில்) தேவன் அசுத்தமாகத் தேர்ந்தெடுத்த விஷயங்களை கவனித்தால், இன்று நாம் பொது அறிவு சுகாதார விதிமுறைகளாக கவனிக்கும் பட்சத்தில் குறிப்பாக நோய்களின் முழு தன்மையையும் அவற்றின் பரவலையும் புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, எதை சாப்பிட வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லாத மிருகம் பன்றி. பன்றிகள் தனக்கு முன் வைக்கப்படும் *எதையும்* சாப்பிடும்.

தென் தமிழகத்தில் கறுப்பு நிற பன்றிகள் தங்கள் ஆகாரத்தை தேடும்படி அவைகள் மேயும் இடங்களை கண்டாலே அதனுடைய தன்மையை நாம் உணரமுடியும். பெரும்பாலும் நரகலையும் சாக்கடைகளில் ஓடும் சகலவிதத்தையும் பிரியமுடன் உட்கொள்ளும் வகை இந்த பன்றிகள்.

இறைச்சிக்கென்று தனியாக வளர்க்கப்படும் பன்றிகளும் பிரத்யேகமாக உள்ளது.

*நியாயபிரமான காலத்தில்* அருவருப்பானவற்றை தேவன் குறிப்பிடும் போது பன்றி இறைச்சியையும் சேர்த்து சொல்வதை கவனிக்கவும். ஏசா  65:4; 66:17; 66:3

எனவே, தேவனுடைய *அவ்வகை சட்டங்களின் முதன்மை நோக்கம் பாவத்தின் தன்மையைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதாக இருந்தபோதிலும், இதே சட்டங்கள் இஸ்ரவேல் தேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இரண்டாம் நிலை விளைவைக் கொண்டிருந்தன*.

இஸ்ரவேல் கற்றுக்கொண்டது என்னவெனில், தேவ வார்த்தைக்கு மீறி செயல்படும் எந்த பாவத்திற்கும் பலன் உண்டு என்பதே.

பன்றி இறைச்சியை உண்பது  எவ்வாறு விளைவுகள் ஏற்படுகிறதோ அதுபோலவே, ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாய் அல்லது ஒரு ஆண் இரவு நேரத்தில் விந்துவை வெளியிடுவது போன்ற சுய விருப்பமில்லாத இயற்கை நிகழ்வுகளிலிருந்து வந்தவை (லேவி. 15:13).

ஒவ்வொருவரும் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கற்பித்த மற்றொரு பாடம் என்னவென்றால், பாவமும் அதன் விளைவுகளும் நேரடியாக *பாவத்தில் ஈடுபடாதவர்களுக்கும் பரவுகின்றன*.

ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் அசுத்தமாக இருக்க நேர்வதால், தேவன் பெண்களுக்கு அநீதி இழைத்தார் என்பர் சிலர். மேலும், ஒருவள் பெண் குழந்தையை பெற்றெடுப்பதால் தேவன் வித்தியாசத்தைக் காண்பிக்கிறார் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள் (லேவி. 12:1-5).

இவ்வகை மனிதர்கள்,  நியாயபிரமாணத்தின்படி கவனிக்காத விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனுக்கு விந்து  ஒரு மாதத்தில் பலமுறை நிகழலாம். அதனிமித்தம் அவன், பெண்களை விட ஒரு மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேல் அசுத்தமானவனாக கருதப்படுகிறானே!

இக்காலங்களில் நாம் கொண்டிருக்கும் வசதியைப் போன்று பண்டைய நாட்களில் இருந்ததில்லை. குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் பயன்படும் சானிடரி நேப்கின்கள் (Sanitary Napkins) பண்டைய மக்களிடம் இல்லாததால், மாதவிடாய் வந்த எந்த ஒரு பெண் உட்காரும் அல்லது எந்த இடத்திலும் அவளது இரத்தம் படுகிறது. அத்தகைய இரத்தம் படிந்த இடங்கள் கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது.

நியாயபிரமாண விதிமுறைகளைக் கூர்ந்து கவனித்தால் அசுத்தத்தின் ஒவ்வொரு காலகட்டமும் அசுத்தமான பொருட்களையும் நபரையும் *கழுவுவதன் மூலம் முடிவடைவதை* கவனிக்கலாம்.

அசுத்தத்தைக் குறித்ததான சட்டங்கள், இஸ்ரவேலர்களை அடிக்கடி குளிப்பதற்கும், பொருட்களை தவறாமல் சுத்தம் செய்வதற்கும் தூண்டியது.

தனிமைப்படுத்தல், நோய் அபாயம் அதிகமாக இருந்த காலங்களில், நோய் பரவுவதைக் குறைத்தது. ஆகவே, பொது மக்களை விட இஸ்ரவேலர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது.

இப்படிப்பட்டதான அசுத்தத்தைக் குறித்த சட்டங்கள் பழைய ஏற்பாட்டின் எஞ்சியவற்றுடன் மறைந்தன (கொலோசெயர் 2:13-17).

நாம் இப்போது புதிய ஏற்பாட்டு காலத்தில் இருப்பினும், நோய்களைக் குறைக்க தூய்மை பற்றிய கருத்துக்கள் இன்றும் அர்த்தமுள்ளதாகவே இருக்கின்றன.

இப்போது கேள்விக்கு திரும்பலாம்.  
ஒரு தாயின் அசுத்தத்தின் காலம் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தை பிறக்கும் போது இருமடங்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம், அந்த அசுத்தமானது குழந்தைக்கும் தாய்க்கும் பொருந்தியதாகத் தோன்றும். ஆகவே பெண் குழந்தையை பெற்றெடுக்கும் போது சுத்திகரிப்பு இரட்டிப்பாகிறது.

ஆதாமை விட ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள் (1தீமோ. 2:13-15; 1பேதுரு 3:7) என்பதால் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கும்போது இவ்வகை தனிமை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை சிலர் முன்வைத்தாலும் நான் மேலே கூறிய காரணங்கள் ஒவ்வுகிறது என்று நம்புகிறேன்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக